ஏகௌரியம்மன் கோயில்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏகௌரியம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காளி கோயிலாகும். இக்கோயிலானது தஞ்சையிலிருந்து தஞ்சை-திருச்சி சாலையில் 12கி.மீ. தொலைவில் உள்ள வல்லம் என்னும் சிற்றூரிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடிச் சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.[2]
Remove ads
பெயர்க்காரணம்
முன்னொரு காலத்தில் தஞ்சாசுரன் என்னும் அசுரன் தஞ்சையில் வாழ்ந்தான். சிறந்த சிவபக்தனான அவன் தனது தவபலத்தால் மனிதர், தேவர், மும்மூர்த்திகள் இவர்களிடமிருந்து உயிர் பிரியாத வரத்தைச் சிவபெருமானிடம் பெற்றான். பல கொடுமைகள் செய்து வந்த அவனைப்பற்றி மக்கள், தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, சிவன் தன் துணைவியான சிவசக்தியை ‘ஏ கௌரி‘, என்றழைத்து, தஞ்சாசுரனை அழிக்க ஆணையிடுகிறார். எருமைக்கிடா உருவம் தாங்கிய அசுரனின் கழுத்தை வெட்டி தலையை ஒரு கையில் ஏந்துகிறாள். உடல் கீழே சாய்ந்ததும் அசுரன் எருமை உருவம் நீங்கி இறந்துவிடுகிறான். போர் புரிந்த இடத்தில் அம்மன் கோபமாக இருந்ததால் அப்பகுதியில் பஞ்சம், வறட்சி ஏற்பட்டது. சிவபெருமான் ஏகௌரியம்மனிடம் தஞ்சாசுரனை அழித்ததால் கோபமாக உள்ளதைக் கூறி, கோபத்தைத் தணித்துக்கொண்டு அப்பகுதி மக்களுக்குத் தெய்வமாக இருந்து காப்பாற்றும்படி கூறுகிறார். வறட்சி, பஞ்சம் நீங்குகிறது. மக்கள் ஏகௌரியம்மனை பூசை செய்து வணங்கினர். தஞ்சாசுரனை அழித்த நாளே ஆடி மாதக் கடைசி வெள்ளி அல்லது ஆடிக்கழிவு நாளாகும்.[3] பராந்தகசோழன் காலத்தில் வல்லத்துப்பட்டாரகி என்றும் இராஜராஜசோழன் காலத்தில் காளாபிடாரி கைத்தலைபூசல் நங்கை என்றும் இந்த அம்மன் அழைக்கப்பட்டுள்ளார்.[4]
Remove ads
கோயில் அமைப்பு
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் கட்டுவதற்கு முன்பாகவே கட்டிய கோயிலாக இக்கோயில் இருந்துள்ளது. கோயிலின் நுழைவாயில் முதல் பெரிய சுற்றுப்பாதை ஒரு கோட்டையைப் போல பாதுகாப்பாக உள்ளது. கருவறையில் சுமார் 6 அடி உயரத்தில் சுடருடன் எட்டுத் திருக்கரங்களில் படைக்க்லன் ஏந்தி, சுதை வடிவத்தில் ஏகௌரியம்மன் காட்சியளிக்கிறாள்.
கல்வெட்டு
கி.பி.9ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் எனப் பராந்தகசோழனின் 40ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பெற்ற கல்வெட்டு தெரிவிகிறது. இப்போது உள்ள கோயிலாக 1535இல் தஞ்சையை ஆண்ட அரசன் செவ்வப்ப நாயக்கரும், அவரது மகன் அச்சுதப்ப நாயக்கரும் சேர்ந்து கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றை இணைத்துப் புதிய மகா மண்டபம் கட்டிய செய்தியை அர்த்தமண்டபத்தில் காணப்படும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.[5]
திருவிழா
ஆடிப்பதினெட்டு அன்று வல்லம் கடைவீதியிலுள்ள மாரியம்மன் கோயில் விழாவோடு ஏகெளரியம்மன் கோயில் திருவிழா நடத்தப்பெறுகிறது. ஏகௌரியம்மன், மாரியம்மன், அய்யனார் ஆகிய உற்சவமூர்த்திகளைத் தனித்தனியே அலங்கரித்து வீதி உலா நடத்துகின்றனர். ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை ஆடிக்கழிவு திருவிழா நடைபெறுகிறது. தீமிதி, அம்மனுக்கு பகலில் சைவ பூசை, தொடர்ந்து இரவில் எருமைக்கிடா பூசை போன்றவை நடத்தப்பெறும். கோயில் காவல் தெய்வங்களுக்கு ஆடு,கோழி வெட்டி பூசை செய்கின்றனர். இத்திருவிழாவைக் காண வல்லம் அருகில் வாழும் மக்களும் ஈரோடு, இராமநாதபுரம், கோவை, பெங்களூர் ஊர்களிலிருந்து வரும் மக்களும் கலந்துகொள்கின்றனர்.[3]
இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவில் தேவிக்கு நடத்தப்படும் சண்டி ஹோமம், திருவிளக்கு பூஜை, சித்ரா பௌர்ணமி விழா அடங்கும். சண்டி ஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மிகவும் மகிழ்ந்து வாழ்வில் உள்ள சூனியங்களை அழித்து சகல சுகங்களையும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்புகின்றனர்.[6]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
படத்தொகுப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
