இராணி சேதுபதி மங்கலேஸ்வரி நாச்சியார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராணி சேதுபதி மங்கலேஸ்வரிநாச்சியார் (1803 -1812) என்பவர் இராமநாதபுரம் ஜமீனின் ஜமீந்தாரினி ஆவார். இவர் இராமநாதபுரம் மன்னரான முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் தமக்கை ஆவார். முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ஆஙோகிலேயருடன் முரண்பட்டு அவர்களால் 1795இல் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்ட நிலையில். கும்பெனியார் அவரது தமக்கையார் இராணி மங்களேஸ்வரி நாச்சியாரது உரிமையினை ஏற்றுக்கொண்டனரே ஒழிய அவருக்கு இராமநாதபுரம் சீமையை ஆளும் உரிமையை வழங்கவில்லை.
Remove ads
கும்பெனியாரின் ஆட்சி
முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியை கைது செய்த கும்பெனியார் இராமநாதபுரம் சீமை நிர்வாகத்தைத் தமது கலெக்டர்கள் லாண்டன், பவுனி, ஜாக்சன், லூசிங்டன் ஆகியோர் மூலமாக நடத்தி வந்தனர். ஆனால் மன்னரது இராஜ விசுவாசியான சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரரது கிளர்ச்சிகளின் காரணமாக கும்பெனியாருக்கு மிகுந்த இடையூறுகளும், இழப்புகளும் கி.பி. 1802 வரை ஏற்பட்டு வந்தன. மேலும் மேலும் அத்தகைய இழப்புகள் தொடர்வதைத் தவிர்க்க இராமநாதபுரம் சீமையில் ஒரு பாரம்பரிய ஆட்சிமுறையை அமுல் நடத்த வேண்டுமென அப்பொழுதைய கலெக்டர் லூசிங்டன் கும்பெனித் தலைமையை வற்புறுத்தி வந்தார். இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அன்றைய கும்பெனியாரது நடைமுறைகளின்படி இராமநாதபுரம் சீமையை ஜமீன்தாரியாக மாற்றி உத்திரவிட்ட முதல் ஜமீன்தாரினியாக மங்களேஸ்வரி நாச்சியாரை நியமனம் செய்தது.
Remove ads
ஜமீன்தாரினியாக
கும்பெனியாருக்கு ஆண்டுதோறும் 3,20,000 ரூபாய் பேஷ்குஷ் (கப்பம்) தொகை செலுத்துவதாக ஒப்புக்கொண்டு 21. பெப்ரவரி 1803இல் இராமநாதபுரம் ஜமீன்தாரினியாகப் பொறுப்பேற்றார் இராணி மங்களேஸ்வரி நாச்சியார். இவர் தமது முன்னோர்களைப்போல ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை கொண்டவராக இருந்தார். மதுரையில் உள்ள மதுரை ஆதீனத்தின் திருஞானசம்பந்த மடத்தின் சீரமைப்பிற்கு மிகவும் உதவினார். தனது வளர்ப்பு மகள் சேசம்மாளின் பெயரில் திருப்புல்லாணியை அடுத்துள்ள அகத்தியர் குட்டத்தில் சீனிவாசப் பெருமாளுக்குச் சிறிய திருக்கோயில் ஒன்றை எடுத்துத் திருப்பணி செய்தார். மதுரை வழியிலுள்ள போகலூரை அடுத்து பயணிகளுக்காக அன்னசத்திரம் ஒன்றையும் அமைத்தார். (சத்திரக்குடி எனத் தற்போது இந்த ஊர் வழங்கப்படுகிறது.)
Remove ads
மறைவு
இவருக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தினால், தன் கணவரான இராமசாமித் தேவரின் மருமகனான அண்ணாசாமி என்பவரை கி.பி. 1807-இல் சுவீகாரப் புத்திரனாக ஏற்றுக் கொண்டார். அண்ணாசாமி சிறுவனாக இருக்கும்போது இராணி மங்களேஸ்வரி நாச்சியார் கி.பி. 1812-இல் காலமானார். [1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads