ஊக்சுமால்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊக்சுமால் (Uxmal) என்பது, தற்போதைய மெக்சிக்கோவில் உள்ள ஒரு பழங்கால, செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த மாயர் நகரம். மெக்சிக்கோவில் உள்ள பலெங்கே, சிச்சென், கலக்முல்; பெலிசேயில் உள்ள கராக்கோல், சுனான்துனிச்; குவாதமாலாவில் உள்ள திக்கல் ஆகியவற்றுடன், ஊக்சுமாலும் ஒரு மிக முக்கியமான தொல்லியல் களங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. பூக் பகுதியில் அமைந்துள்ள இது இப்பகுதியின் முதன்மைக் கட்டிடக்கலைப் பாணியைக் கூடிய அளவு வெளிப்படுத்தும் மாயா நகரங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் முக்கியத்துவம் காரணமாக இது ஒரு யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, மெக்சிக்கோவின் யுக்கட்டான் மாநிலத்தின் தலை நகரமான மெரிடாவுக்குத் தெற்கே அதிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரின் கட்டிடங்கள் அவற்றின் அளவுக்கும், அலங்காரங்களுக்கும் பெயர் பெற்றவை. சக்பெசு என அழைக்கப்படும் பழங்கால வீதிகள் கட்டிடங்களை இணைப்பதுடன், இன்றைய மெக்சிக்கோவில் உள்ள சிச்சென் இட்சா; இன்றைய பெலிசேயில் உள்ள கராக்கோல், சுனன்துனிச்; இன்றைய குவாதமாலாவில் உள்ள திக்கல் ஆகிய நகரங்களை இணைப்பதற்காகவும் அமைக்கப்பட்டன.
கட்டிடங்கள், பூக் பாணியில் அமைந்தவை. கரடுமுரடற்ற குட்டையான சுவர்களின் மேற்பகுதி மாயர்களின் குடிசைகளின் அடிப்படையிலான அலங்காரப் பட்டைகளுடன் முடிவடைகின்றது. இவை தூண்களையும் (குடிசைகளின் சுவர்களில் பயன்படுத்தப்பட்ட புற்கள்), சரிவக வடிவங்களையும் (புல் வேய்ந்த கூரைகள்) பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. சுருள் வடிவப் பாம்புகளும், பல வேளைகளில் இரட்டைத் தலைப் பாம்புகளும் மழைக் கடவுள் "சாக்"கின் முகமூடிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வேண்டிய உயரத்தை அடைவதற்கும், முக்கியமான கனவளவுகளைப் பெறுவதற்கும் நிலத்தின் தன்மையைக் கட்டிடங்களில் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஐந்து தளங்களைக் கொண்ட மந்திரவாதியின் பிரமிடு, 1,200 சதுர மீட்டர்களுக்கு (12,917 சதுர அடி) மேற்பட்ட பரப்பளவைக் கொண்ட ஆளுனரின் மாளிகை என்பன இவற்றுள் அடங்கும்.
Remove ads
பெயர்
இதன் தற்போதைய பெயர் மும்முறை கட்டப்பட்டது என்னும் பொருள் தரும் "ஒக்ஸ்மால்" என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது இவ்விடத்தின் பழமையையும், எத்தனை முறை இது மீளக் கட்டப்பட்டது என்பதையும் குறிப்பதாக இருக்கக்கூடும். இக்கருத்தோடு முரண்படுபவர்களும் உள்ளனர். "வர இருப்பது, எதிர் காலம்" என்னும் பொருளுடைய "உச்மால்" என்னும் சொல்லில் இருந்து நகரத்தின் பெயர் பெறப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கண்ணுக்குத் தெரியாத நகரம் என்றும், குள்ள அரசனின் மந்திர வித்தையால் ஒரே இரவில் கட்டப்பட்டது என்றும் ஐதீகங்கள் உள்ளன. இதை அடிப்படையாகக் கொண்ட "ஊக்சுமாலின் குள்ள மந்திரவாதி" என்னும் மாயர்களின் கதை ஊக்சுமாலைப் பின்னணியாகக் கொண்டு எழுந்தது.[1]
Remove ads
களம் பற்றிய விளக்கம்
மீளமைப்பு வேலைகள் இடம்பெறுவதற்கு முன்பே, பல மாயன் நகரங்களுடன் ஒப்பிடும்போது, ஊக்சுமால் நல்ல நிலையில் இருந்தது. கட்டிடத்தை உறுதியாக வைத்திருப்பதற்குச் சாந்தில் தங்கியிராமல், நடுவில் காங்கிறீட்டையும், வெளிப்புறம் நன்கு வெட்டப்பட்ட கற்களையும் பயன்படுத்தி மீளமைப்பு வேலைகள் செய்யப்பட்டன. இங்குள்ள கட்டிடக்கலையை நேர்த்தியிலும், அழகிலும் பலன்கேயின் கட்டிடக்கலையுடன் மட்டுமே ஒப்பிடலாம். மாயாக் கட்டிடக்கலையின் பூக் பாணியே இங்கு முதன்மை பெற்று விளங்குகிறது. இது சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருப்பதால், வருபவர் ஒருவர் பழைய காலத்தில் ஒரு முழுமையான சடங்கு மையம் எவ்வாறு இருந்திருக்கும் என அறிந்துகொள்வதற்கு உதவக்கூடிய மிகக் குறைவான நகரங்களுள் இதுவும் ஒன்று.
கட்டிடங்களை மீளமைப்பதற்காக உக்சுமால் சுற்றுலாத் தலத்தில் பல வேலைகள் செய்யப்பட்டிருந்தாலும், தொல்லியல் அகழ்வாய்விலும், ஆய்விலும் முறையான வேலைகள் குறைவாகவே மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads