இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம் (Constitution of Indonesia, Indonesian: Undang-Undang Dasar Negara Republik Indonesia Tahun 1945, UUD '45) இந்தோனேசியாவின் அரசாண்மைக்கான அடிப்படை ஆவணம் ஆகும். இரண்டாம் உலகப் போர் முடிவில் சப்பானியர்களின் கட்டுப்பாட்டிலிருந்து இந்தோனேசியா வெளிவந்த காலத்தில், 1945ஆம் ஆண்டு சூன்,சூலை, ஆகத்து மாதங்களில் எழுதப்பட்டது. இது 1949இல் கூட்டரசு அரசியலமைப்பாலும் 1950இல் தற்காலிக அரசமைப்புச் சட்டத்தாலும் செல்லத்தகாததாக்கப்பட்டாலும் குடியரசுத் தலைவர் சுகர்ணோவின் அறிவிக்கையால் சூலை, 5, 1959இல் மீண்டும் செயற்பாட்டிற்கு வந்தது.
இது சுகர்ணோ பரிந்துரைத்த பஞ்சசீலக் கொள்கைகளை முன்னிறுத்துகிறது. இதன்படி செயற்பிரிவு, சட்டப்பிரிவு, நீதிப் பிரிவுகளுக்கிடையே குறைந்த பிரிவினையே உள்ளது. இந்த அரசியலமைப்பு "நாடாளுமன்ற பண்புகளுடனான குடியரசுத் தலைவருக்குரியதாக" விவரிக்கப்படுகின்றது.[1] 1998இல் நடந்த இந்தோனேசியப் புரட்சியை அடுத்து குடியரசுத் தலைவர் சுகார்த்தோ பதவி விலகிய பின்னர்பல அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன; இந்தோனேசிய அரசமைப்பில் பல திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு, அரசின் மூன்று பிரிவுகளிலுமே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன; கூடுதல் மனித உரிமைகளுக்கான சட்டங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
Remove ads
உள்ளடக்கம்
முகவுரை
முகவுரையில் பஞ்ச சீலக் கொள்கைகள் உள்ளன.
அங்கம் 1 : நாடும் இறையாண்மையும்
இந்தோனேசியா ஒரு குடியரசு நாடாகும். மக்களின் கைகளில் ஆட்சி இருக்கிறது. சட்டப்படி அரசு செயல்படும்.
அங்கம் 2 : சட்டமன்றம்
இந்த மன்றம் மக்கள் பிரதிநிதிகள் குழு, பிராந்திய பிரதிநிதிகள் குழு ஆகிய இரு குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்டது. இவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சட்டங்களை இயற்றவும், திருத்தவும், இந்த மன்றம்குடியரசுத் தலைவரை நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் கொண்டது.
அங்கம் 3: நாட்டின் செயலாக்கத் துறை
குடியரசுத் தலைவரின். அதிகாரங்களும் பணிகளும் இந்த அங்கத்தில் உள்ளன. குடியரசுத் தலைவருக்கும், துணைக் குடியரசுத் தலைவருக்குமான தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இருவரும் அதிக பட்சம் இரு முறை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட முடியும். இவர்கள் பொதுத் தேர்தலின் மூலமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த அங்கத்தில் பதவி நீக்க முறையும், உறுதிமொழியும் உள்ளன.
அங்கம் 5: அமைச்சர்கள்
அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களைப் பற்றிய சட்டங்கள் உள்ளன. குடியரசுத் தலைவர் அமைச்சர்களை நியமிப்பார்.
அங்கம் 6: உள்ளாட்சி அமைப்புகள்
இந்தோனேசியா மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாகாணமும் நகரங்களாகவும், உட்பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சி அமைப்புகளின் தலைவர்கள் பொதுத் தேர்தலின் வழி தேர்ந்தெடுக்கப்படுவர்.
அங்கம் 7: மக்கள் பிரதிநிதிகள் குழு
இதன் உறுப்பினர்களை பொதுத் தேர்தல் மூலமாக மக்கள் தேர்ந்தெடுப்பர். சட்டங்களை இயற்றவும், திருத்தவும், நிதிக்கணக்கை சமர்ப்பிக்கவும் அதிகாரம் கொண்ட அமைப்பு.
அங்கம் 7. பிரிவு 1: மாகாண பிரதிநிதிகள் குழு
ஒவ்வொரு மாகாணத்தில் இருந்து சம எண்ணிக்கையிலான உறுப்பினர்களை பொதுத் தேர்தல் மூலமாக மக்கள் தேர்ந்தெடுப்பர். மக்களின் உள்ளூர் அளவிலான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சட்டங்களை இந்தக் குழு இயற்றும்.
அங்கம் 7 பிரிவு-2 பொதுத் தேர்தல்கள்
பொதுத் தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். சட்டமன்றக் குழுவினரும், குடியரசுத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவரும் பொதுத் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தல் நேர்மையாகவும், சிக்கல் இன்றியும் நடத்தப்பட வேண்டும். மாகாண பிரதிநிதிகள் குழுவில் உறுப்பினராக போட்டியிடுவோர் தனியாட்களாக இருப்பர். ஏனைய குழுக்களில் உறுப்பினராக போட்டியிடுவோர் அரசியல் கட்சியை முன்னிறுத்துபவர்களாக இருப்பர்.
அங்கம் 8 : நிதி
ஒவ்வொரு ஆண்டுக்கும் ஆன நிதியறிக்கையை குடியரசுத் தலைவர் அறிவிப்பார். இது மக்கள் பிரதிநிதிகள் குழுவின் பார்வைக்கு வரும்.
அங்கம் 8, பகுதி 1 : உச்ச கண்காணிப்பு முகவம்
நாட்டின் நிதிநிலையை மேற்பார்வையிடுவதற்கான அமைப்பு
அங்கம் 9: நீதித்துறை
நீதித்துறைக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது. உச்சநீதிமன்றத்தின் பொறுப்பையும், தன்மையையும் விளக்குகிறது.
அங்கம் 9, பகுதி 1 : நாட்டின் எல்லை வரையறை
இந்தோனேசியா தீவுக்கூட்டம் என்றும் உரிமைகளை சட்டம் தீர்மானிக்கிறது என்றும் கூறுகிறது.
அங்கம் 10 : மக்களும் தங்கியிருப்போரும்
அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமம் என்று கூறுகிறது. அனைவருக்கும் மனித உரிமைகள் உண்டு என்றும் கூறுகிறது
- ஏற்றத்தாழ்வின்றி வாழ்வதற்கான உரிமை
- மதத்தை கடைபிடிக்க சுதந்திரம்
- கல்வி, வேலை, குடியுரிமை பெறுவதற்கான உரிமை
- கருத்துச் சுதந்திரம்
ஒவ்வொருவரும் அடுத்தவரின் உரிமையை போற்ற வேண்டும்.
அங்கம் 11 : மதம்
மக்களுக்கான மதசுதந்திரத்தை அரசு உறுதிபடுத்துகிறது.
அங்கம் 12: தேசிய பாதுகாப்பு
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் உரிமை அனைத்து குடிமக்களுக்கும் உண்டு. இராணுவம், காவல்துறை ஆகியவற்றை அமைக்கும் முறையும் கூறப்பட்டுள்ளது.
அங்கம் 13 : கல்வியும் பண்பாடும்
நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் கல்வி பெறுவதற்கான உரிமை உண்டு. அரசின் நிதி பயன்பாட்டில் 20 % பணத்தை மக்களின் கல்விக்காக ஒதுக்க வேண்டும்.
அங்கம் 14 : பொருளாதாரமும் சமூக நலமும்
வறுமையில் வாடுவோரை காப்பதும் அரசின் கடன்
அங்கம் 15 : கொடி, மொழி, சின்னம், தேசிய கீதம்
இந்தோனேசியாவுக்கான தேசியக் கொடி, தேசிய மொழியாக இந்தோனேசிய மொழி, தேசிய கீதம் ஆகியவற்றை வரையறுக்கிறது.
Remove ads
குறிப்புகள்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads