இந்திய தேசிய ஜனநாயக காங்கிரசு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய தேசிய ஜனநாயக காங்கிரசு (Indian National Democratic Congress) என்பது அன்றைய சென்னை மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினை விட்டு வெளியேறிய அதிருப்தியாளர்களின் குழுவால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பாகும். தமிழ்நாட்டில் காங்கிரசு தலைமை குறித்த கட்சி உள் மோதல்களில் காமராசரால் தோற்கடிக்கப்பட்ட சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் காங்கிரசு சீர்திருத்தக் குழு தோன்றியது. 1957ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவை, சென்னை மாநில சட்டப்பேரவைக்கும் நடைபெற்ற தேர்தல்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு உருவாக்கப்பட்டது.

இக்குழு முத்துராமலிங்கத் தேவரின் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது. இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து 59 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 54 இடங்களில் காங்கிரசு சீர்திருத்தக் குழுவும் 5 இடங்களில் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கும் போட்டியிட்டன. மூக்கையாத் தேவர் காங்கிரசு சீர்திருத்தக் குழுவின் சார்பில் போட்டியிட்டார். இந்தியப் பொதுவுடமைக் கட்சி முறைசாரா புரிந்துணர்வுடன் செயல்பட்டு, காங்கிரசு சீர்திருத்தக் குழுவிற்கு எதிராகப் போட்டியிடவில்லை.

இக்கூட்டணி 12 அம்ச தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்தத் தேர்தல்களில் இக்கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. ஆனால் காங்கிரசு அரசாங்கத்தை தோற்கடிக்க முடியவில்லை. காங்கிரசு சீர்திருத்தக் கட்சி 14 இடங்களையும், அபாபி மூன்று இடங்களையும் வென்றன. வென்ற இடங்களில் பாதி இராமநாதபுரம், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவை.

தேர்தலைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் ஒரு கூட்டு எதிர்க்கட்சி குழு உருவாக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க 16 இடங்களைக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் முயற்சியை எதிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. சிறிது காலத்தில் சுயேட்சையாக சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்தவர்கள் காங்கிரசு சீர்திருத்தக் குழுவில் சேர்ந்தனர். எதிர்க்கட்சித் தலைவராக வி. கே. இராமசாமி முதலியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1957 செப்டம்பரில் காங்கிரசு சீர்திருத்த குழு, மாநில மாநாடு ஒன்றினை நடத்தி, இந்திய தேசிய ஜனநாயக காங்கிரசு என்று தனது பெயரை மறுசீரமைத்தது. நிகழ்ச்சியின் தொடக்க பேச்சாளர்களில் ஒருவரான முத்துரலிங்கம் தேவர் தனது உரையை நிகழ்த்திய உடனேயே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1959 மார்ச் மாதம் மதுரை நகராட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்திய தேசிய ஜனநாயக காங்கிரசு, அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு, இந்திய பொதுவுடமைக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் கூட்டணி உருவாக்கப்பட்டது. பார்வார்டு பிளாக்கு உறுப்பினர்கள் இந்திய தேசிய ஜனநாயக காங்கிரசு வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். அந்த கட்சியின் தமிழ்நாடு மாநில பிரிவு கிட்டத்தட்ட இந்திய தேசிய ஜனநாயக காங்கிரசு இணைந்திருப்பதைக் குறிக்கிறது. 12 இந்திய தேசிய ஜனநாயக காங்கிரசு வேட்பாளர்களும், 12 இந்திய பொதுவுடமை வேட்பாளர்களும், 2 திமுக வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு நகராட்சி மீதான தனது பிடியை காங்கிரசு இழந்தது இதுவே முதல் முறையாகும். இக்கூட்டணியின் மூன்று வேட்பாளர்கள் மட்டுமே தோல்வியடைந்தனர்.

1959 சூலையில் இந்திய தேசிய ஜனநாயக காங்கிரசு சுதந்திராக் கட்சியுடன் இணைந்தது. இடது-வலது அளவில் கிட்டத்தட்ட எதிர் நிலைப்பாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், பார்வார்டு பிளாக் மற்றும் சுதந்திராக் கட்சி இடையேயான ஒத்துழைப்பு மாநிலத்தில் தொடர்ந்தது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் பார்வார்டு பிளாக்கு உறுப்பினர்கள் சுதந்திராக் கட்சியின் குழுவில் அமர்ந்தனர். இந்த குழுவிற்கு பார்வார்டு பிளாக்கு கட்சித் தலைவர் பி. கே. மூக்கியா தேவர் தலைமை தாங்கினார்.[1]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads