இந்தி இலக்கியம்
இந்தி மொழியின் இலக்கிய வரலாறு From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தி இலக்கியம் (Hindi literature) என்பது, இந்தி மொழியில் எழுதப்பட்ட, அதன் இலக்கியக் கூறுகளான கவிதை, கதை, கட்டுரை போன்ற படைப்பாக்கங்கள் குறித்தும், அதன் வரலாறு குறித்தும் விவரிக்கிறது. இந்தியாவில் இசுலாமியப் படையெடுப்பிற்குப் பின், இந்தி இலக்கியம் தோன்றியது எனலாம். அக்காலத்தில் பெரு மாறுதல் அடைந்து, இந்தி மொழியாக வளர்ந்தன. வடமொழியின் இரு திசைமொழிகளாக (Dialects) இருந்த பாலியும், அர்த்தமாகதியும்[1][2] மேலும், சமஸ்கிருதத்தினை உள்வாங்கியும், இந்தி மொழி வளர்ந்து, பலவித மாறுபாடுகளுக்கு உட்பட்டது என்பர். இந்தி இலக்கியத்தின் வரலாற்றை, நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை 1. வீரக்கதைக் காலம் (वीरगाथा काल), 2. பக்திக் காலம் (भक्ति काल ), 3.இறுதிக்காலம்.4) புதிய காலம்
Remove ads
வீரக்கதைக் காலம்
வீரக்கதைக் கால இலக்கியங்கள், மன்னர்களின் புகழ்ச்சியை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்ட காலம் இதுவாகும். கி.பி. 950 லிருந்து கி.பி. 1400 வரையிலான காலகட்டமே, இக்காலம் எனவும் கருதுவர். பெரும்பான்மையான வரலாற்று ஆசிரியர்கள், வீரக்கதைக் காலம் என்பது கி.பி. 993 முதல் 1318 வரை உள்ள காலம் என்பர். கஜினி சுல்தான்களின் படையெடுப்பு, அக்காலத்தில் நிகழ்ந்தது. பிரிவினை அதிகமிருந்த அக்காலத்தில், ஒவ்வொரு சிற்றரசனுடைய அரசக் கவிஞனும், அவனைப் புகழ்ந்தும், மற்றோரை இகழ்ந்தும் பாடி, அப்பிரிவினை உணர்ச்சியை வளர்த்தான். வெளிநாட்டினர் படையெடுப்பை எதிர்த்து நின்ற, பிருதிவிராஜனது[3] அருஞ்செயல்களால் ஒருமை உணர்ச்சி தோன்றியது. இவனைப் புகழ்ந்து சந்தவரதாயி முதலிய புலவர்கள் கதைப்பாட்டுக்கள் பாடி, இந்தி இலக்கியம் வளர உதவினர். நாட்டின் பெருமையையும், இந்து மதத்தின் உயர்வையும், இவற்றைக் காக்க முன்வந்த அரசர்களின் பெருமையையும் இப்பாட்டுக்கள் பொருளாகக்கொண்டன. பல திசை மொழிகளிலும் முதன் முதல் உருவாகிய இலக்கியம் ஆகும். இதன்பின்னர், இராமாயணத்தை மாதிரியாகக் கொண்ட காவியங்கள் இயற்றப்பட்டன. இவற்றுள் சந்தவரதாயி இயற்றிய 'பிருதிவிராஜ ராசோ', பட்டகேதார் இயற்றிய 'ஜயசந்திர பிரகாசம்', ஜகனிகர் இயற்றிய 'அல்ஹா' ஆகியவை முக்கியமானவையாகக் கருதப்படுகிறது.
Remove ads
பக்திக் காலம்
பக்திக் காலம் என்பது கி.பி. 1318ஆம் ஆண்டு முதல் 1643 ஆம் ஆண்டுவரை எனலாம். துருக்கிச் சுல்தான்களைப் போலன்றி, மொகலாயர்கள் நாட்டை வென்று, இங்கேயே நிலையாக வசிக்கத் தொடங்கினார்கள். இவர்களது ஆட்சியில் நாட்டில் அமைதியும், திறமையான நிருவாகமும் ஏற்பட்டன. அக்காலத்தில் வாழ்ந்த சங்கரர், இராமானுசர், மத்துவர் ஆகிய ஆசாரியர்களின் கருத்துக்களும், ஒருவகைச் சித்த மதமும், நாத சம்பந்தம் என்ற மதமும் நாட்டில் நிலவின. இசுலாம் சமயமும், இங்குப் பரவத் தொடங்கியது. பலவேறு சமயக் கருத்துகளில், ஒருமை காணும் முயற்சியைக் கபீர் மேற்கொண்டார். இவரைப் பின்பற்றிப் பாமர மக்களுக்கும் விளங்கும் வகையில் உள்ள கருத்துக்களைக் கொண்ட சர்வமத சம்மதமான சமயத்தைத் தோற்றுவிக்க முயற்சி நடைபெற்றது. இதன் விளைவாகச் சகுணம், நிர்க்குணம் என்னும் இரு சமயப்பிரிவுகள் தோன்றின. இப்பிரிவுகளுக்கேற்றவாறு, இக்காலத்திய இலக்கியத்தையும், இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
சகுணப் பிரிவில் இரு பக்தி மார்க்கங்கள் தோன்றி வளர்ந்தன. இவற்றுள் முதலாவதான இராமபக்திக்குத் துளசிதாசரும், இரண்டாவதான கிருஷ்ண பக்திக்கு வல்லபாசாரியரும் காரணமாவர். கிருஷ்ண பக்தி மார்க்கப் புலவருள் புகழ்பெற்றவர் சூர்தாசர். இவர் ஓர் இலட்சம் பாக்களை இயற்றினார் எனக் கூறப்படுகிறது. அவற்றுள் 40,000 பாக்கள், சூரசாகரம் என்ற நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன. துளசிதாசரையும் சூர்தாசரையும் தவிரச் சுமார் நூறு கவிஞர்கள் பக்திமார்க்கப் பாடல்களைப் பாடினார்கள். தத்துவமும், இலக்கியமும் ஒன்றாக இணைந்ததே, பக்திக் காலத்தின் சிறப்பாகும்.
Remove ads
இரீதிக் காலம்
இரீதிக் காலம் என்பது கி.பி. 1643ஆம் ஆண்டு முதல் 1843 ஆம் ஆண்டுவரை எனலாம். இக்காலத்தில் அலங்காரம், ரசம் போன்ற துறைகளில் பல வடமொழி நூல்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. சொந்தக் கற்பனையான நூல்கள், இக்காலத்தில் அவ்வளவாகத் தோன்றவில்லை. கேசவதாசர், பிகாரிலால், மதிராம், பூஷணர், தேவர், அலி முகீப்கான், மகாராஜா ஜஸ்வந்த் சிங் ஆகியோர், இக்காலத்து இலக்கியவாதிகள் ஆவர்.
புதிய காலம்
புதிய காலம் என்பது கி.பி. 1843 ஆம் ஆண்டுக்குப் பின் எனலாம். இந்தியக் கிளர்ச்சிக்குப்பின் நிகழ்ந்த அரசியல், சமூக மாறுதல்களால் பழங்காலத் தத்துவ நூற் கருத்துக்கள் மறைந்தொழிந்தன. இதுவரை இங்கு இல்லாத சடக்கொள்கை உருப்பெற்றது. கிறித்தவப் பாதிரிகள் நிகழ்த்திய மத மாற்றத்தால், இந்துக்கள் விழிப்படைந்தனர். சுவாமி தயானந்தர் ஆரிய சமாஜத்தை[4] நிறுவினார். இவரும் பாரதேந்து என்ற அறிஞரும் இந்தி மொழிக்குப் புத்துயிர் அளித்தனர். வடமொழி நாடகங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. ஆங்கிலேயரின் ஆதரவில் பள்ளிப்புத்தகங்கள் எழுதப்பெற்றன. ஆங்கிலம், வங்காள மொழி, பாரசீகம் போன்ற மொழிகளிலிருந்து நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. ஆசார்ய பிரசாத துவிவேதி என்பவர் இலக்கியச் சுவையை வளர்த்ததோடு, அறிவியல் துறைகளிலும், திறனாய்வுக் கட்டுரை முதலிய இலக்கியத் துறைகளிலும், நூல்கள் தோன்ற வழி காட்டினார். இராஜா ராம் மோகன் ராயின் கருத்துக்களும், படைப்புகளும்,[5] தற்கால இந்தி இலக்கியத்தின் வளர்ச்சியைச் சிறப்பான வகையில் பாதித்துள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads