உலக மின்னூலகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உலக மின்னூலகம் (The World Digital Library) என்பது யுனெஸ்கோ மற்றும் அமெரிக்க காங்கிரசு நூலகம் ஆகியவற்றால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டு மின்னூலகம் ஆகும். அனைத்துலக மற்றும் பல்வேறு கலாசாரப் புரிதல்களை ஊக்குவித்தல், இணையத்தில் கிடைக்கும் கலசார உள்ளடக்கங்களை அளவிலும் வகையிலும் அதிகமாக்குதல், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு அறிவுசார் வளங்களை அளித்தல், பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் அறிவுசார் வளங்களை அதிகரித்தல் அதன் மூலம் ஒரு நாட்டிற்குள்ளும் நாடுகளுக்கு இடையேயும் உள்ள எண்ம இடைவெளியைக் (digital divide) குறைத்தல் ஆகியவற்றை தனது நோக்கமாக உலக மின்னூலகம் கொண்டுள்ளது[1].

இணையத்தில் உள்ள ஆங்கிலம் அல்லாத மேற்குலகைச் சாராத உள்ளடக்கங்களை வளப்படுத்தி அதை அறிஞர்களின் ஆய்வுக்கு அளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள கலாசாரங்களின் முதன்மைத் தகவல் ஆதாரங்களான வரைபடங்கள், அரிய நூல்கள், இசைக் கோர்வைகள், திரைப்படங்கள், அச்சு வடிவங்கள், ஒளிப்படங்கள், கட்டட வடிவியல் வரைபடங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக இணையத்தில் கிடைக்கச் செய்வதில் முனைப்புடன் செயல்படுகிறது.[2][3][4] உலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீசு, ருஷ்யன், இசுபானியம் ஆகிய மொழிகளில் கிடைத்த 1,170 உருப்படிகளைக் கொண்டிருந்தது.[5]
Remove ads
வரலாறு
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2003-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்புக்கான (யுனெஸ்கோ) தனது நிலையான பிரதிநிதிக் குழுவை ஐக்கிய அமெரிக்கா மீள அமைத்தது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் நூலகர் முனைவர் ஜேம்சு எச். பில்லிங்டன், அந்நாட்டின் ஆணையாளராக யுனெஸ்கோவில் நியமிக்கப்பட்டார். ஜூன் 2005-ஆம் ஆண்டு யுனெஸ்கோ துவக்க நாள் கருத்தரங்கில் அழைப்பின் பேரில் சென்று, உலக மின்னூலகம் ஒரு பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது, நிறுவனங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் சேகரித்து வைத்துள்ள அரிய உள்ளடக்கங்களை எளிதில் அணுகி இலவசமாகப் பெறக்கூடிய வகையில் புதிய வடிவில் திரும்ப இந்த உலகிற்கு அளிக்கத் தகுந்த அமைப்பாக உலக மின்னூலகம் செயல்பட வேண்டும் என்று விளக்கினார்.
அரசு - தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட உலக மின்னூலகத்தில், 2005-ஆம் ஆண்டு கூகிள் நிறுவனம் முதல் பங்குதாரராக சேர்ந்து 30 லட்சம் டாலர்களை உதவியாக வழங்கியது[6].
Remove ads
பணிக் குழுக்கள்
பில்லிங்டனின் தொலைநோக்கை நிறைவேற்ற ஒரு செயற் திட்டத்தை காங்கிரசு நூலகத்தில் உள்ள உலக மின்னூலக முதுநிலை ஆலோசகர் முனைவர் ஜான் வான் ஒளடெனரேன் 2006-ஆம் ஆண்டு கருத்தரங்கில் வழங்கினார். உலக மின்னூலகமானது தனது பங்குதாரர்களை முதன்மையான நான்கு திட்டப்பணிகளில் ஊக்குவிக்க வேண்டும் என்றார். அவை தொழில்நுட்ப கட்டமைப்பு, தேர்வு செய்தல், நிர்வகித்தல், நிதியளித்தல். 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிசில் நடைபெற்ற உலக மின்னூலக வளர்ச்சி குறித்த மாநாட்டில் இக் குறிக்கோள் எட்டப்பட்டது. நான்கு திட்டப் பணிகளில் உள்ள தனிப்பட்ட சிக்கல்களை ஆராய தனித்தனியான பணிக் குழுக்கள் (working groups) அமைக்கப்பட்டன. இந்தப் பணிக்குழுக்கள் 2007-ஆம் ஆண்டின் முதற்பகுதியில் ஒன்றுகூடி, மின்னூலகத் துறையில் உள்ள தொழில் வல்லுநர்களையும் சேர்த்துக் கொண்டது. இப் பணிக் குழுக்கள் தங்களது முடிவுகளை உலக மின்னூலக முதன்மைக் குழுவிடம் ஜூலை, 2007-ஆம் ஆண்டு வழங்கின. இந்த முடிவுகள் அக்டோபர், 2007-ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற யுனெஸ்கோ பொது அவை 34-வது மாநாட்டில் அளிக்கப்பட்டன. செப்டம்பர், 2008-ஆம் ஆண்டு அமெரிக்க நாடுகளின் அமைப்பு காங்கிரசு நூலகத்துடன் இணைந்து உலக மின்னூலக வளர்ச்சிக்கு உதவ இணக்கம் தெரிவித்தது. இதற்கான பங்களிப்பாளர் உடன்பாட்டில் அமைப்பின் பொதுச் செயலாளர் ஜோசு மிகைல் இன்சுல்சா-வும் ஜேம்சு பில்லிங்டனும் கையெழுத்திட்டனர். இதையடுத்து, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரிசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஏப்ரல் 21, 2009-ஆம் ஆண்டு உலக மின்னூலகம் தொடங்கப்பட்டது.[7][8]
Remove ads
காட்சிப்படுத்தல்


உலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது பல்வேறு காட்சிப்படுத்தல்கள் சேர்க்கப்பட்டன. அவற்றுள் சில: செஞ்சியின் கதை (Tale of Genji) 11-ஆம் நூற்றாண்டு சப்பானிய கதை. உலகில் முதன் முறையாக எழுதப்பட்ட புதினம் என்று கருதப்படுகிறது.[9] குழந்தை ஏசுவின் முதல் அசுடெக் (Aztec) குறிப்புகள்[5], அல்ஜீப்ரா கணித வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட பழமைவாய்ந்த அரபு மொழி நூல்கள்[5] , எட்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆப்பிரிக்க ஓவியமான ரத்தம் சிந்தும் மான்[10], அமெரிக்கா என்று முதன்முறையாகக் குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட வால்டுசீமுல்லர் வரைபடம் (Waldseemüller map)[10][11] கோடெக்ஸ் கிகாஸ் (Codex Gigas)[9] 101 வயதுடைய அமெரிக்க நாட்டு அடிமை ஒருவரின் பேச்சுப் பதிவு,[9] முதலாம் உலகப்போர் ஆட்சேர்ப்பு பதாகை,[9] ஸ்காண்டிநேவிய குடிவரவாளர்களுக்காக கனடா அரசு 1899-ஆம் ஆண்டு வெளியிட்ட கையேடு[9] , முதன்முறையாக அச்சடிக்கப்பட்ட இசுபானிய மற்றும் டாகாலாக் மொழி புத்தகம்[11], ருஷ்ய குருவால் அலூசியன் (Aleutian) மொழியில் பெயர்க்கப்பட்ட விவிலியம்[11], மாலி நாட்டில் கிடைத்த இசுலாமிய கையெழுத்துப் பிரதி[11], சீனப் பேரரசு, ஒட்டாமன் பேரரசு, ரஷ்யாவின் ஜார் அரசில் எடுத்த அரிய ஒளிப்படங்கள், லா மார்செல்லியின் முதல் ஒலிப்பதிவு, லூமியர் சகோதரர்கள் உருவாக்கிய உலகின் முதல் திரைப்படம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கல்வெட்டு ஒளிப்படம்[12], நியுரம்பர்க் குரோனிக்கில்[13]
பங்குதாரர்கள்
உலக மின்னூலகத்துக்குப் பங்களிப்பு செய்யும் பங்குதாரர்களாக உள்ளோர்:
- பிபிலியோதெகா அலெக்சான்ட்ரினா
- பிரவுன் பல்கலைக்கழக நூலகம்
- மெக்சிகோ வரலாற்று ஆய்வு மையம்
- மைய நூலகம், கத்தார் பவுண்டேசன்
- கொலம்பஸ் நினைவு நூலகம்
- எகிப்து தேசிய நூலகம் மற்றும் ஆவணகம்
- பன்னாட்டு ஐக்கிய நூலகக் கூட்டமைப்பு
- இராக் தேசிய நூலகம் மற்றும் ஆவணகம்
- ஜான் கார்டர் பிரவுன் நூலகம்
- கிங் அப்துல்லா அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
- காங்கிரசு நூலகம்
- தேசிய ஆவணக மற்றும் பதிவேடு நிர்வாகம்
- தேசிய மைய நூலகம்
- பிரேசில் தேசிய நூலகம்
- சீனா தேசிய நூலகம்
- பிரான்சு தேசிய நூலகம்
- இசுரேல் தேசிய நூலகம்
- ருஷ்ய தேசிய நூலகம்
- செர்பியா தேசிய நூலகம்
- சுவீடன் தேசிய நூலகம்
- உகாண்டா தேசிய நூலகம்
- தெற்காசிய மற்றும் கரீபியன் ஆய்வுகளுக்கான நெதர்லாந்து நிறுவனம்
- பிரிடோரியா பல்கலைக்கழக நூலகம்
- வெல்கம் நூலகம்
- யேல் பல்கலைக்கழக நூலகம்
- யெல்ட்சின் அதிபர் நூலகம்
- பிராட்டிஸ்லவா பல்கலைக்கழக நூலகம்
Remove ads
இவற்றையும் பார்க்க
- இணைய ஆவணகம்
- குட்டென்பர்க் திட்டம்
- காங்கிரசு நூலக மின்னூலகத் திட்டம்
- உலக நினைவக வலை
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads