இந்திய மாநில ஆளுநர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவின் மாநிலங்களில் ஆளுநர்களும், இந்தியாவின் ஆட்சிப்பகுதிகளில் துணை ஆளுநர்களும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்றுப் பணியாற்றுகின்றனர். ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.[1][2][3]
வரலாறு
இந்தியத் தலைமை ஆளுநர் அல்லது வைசிராய் என்பவர் 1858 முதல் 1947 வரை இந்தியாவில் பிரித்தானிய நிருவாகத்தின் சார்பாளராகவும் அரசுத் தலைவராகவும் செயல்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசரின் சார்பாளராகவும் பணிவழிப்படி நாட்டுத் தலைவராகவும் விளங்கினார். இப்பதவி 1773-இல் கொல்கத்தாவிலிருந்த வில்லியம் கோட்டையின் பிரித்தானிய மாநிலத்தின் தலைமை ஆளுநராக உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் வில்லியம் கோட்டைக்கு மட்டுமே ஆட்சியுரிமை பெற்ற தலைமை ஆளுநர் பின்னர் மற்ற கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றார். அனைத்து பிரித்தானிய இந்தியாவிற்குமான முழுமையான அதிகாரம் 1833-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பின்னர் இந்தியத் தலைமை ஆளுநர் என அறியப்பட்டார்.
இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், நடுவணரசில் இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநிலவளவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார். இந்த விதி, ஒரே ஒரு நபர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக இருக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்தாது. பொதுவாக, நடுவண் அரசு எடுக்கும் முடிவின் படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் அரசுத் தலைவர் ஆவார். ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார். அவர் இல்லாதபோது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார்.
Remove ads
ஆளுநர்கள்
ஆளுநருக்கு உதவ, மாநில அளவில், ஒரு முதல் அமைச்சர் அல்லது முதல்வர், தன் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையுடன் செயல்படுகிறார்.
ஆளுநரின் பதவிகள் மாநில அளவில் சம்பிரதாயப் பதவிகளாகவே கருதப்படுகின்றது. ஆட்சியில் ஆளுநரோ துணை ஆளுநரோ பங்கெடுப்பதில்லை மாறாக இவை அம்மாநில முதலைமச்சர் மற்றும் அவரது அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்களிடமே அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநருக்கான தகுதிகள்
- இந்தியாவின் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- 35 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்
- மாநில சட்ட மன்றத்திலோ, நாட்டின் பாராளுமன்றத்திலோ உறுப்பினராக இருத்தல் கூடாது.
- வேறு எந்த அரசு பொறுப்பிலும் இருக்க கூடாது.
ஆளுநரின் முக்கிய பொறுப்புகள்
- பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இருக்கும் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது.
- முதலமைச்சரின் பரிந்துரையின்படி மற்ற அமைச்சர்களை நியமிப்பது.
- அந்தந்த மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்|மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரை நியமிப்பது.
- மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிப்பது
- சட்டசபை கூட்டத்தொடரை கூட்டுவது மற்றும் ஒத்திவைப்பது
- சட்டசபையை கலைப்பது (இது மரபுசார்ந்த ஒரு அதிகாரமேயன்றி, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் ஆலோசனையின்றி ஆளுநர் தன்னிச்சையாக இம்முடிவை எடுக்கமுடியாது.)
- மாநில அரசு கொண்டுவரும் எந்தவொரு சட்டமுன்வரைவும் (அ) சட்ட மசோதாவும், ஆளுநரின் ஒப்புதலுக்குப்பிறகே சட்டமாகும். இதுவும்கூட ஒரு மரபுசார்ந்த அதிகாரமே, ஆளுநர் பணமசோதாவைத்தவிர வேறெந்த சட்ட மசோதாவையும் சட்டசபையின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பலாம். ஆனாலும், சட்டசபை மீண்டும் அந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினால், இரண்டாவது முறை ஆளுநர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். ஆனாலும், ஆளுநர் தன் விருப்புரிமையின் அடிப்படையில் ஒரு மசோதாக்களுக்கான தன்னுடைய ஒப்புதலை வழங்காமல், அம்மசோதாவை நாட்டின் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.
- எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், தன் விருப்புரிமையின் அடிப்படையில் மாநில முதலமைச்சரை தேர்ந்தெடுக்கலாம்
- ஆளுநர் அவசரகாலத்தில் மாநில அமைச்சர்கள், முதலமைச்சரின் அறிவுரைகளை மீறி முடிவெடுக்கலாம். அவசரகாலத்தில் ஆளுநரே அம்மாநிலத்தை ஆளும் பொறுப்பை வகிப்பார். மேலும் அவர் குடியரசுத்தலைவரின் உத்தரவை மாநிலத்தில் செயற்படுத்தும் ஒரு முகவர் போல அக்காலங்களில் செயல்படுவார்.
- ஆளுநரே அம்மாநிலத்திலுள்ள எல்லா மாநில பல்கலைகழகங்களுக்கும் வேந்தர்(Chancellor) ஆவார்.
Remove ads
துணை நிலை ஆளுநர்கள்
இந்திய அரசின் ஆட்சிப் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் துணை நிலை ஆளுநர்கள் பதவி வகிக்கின்றனர். துணை ஆளுநர்கள் மாநில ஆளுநர்களைப் போன்ற படிநிலையைக் கொண்டவர்கள்.
ஆட்சிப் பொறுப்பாளர்கள்
இந்தியாவிலுள்ள ஆட்சிப் பிரதேசங்களில் தில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் மற்றும் புதுவை தவிர பிற இடங்களில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் ஆட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகின்றார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads