ஏகாதசி

திதிகளில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

ஏகாதசி
Remove ads

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதச எனும் வடமொழிச் சொல் பதினொன்று எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பூரணையை அடுத்த ஏகாதசியைக் கிருட்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.

Thumb
ஏகாதசித் திதியைக் குறிக்கும் கோணம் செம்மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
Remove ads

வானியல் விளக்கம்

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.[1] ஏகாதசித் திதி பதினோராவது திதியும் 26 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 120 பாகையில் இருந்து 132 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்ச ஏகாதசித் திதியும், 300 பாகையிலிருந்து 312 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்ச ஏகாதசியும் ஆகும்.

Remove ads

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, 'முரன்' பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

Remove ads

இந்து சமயச் சிறப்பு நாட்கள்

வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்' என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றைத் தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.

இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினாராம். பகவானும் பிரம்ம தேவர்களுக்குத் தரிசனமளித்து அவர்களைக் காத்தருளினாராம் இவ்வாறு தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.

தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது என்றும் துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்குத் திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார் என்றும், அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகள்:

1. உற்பத்தி (ஏகாதசி) - மார்கழி - க்ருஷ்ண (பக்‌ஷம்) - சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

2. மோட்ச - மார்கழி - சுக்ல - வைகுண்டம் கிடைக்கும்

3. ஸபலா - தை - க்ருஷ்ண - பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)

4. புத்ரதா - தை - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்)

5. ஷட்திலா - மாசி - க்ருஷ்ண - அன்ன தானத்திற்கு ஏற்றது

6. ஜயா - மாசி - சுக்ல - பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்)

7. விஜயா - பங்குனி - க்ருஷ்ண - ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்

8. ஆமலதீ - பங்குனி - சுக்ல - கோதானம் செய்ய ஏற்றது

9. பாப மோசனிகா - சித்திரை - க்ருஷ்ண - பாபங்கள் அகலும்

10. காமதா - சித்திரை - சுக்ல - நினைத்த காரியம் நடக்கும்

11. வருதிந் - வைகாசி - க்ருஷ்ண - ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், ப்ரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)

12 மோஹினி - வைகாசி - சுக்ல - பாவம் நீங்கும்

13. அபார - ஆனி - க்ருஷ்ண - குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்

14. நிர்ஜலா (பீம) - ஆனி - சுக்ல - எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)

15. யோகினீ - ஆடி - க்ருஷ்ண - நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)

16. சயிநீ - ஆடி - சுக்ல - தெய்வ சிந்தனை அதிகமாகும் - திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)

17. சாமிகா - ஆவணி - க்ருஷ்ண - விருப்பங்கள் நிறைவேறும்

18. புத்ரஜா - ஆவணி - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும்

19. அஜா - புரட்டாசி - க்ருஷ்ண - இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்

20. பத்மநாபா - புரட்டாசி - சுக்ல - பஞ்சம் நீங்கும்

21. இந்திரா - ப்பசி - க்ருஷ்ண - பித்ருக்கள் நற்கதி பெறுவர்

22. பாபாங்குசா - ப்பசி - சுக்ல - கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் அகலும்

23. ரமா - கார்த்திகை - க்ருஷ்ண - உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்

24. ப்ரபோதின் - கார்த்திகை - சுக்ல - பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்

25 - கமலா - (சில வருடங்களில் மட்டும்) - மகாலட்சுமி அருள் கிடைக்கும்

Remove ads

ஆதாரம்

உசாத்துணைகள்

காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads