ஏவூர்தி வரலாறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏவூர்தியின் வரலாறு (History of rockets) என்பது 13 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து தொடங்குகிறது. பின்னர் ஏவூர்தித் தொழினுட்பம் வளர்ச்சியடைந்து, மங்கோலியா, இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் உருசியா ஆகிய இடங்களில் பரவியது. இன்றைய தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக விளங்கும் செயற்கைகோளை சுமந்து சென்று விண்வெளியில் நிலைநிறுத்துவதில் ஏவூர்திகளின் பங்கு அளப்பரியது. அந்த வகையில் விண்வெளி ஆய்வில் மனித சமுதாயம் புதிய நிலையை அடைய ஏவூர்தி தொழில்நுட்பக் கண்டுபிடிப்புதான் அடிப்படை காரணமாக உள்ளது. ஏவூர்தித் தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவில் கி.பி.1942 (1942 AD) ஆம் ஆண்டு தான் ஏவூர்தி தனது மேம்பட்ட முதல் வடிவத்தை எட்டியது. விண்வெளி பயணம் பற்றிய சிந்தனையும் ஏவூர்தி உருவாக்கம் பற்றிய ஆய்வும் கி.மு நான்காம் நூற்றாண்டிலிருந்தே (400 BC) துவங்கியதாகக் கூறப்படுகிறது.

போர்களத்தில் பயன்படும் ஏவூர்தி என்பதற்கு தமிழில் உந்துகணை என்று வழங்கப்படுகிறது. ஏவூர்தி மற்றும் உந்துகணை ஆகிய சொற்கள் வெவ்வேறு பொருளில் தமிழில் வழங்கப்படுகின்றன.
Remove ads
செயல்முறை


ஒவ்வொருவினைக்கும் அதற்கு சமமான எதிர் வினை உண்டு என்ற நியூட்டனின் இயக்கவியல் விதியை (Newton’s Law of Motion) அடிப்படையாக கொண்டுதான் ஏவூர்திகள் இயங்குகின்றன. ஏவூர்தியில் நுண்துளை (Nozzle) வாயிலாக அதிக அழுத்தத்தில் பீச்சியடிக்கப்படும் எரிபொருள் எரிந்து உருவாகும் அதற்கு இணையான எதிர்விசை, மேல்நோக்கி செயல்பட்டு ஏவூர்தியை மேல்நோக்கி உந்தித்தள்ளுகிறது. ஏவூர்தியில் திட அல்லது திரவ அல்லது வாயு எரிபொருளும், ஆக்சிசனும் இருக்கும். வாயு எரிபொருள் ஒன்றை மிக அழுத்தத்திலும் மிகக்குறைவான வெப்பத்திலும் (அதாவது கடுங்குளிரிலும்) திரவமாக்கிச் சேர்த்து வைக்கலாம். நீர்மமாக்கப்பட்ட வாயு எரிபொருள்தான் மிக மிக அதிகச் செயல்திறன் கொண்டது. இதுவே பெரும்பாலான நவீன ஏவூர்தித் தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.[1]
Remove ads
கி.மு. நான்காம் நூற்றாண்டு

வரலாறு அறிந்த முதல் ஏவூர்தி பற்றிய ஆய்வு வரலாறு கி.மு நான்காம் நூற்றாண்டிலிருந்து (400 BC) துவங்குகிறது. கிரேக்கத்தை சேர்ந்த பல்துறை வல்லுனரான ஆர்கிடசு (Archytas) என்பவர் கி.மு.375 ஆம் ஆண்டு உந்துவிசையால் இயங்கும் மரத்தால் ஆன “தி பீச்சன்" (The Pigeon) என்று அழைக்கப்பட்ட பறவை ஒன்றை வடிவமைத்தார்.[2][3] இந்த வகை ஏவூர்தி, ஒரு கம்பி அல்லது ஆதாரப் புள்ளியில் தொங்கும் அமைப்பில் பறக்க விடப் பட்டிருக்கலாம்.[4][5] நீராவியின் உந்து விசையைகொண்டு இயங்கிய அவரது மரத்தால் ஆன பறவை கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரம் வரை பறந்து அன்றைய மக்களை வியப்பில் உறையச் செய்ததாக வரலாறு தெரிவிக்கிறது.[6]
Remove ads
கி.பி. முதல் நூற்றாண்டு

ஆர்கிடசின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்டு எகிப்த்தை சேர்ந்த பொறியாளரான எரோன் (Heron (e) Hero of Alexandria)[7][8] என்பவர் ஏயோலிபைல் (Aeolipile) என்ற சாதனத்தை கி.பி.முதலாம் நூறாண்டில் (100 AD) வடிமைத்தார்.[9][10] உலகின் முதல் நீராவிப் பொறி என்று ஆதாரப்பூர்வமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏயோலிபைல் கிட்டத்தட்ட மூடப்பட்ட பாத்திரம் போன்ற அமைப்பைக் கொண்டதாக இருந்தது. பாத்திரத்தின் மேற்புறம் செங்குத்தாக இணைக்கப்பட்டிருந்த இரண்டு குழாய்களை அச்சாக கொண்டு சுழலும் வகையில் கோளம் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. கோளத்தின் எதிர் எதிர் துருவங்களில் குறுகிய துளைகளையுடைய இரண்டு ‘எல் (L)’ வடிவ முனையங்கள் (நாசில்கள்-Nozzle) இணைக்கப்பட்டிருந்தன.
பாத்திரத்திற்குள் நீரை ஊற்றி கொதிக்க வைக்கும் போது நீர் ஆவியாகி வெளியேற வாய்ப்பின்றி அழுத்தப்பட்டு குழாய்களின் வழியாக கோளத்தை அடைந்து பின் மிகக்குறுகிய துளைகள் வழியாக அதிக வேகத்துடன் வெளியேறியது. வெளியேறிய வேகத்திற்கு இணையான எதிர் விசை கோளத்தின்மீது செயல்பட்டு கோளத்தை சுழற்றச் செய்தது. எதிர் எதிர் துருவங்களில் முனைகள் இணைக்கப்பட்டிருந்ததன் காரணமாக கோளம் மிக வேகமாக சுழல ஆரம்பித்தது.[11] விளையாட்டுப் பொருள் போல இருந்த இந்த ஏயோலிபைல் தான் பிற்காலத்தில் நீராவிப் பொறிகள், ஏவூர்திகள் வடிவமைத்திட முன்னோடிச் சிந்தனையாகவும், மூலகாரணமாகவும் இருந்தது.
சீனா வெடிமருந்து கொண்டாட்டம்
இதே காலகட்டத்தில் சீனாவில் மதவிழாக்களின் போது பட்டாசு வெடித்து விழாக்களைக் கொண்டாடும் வழக்கம் நடைமுறையில் இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.[12] இந்த பட்டாசுகளை சீனர்கள் சால்ட்பெட்டர் (Saltpeter), கந்தகம் (Sulfur), கரித்தூள் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரித்திருந்தனர். தற்செயலாக ஒரு நாள் வெடிக்காத பட்டாசு ஒன்று புகையைக் கக்கிக்கொண்டு முன்னோக்கி பாய்ந்து சென்றது. இது கண்ட விழாக்கொண்டாட்டத்திற்கு வருகை புரிந்திருந்த சீன வேதியல் வல்லுனர்கள் வெடிபொருளை நிரப்பிக்கொண்டு, பாய்ந்து சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தைத் ஆய்வு செய்யத் துவங்கினர்.
ஒன்பதாம் நூற்றாண்டு

பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு சால்ட்பெட்டர், கார்பன், கந்தகம் ஆகியவற்றை கொண்டு வெடிமருந்தை[13] தயாரித்த சீன வேதியல் வல்லுனர்கள், சிறிய மூங்கில் குழாய்களில் அடைத்து அவற்றை அம்புகளின் முனையில் இணைத்து வில்லில் இருந்து ஏவி இலக்குகளை தாக்கினார்கள்.[14] தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்ட சீன வல்லுனர்கள் கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்பதாம் நூற்றாண்டில் வெடிமருந்தின் ஒரு பகுதி ஆக்சிசனேற்றம் (Oxidation) செய்யப்பட்டிருந்தால் வெடிமருந்து வெடிக்காமல் எரிபொருளாக செயல்பட்டு, எரிந்து வாயுக்களை புகையாக வெளியேற்றம் செய்யும் என்று கண்டுபிடித்தார்கள். அவ்வாறு வெளியேற்றப்படும் வாயுக்கள் குறுகிய துளைவாயிலாக வெளியேறும் படி செய்தால் அழுத்தம் காரணமாக வாயுக்கள் வெளியேறும் வேகத்திற்கு இணையான எதிர்விசை முன்னோக்கி செயல்பட்டு, உந்துகணையை உந்தித்தள்ளும் என்றும் கண்டுபிடித்தார்கள் அவ்வாறு நிகழ்ந்தால் உந்துகணை தானே இயங்கி இலக்கை தாக்கும் அப்போது உந்துகணையை ஏவுவதற்கு வில் தேவைப்படாது என்று அறிந்துகொண்டார்கள்.
Remove ads
பத்தாம் நூற்றாண்டு
தொடர்ந்து பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஏவுகணை தனது முதல் வடிவத்தை அடைந்தது. நீளமான குச்சி ஒன்றின் முனையில் வெடிபொருள் நிரப்பப்பட்ட மூங்கில் துண்டு ஒன்று குச்சியுடன் இணைத்துக்கட்டப்பட்டது. உந்துகணையை பற்றவைக்கப்பட்டதும் எரிபொருள் எரிந்து புகையை (வாயுக்களை) வெளியேற்றி, உந்துகணையை முன்னோக்கி சீறிப்பாய்ந்து இலக்கை தாக்கியது. பத்தாம் நூற்றாண்டிலேயே தயாரிக்கப்பட்டுவிட்டாலும் கூட 1232 ஆம் ஆண்டு மங்கோலியர்களுக்கும் சீனர்களுக்கும் காய் பெங் பு (Kai Feng Fu) என்ற இடத்தில் நடந்த போரில் தான் முதன் முதலாக ஏவூர்தி பயன்படுத்தப்பட்டது. சீறிப் பாய்ந்து வந்து தாக்கி குறிப்பிடத்தக்க அழிவுகளை ஏற்படுத்திய சீன ஏவூர்திகளை சமாளிக்க முடியாமல் மங்கோலியப்படை பின்வாங்கி தோற்றது.[15]
Remove ads
மங்கோலியா

இதைத்தொடர்ந்து ஏவூர்திகளின் மகத்துவம் பற்றி அறிந்துகொண்ட மங்கோலியர்கள், செங்கிசு கான், ஓகடீ கான் (Ogedei Khan, 1186 – 1241) ஆட்சிக்காலத்தில் உந்துகணைத் தொழினுட்பம் தெரிந்த சில சீன வல்லுனர்களை பொன் மற்றும் பெண் ஆசை காட்டி தங்கள் நாட்டிற்கு கடத்தி வந்து தங்கள் ராணுவத்திற்கு தேவையான உந்துகணைகளைத் தயாரிக்கும் பணியில் அவர்களை ஈடுபடுத்தினார்கள். ஐரோப்பிய யூனியன் மீது தனது ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று விரும்பிய ஓகடீ கான் அதற்கு முன்னோட்டமாக அங்கேரி மீது 1241 ஆம் ஆண்டு போர் தொடுத்தார். மொகி (Battle of Mohi, 1241) என்று அழைக்கப்பட்ட அங்கேரியின் சசோ நதிக்கரையில் நடந்த அந்தப் போரில் மங்கோலியர்கள் உந்துகணைகளைப் பயன்படுத்தி அங்கேரி படையினரைத் தோற்றோடச் செய்தனர்.[16] இதன்பின் தான் உந்துகணை பற்றி ஐரோப்பிய நாடுகளுக்குத் தெரியவந்தது.[17]
Remove ads
கொரியா
மங்கோலியர்கள் வாயிலாக உந்துகணை தயாரிக்கும் தொழினுட்பம் பற்றி 14 ஆம் நூற்றாண்டு வாக்கில் கொரியர்களுக்கும் தெரியவந்தது. தொடர்ந்து 1448 ஆம் ஆண்டு சீசொங் (Sejong the Great, 1397 – 1450) மன்னரது ஆட்சிக்காலத்தில் சோசன் வம்சத்தை (Joseon Dynasty) சேர்ந்த உந்துகணை வல்லுனர்கள் வாச்சா (Hwacha or Singijeon) என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் பல்குழல் ஏவுகணையை (Multi Missile Launcher) வடிவமைத்திருந்தனர்.[18]
இந்தியா
ஐதர் அலி
பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் உலகின் அனைத்து நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட உந்துகணை மரத்தினாலோ அல்லது மூங்கில் துண்டுகளை கொண்டோதான் தயாரிக்கப்பட்டன. இந்நிலையில் 1780 ஆம் ஆண்டு இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த பிரித்தானிய படைகளுக்கும் மைசூர் மன்னன் ஐதர் அலிக்கும் இடையே நடந்த குண்டூர்ப் போரில் (Battle of Guntur) உலகிலேயே முதன் முறையாக ஐதர் அலியின் படை உலோகத்தினாலான (Iron cased) ஏவுகணைகளால் ஆங்கிலேயரைத் தாக்கியது.[19] மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து தாக்கி பேரழிவுகளை எற்படுத்திய ஏவூர்திகளைக் கண்டு வியப்பிலும் அதிர்ச்சியிலும் உறைந்துபோன ஆங்கிலேயப்படைகள் தோற்றுப் பின்வாங்கின.[20][21]
திப்பு சுல்தான்
1799 ஆம் ஆண்டு சிரீ ரெங்கப்பட்டினத்தில் நடந்த நான்காவது ஆங்கில–மைசூர் போரில் (1798 – 1799) திப்பு சுல்தான் வீழ்த்தப்பட்டதும் அவரது அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயப்படைகள் 9700 - க்கும் மேற்பட்ட உந்துகணையை கைப்பற்றியது. திப்புவின் அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த ஓரியண்டல் நூலகத்தில் (Oriental Library) இருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் ஏவூர்தித் தயாரிப்பு ஆய்வுக்குறிப்புகள் மற்றும் தொழில் சீர்திருத்தம் பற்றிய திப்புவின் பல்வேறு நூல்கள் ஆகியவற்றை ஒன்றுவிடாமல் அள்ளிச் சென்றது.[22]
திப்புவின் உந்துகணைத் தயாரிப்புத் தொடர்பான ஆய்வுக்குறிப்புகளைக் கொண்டு தனது ராணுவத்திற்கு தேவையான ஏவூர்திகளை தயாரிக்க விரும்பிய இங்கிலாந்து, அதற்காக அப்போது இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய [[கண்டுபிடிப்பாளரும் மற்றும் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான சர் வில்லியம் காங்கிரிவ் (Sir William Congreve, 1772 – 1828) என்பவரை அதற்காகப் பணியமர்த்தியது.[22]
காங்ரிவ் உந்துகணை

தொடர்ச்சியாக சில ஆய்வுகளை மேற்கொண்ட வில்லியம் காங்கிரிவ், திப்பு சுல்தானின் தயாரிப்பு முறைகளில் இருந்த சில அடிப்படை தவறுகளை களைந்து, திப்புவின் உந்துகணையை மேம்படுத்தி 1804 ஆம் ஆண்டு காங்கிரிவ் என்ற உந்துகணையை (Congreve Rocket) வடிவமைத்தார்.[19][23] பதினாறு அடி நீளம் கொண்ட மூங்கில் கம்புகளின் முனையில் கட்டி ஏவப்பட்ட காங்கிரிவ் உந்துகணை கிட்டத்தட்ட ஒன்பது கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருந்தன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட உந்துகணை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே 1800 – களில் தொடர்ச்சியாக நடந்த பல போர்களில் (1812-போர், பிளாடன்சுபர்க் போர்-1814, பால்டிமோர்-1814) இங்கிலாந்து ராணுவத்தினரால் அமெரிக்க படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.[24] தொடர்ந்து இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும் இடையே, 1815 ஆம் ஆண்டு நடந்த வரலாற்று சிறப்புமிக்க வாட்டர்லூ (Battle of Waterloo, 1815) என்ற யுத்தத்தில் இங்கிலாந்து ராணுவத்தால் பயன்படுத்தப்பட காங்கிரிவ் ஏவூர்திகள், அப்போது பிரான்சை ஆட்சி செய்து வந்த நெப்போலியனை (Napoleon, 1769 – 1821) சரணடையச் செய்யும் அளவிற்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பர். அதன் பிறகுதான் காங்கிரிவ் ஏவூர்திகளின் புகழ் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது. பின்னர் காங்கிரிவ், உந்துகணைத் தொழினுட்பம் குறித்த முன்று நூல்களை வெளியிட்டார்.[25]
தொடர்ந்து மற்றுமொரு இங்கிலாந்து கண்டுபிடிப்பாளரான வில்லியம் ஏல் (William Hale, 1797– 1870) என்பவர் குச்சிகளின்றி இயங்கும் அதாவது தற்போது தாக்குதல் விமானங்களில் பயன்படுத்தப்படும் தோற்றத்தை ஒத்த உந்துகணையை 1844 ஆம் ஆண்டு வடிவமைத்தார்.[26] ஏல் வடிவமைத்த உந்துகணைகள் அமெரிக்க ராணுவத்தினரால் மெக்சிகோ படைகளுக்கு எதிராக அமெரிக்க–மெக்சிகோ போரில் 1846 – 1848 களில் பயன்படுத்தப்பட்டது
Remove ads
உருசியா
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளிடையே புகழ்பெற்று விளங்கிய உந்துகணை தொழினுட்பம் உருசிய விஞ்ஞானிகளைத் தீவிரமாக சிந்திக்க வைத்தது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் தாக்குதல் உந்துகணைகளை மேம்படுத்துவதில் தங்களது சிந்தனையை செலுத்திக் கொண்டிருக்க, உருசிய விஞ்ஞானிகள் அவர்களிடமிருந்து வேறுபட்டு விண்வெளிப்பயணம் மேற்கொள்ள தேவையான ஏவூர்திகளை வடிவமைப்பதில் தங்களது சிந்தனையை செலுத்திக்கொண்டிருந்தனர்.
கான்சுடண்டின் சியோல்கோவ்சுகி
இந்நிலையில் விண்வெளியின் தந்தை என்றழைக்கப்படும் உருசிய விஞ்ஞானியான கான்சுடண்டின் சியோல்கோவ்சுகி (Konstantin Tsiolkovsky, 1857 – 1935) என்பவர் 1903 ஆம் ஆண்டு “The Exploration of Cosmic Space by Means of Reaction Devices”” என்ற தலைப்பில் விண்வெளி வரலாற்றில் சிறப்பு வாய்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.[27] அந்த கட்டுரையில் சியோல்கோவ்சுகி, திட எரிபொருளை விட திரவ எரிபொருள் தான் ஓர் ஏவூர்திக்கு அதிகப்படியான உந்துசக்தியைத் தருமென்றும், அப்படிப்பட ஏவூர்திகள் மூலமாகத்தான் நாம் விண்வெளிப்பயணம் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் ஏவூர்தியின் உயரதிகவேகம் என்பது ஒரு வினாடியில் ஏவூர்தி எரிபொருள் எரிந்து வெளியேற்றும் வாயுக்களின் திசைவேகம் மற்றும் ஏவூர்தியின் எடை ஆகியவற்றை சார்ந்து இருக்கும் என்பதையும் தெரிவித்தார். இது முன்பே கண்டறியப்பட்டிருந்தாலும் இவரைப் பெருமைப்படுத்தும் பிற்காலத்தில் சியோல்கோவ்சுகி ஏவூர்திச் சமன்பாடு (Tsiolkovsky Rocket Equation) என்று அழைக்கப்பட்டது.[28] இதன் பிறகு வளிமண்டலத்தை தாண்டி செல்லும் ஏவூர்தித் தயாரிப்பு பற்றிய ஆய்வுகள் விரைவடைய ஆரம்பித்தன.
அமெரிக்கா


ஏவூர்திகளில் 1926 ஆம் ஆண்டு வரை திட எரிபொருள் தான் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சியோல்கோவ்சுகியின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு ராபர்ட் கோட்டர்ட் (Robert Goddard, 1882 – 1945) என்ற அமெரிக்கர் உலகிலேயே முதன் முதலாக திரவ எரிபொருளில் இயங்கும் வகையிலான ஏவூர்திகளை 1926 ஆம் ஆண்டு தயாரித்து பரிசோதித்து வெற்றியும் பெற்றார்.[29][30][31][32] கிட்டத்தட்ட 34 நான்கிற்கும் மேற்பட்ட சோதனைகளில் ராபர்ட் கோட்டர்ட்டின் ஏவூர்தி அதிகபட்சமாக 2.6 கி. மீ. உயரம் வரை மணிக்கு 885 கி. மீ. வேகத்தில் சீறிப்பாய்ந்து.[33]
Remove ads
செருமனி
அடால்ப் இட்லர் மற்ற நாடுகளின் மீது தாக்குதலை துவங்குவதற்கு முன்பு தனது இராணுவத்தை நவீனப்படுத்துவது இன்றியமையாதது என்பதை உணர்ந்து அதற்குரிய பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார், அவற்றில் ஒன்று தான் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைதிட்டம். திட்டத்தை செயல்படுத்த விரும்பிய இட்லர் அதற்காக 1927 ஆம் ஆண்டு பெர்லினுக்கு அருகில் ஒரு தனி ஆராய்ச்சி மையத்தை (German Rocket Society, or VfR), (1927-1933) சோகன்னசு விங்க்ளர் (Johannes Winkler, 1897 – 1947) என்பவரது தலைமையில் ஏற்படுத்தினார்.[34]
ஏ-4
சோகன்னசால் உந்துகணை தயாரிக்கும் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் வெர்னர் வான் பிரவுன் (Wernher Von Braun, 1912 – 1977) ஆவார். சிறுவயதில் இருந்தே உந்துகணைகளின் மீது தீராத காதல் கொண்டிருந்த வெர்னர், ராபர்ட் கோட்டர்ட்டின் கண்டுபிடிப்பு மற்றும் சியோல்கோவ்சுகியின் ஆய்வுக்கட்டுரைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு 1932 ஆம் ஆண்டு 70. கி. மீ. தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் “ஏ-4” என்ற உந்துகணைத் தயாரிப்பதில் வெற்றிகண்டார்.[35] ஆனால் இட்லர் தொலைதூர தாக்குதல் உந்துகணைகள் மீது அதிக நாட்டம் கொண்டிருந்ததால் ஏ-4 இரக உந்துகணைகள் சோதனை ஓட்டத்தோடு நிறுத்திக்கொள்ளப்பட்டது.
வி-2

.

வெர்னரின் நேரடிப்பார்வையின் கீழ இயங்கிய வல்லுனர்கள் குழு தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு திரவ எரிபொருளை கொண்டு இயங்கும் விண்ணை பிளந்து செல்லும் உலகின் முதல் பெரிய உந்துகணையைத் தயாரித்து 1942 ஆம் ஆண்டு பால்டிக் கடலுக்கு அருகேயுள்ள பீனேமுண்டே (Peenemunde) என்ற இடத்திலிருந்து ஏவியது. கிட்டத்தட்ட 3. 56 மீட்டர் உயரமிருந்த வி-2 என்று அழைக்கப்பட்ட இந்த உந்துகணை 1000 கிலோ வெடிபொருளை சுமந்துகொண்டு மணிக்கு 2880 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து 320 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கித் தரைமட்டமாக்கும் திறன் கொண்டதாக இருந்தது.[36]
Remove ads
இரண்டாம் உலகப் போரில் உந்துகணை

தொடர்ந்து ஜெர்மனியில் 1943 ஆம் ஆண்டு வி-2 ரக உந்துகணைகளின் உற்பத்தி மின்னல் வேகத்தில் துவங்கப்பட்டது.[37] தயாரிக்கப்பட்ட உந்துகணை இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தின் மீதும், பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மீது ஏவி தாக்கப்பட்டது, தாக்குதலில் 7250-க்கும் மேற்பட்ட ராணுவவீரர்கள் உயிரிழந்தார்கள், இதில் இங்கிலாந்தில் மட்டும் கிட்டத்தட்ட 3000 ராணுவவீரர்கள் உயிரிழந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. பாய்ந்து வந்து தாக்கி கனவிலும் அப்போது நினைத்து பார்த்திருக்காத பேரழிவுகளை ஏற்படுத்திய ஜெர்மனியின் பிரம்மாண்ட உந்துகணைகளை உலக நாடுகள் அச்சத்துடன் பார்த்தன.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் படைகள் தோற்கடிக்கப்பட்டதும் அமெரிக்க உளவு நிறுவனமும் அமெரிக்க ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டு வெர்னரை தேடும் பணியில் ஈடுபட்டது. ஆப்பிரேசன் பேப்பர்கிளிப் (Operation Paperclip)[38] என்று பெயரிடப்பட்ட இப்பணி அமெரிக்கர்களுக்கு வெற்றியை தேடித்தந்தது. அதாவது வெர்னர் அமெரிக்க வீரர்களிடம் சிக்கினார்.[38] உடனிருந்த ரஷ்ய வீரர்களுக்கு கூட தெரியாமல் வெர்னர் மற்றும் சில உந்துகணை வல்லுனர்களை அமெரிக்கா கடத்திச் சென்றது.[39] ரஷ்யப்படை வீரர்களிடமும் வெர்னர் குழுவில் பணியாற்றிய சில வல்லுனர்கள் சிக்கினார்கள். அப்படி அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களது நாட்டிற்கு கொண்டுவந்த ஜெர்மானிய உந்துகணை வல்லுனர்களை கொண்டு தங்களது நாட்டிற்கு தேவையான உந்துகணைகளைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கின.[40]
விண்வெளிப்போட்டி
ரஷ்யா 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் நாள் தான் தயாரித்த ஆர்-7 என்ற ஏவூர்தி மூலம்"ஸ்புட்னிக்–1" என்று பெயரிடப்பட்ட உலகின் முதல் செயற்கைகோளை என்ற ஏவூர்தி கொண்டு விண்வெளிக்கு ஏவி நிலைநிறுத்தியது.[41] சரியாக முப்பது நாள் இடைவெளியில் நவம்பர் 3-ஆம் நாள் "ஸ்புட்னிக்–2" என்ற மற்றொரு செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்தியது ரஷ்யா, இதில் உலகின் முதன்முதல் உயிரினம் (லைகா என்ற நாய்) அந்த செயற்கைகோளில் விண்வெளிக்குப் பயணித்தது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து வெர்னர் தலைமையிலான அமெரிக்க விஞ்ஞானிகள் குழு அமெரிக்காவின் முதல் செயற்கை கோளான எக்ஸ்ப்ளோரர் என்பதை 1958 ஜனவரி-1 ஆம் தேதி விண்ணுக்கு ஏவி விண்வெளிப்போட்டியை உறுதிசெய்தது.[42][43]
உசாத்துணை
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads