உமையாள்புரம் சுவாமிநாதர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உமையாள்புரம் சுவாமிநாதர் (Umayalpuram Swaminathar) (மே 22, 1867 - ஆகத்து 8, 1946) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக் கலைஞர் ஆவார்.[1]
இசைப் பரம்பரை
இவரது தந்தை சிவசம்பு. ஸ்ரீ தியாகப் பிரம்மத்தின் சீடரான உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர் இவரது குரு. ஆகவே சுவாமிநாத ஐயர் ஸ்ரீ தியாகராஜரின் இசைப் பரம்பரையில் வந்தவராவார்.
பின்னர் சுந்தர பாகவதர், மகா வைத்தியநாத சிவன், வீணை வித்துவான் திருவாலங்காடு தியாகராஜர், கெக்கரை முத்து ஆகியோரிடமும் இசை பயின்றார்.[1]
இசை ஆசிரியராக
இவரது சீடரான செம்மங்குடி சீனிவாசர் இவரைப் பற்றிக் கூறுகையில், இவரது குரல் இனிமையாக இருந்தாலும் மெலிதாக இருந்ததனால் கச்சேரிகள் செய்வதை விட கூடுதலாக மாணவர்களைப் பயிற்றுவதிலேயே அவர் கவனம் செலுத்தினார் என 1980களில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.[கு 1] அத்துடன் அதட்டல் எனப்படும் ஆளுமை உணர்வுடன் கச்சேரி செய்வதை அவர் விரும்பவில்லை எனவும் செம்மங்குடி குறிப்பிட்டார்.[1]
இவரது மற்றொரு சீடரான மகாராஜபுரம் விசுவநாதர்[2] தனது குருகுலவாச அநுபவம் பற்றிக் கூறும்போது சுவாமிநாதர் மிகவும் அன்புடன் தனது அறிவை மாணவர்களுக்கு ஊட்டினார் என்றும் மாணவர்கள் அவரை ஒரு தந்தையாகவும் கண்டிப்பான ஆசிரியராகவும் உணர்ந்தார்கள் எனக் கூறியுள்ளார். அவர் கற்றுக்கொடுத்த மிகவும் அரிதான சங்கதிகளை தான் பல இரவுகள் தூங்காமல் விழித்திருந்து கற்றதாகவும் விசுவநாதர் குறிப்பிட்டுள்ளார்.[1]
1936 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாதமியின் மாநாட்டில் பேசும்போது சுவாமிநாதர் இசைக் கலைஞர்களுக்கு ஒரு அறிவுரை வழங்கினார். "பாடல் வரிகளை நன்கு கற்றுக் கொள்ளுங்கள்; இசை, லயம் இரண்டையும் வசப்படுத்திக் கொள்ளுங்கள். நன்னடத்தையும், உயர்வான எண்ணங்களும் கொண்டவர்களாக இருங்கள். இசையில் வணிகராக இருக்காதீர்கள்."[1]
Remove ads
அவரது கருத்துகள்
பாரம்பரிய இசை வழி வந்தாலும் அவர் சில முன்னேற்றமான கருத்துகளைக் கொண்டிருந்தார்.
இசையில் காலத்துக்கேற்றபடி புதிய ஆக்கங்கள் வரவேண்டும்.
இசையில் சாஸ்திரிய கோட்பாடுகளையும் விதிகளையும் கடைபிடிப்பது எளிதானதல்ல. அது இசையை விரும்பும் எல்லோராலும் வரவேற்கப்படும் எனவும் கூறமுடியாது.
இசை வித்துவான்கள் தமிழ் பாடல்களை பிரபலமடையச் செய்ய வேண்டும். அவர்கள் சைவ நாயன்மார்களின் தோத்திரங்களை அவற்றிற்குரிய பண்ணில் இசையமைத்துப் பாடவேண்டும்.[கு 2][1]
விருதுகளும் சிறப்புகளும்[1]
- சங்கீத கலாநிதி விருது, 1936. வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை.[3]
- திருவாவடுதுறை ஆதீனம் ஆஸ்தான வித்துவான்.
- நாதானுபாவசரஜ்ஞ, 1940 ஆம் ஆண்டு காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கியது.
வாழ்க்கை
சுவாமிநாதர் கும்பகோணத்திலே வாழ்ந்தார். அவ்வப்போது சென்னைக்கு வந்து கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர் போன்ற சில மாணவர்களுக்கு இசை கற்றுக் கொடுத்தார். இவருக்கு வெங்கடராமன், ராஜகோபாலன் என இரண்டு மகன்கள். அவர்கள் இருவரும் வயலின் வித்துவான்கள். இவர்களில் முன்னவர் மியூசிக் அகாதமியின் "ஆசிரியர்க்கான இசைக் கல்லூரி"யில் சில காலம் பணியாற்றினார். அத்துடன் உமையாள்புரம் பாணியில் தியாகராஜ கீர்த்தனைகளை பரவச் செய்யுமுகமாக பல கீர்த்தனைகளை இசைக் குறியீட்டுடன் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியிட்டார். [1]
Remove ads
மேற்கோள்கள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads