ஒலியனியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒலியனியல்[1] (Phonology, Phonemics, Phonematics) என்பது, மொழிகளில் ஒலிகள் எவ்வாறு முறைப்படி ஒழுங்கமைக்கப்பட்டு உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யும் ஒரு துறை. இது மொழியியலின் ஒரு துணைத்துறையாக உள்ளது. பொதுவாக இத்துறை ஒலியன் தொகுதிகள் குறித்தே கவனம் செலுத்தினாலும், மொழியியல் பொருளைக் கொடுக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட எல்லா மொழிக் கூறுகளின் பகுப்பாய்வுகளையும் இது உள்ளடக்கக் கூடும். சைகை மொழிகளில் உள்ள இணையான ஒழுங்கமைப்பு முறைகள் குறித்த ஆய்வுகளையும் ஒலியனியல் உள்ளடக்கும்.
ஒலியனியல், ஒலியியலில் (phonetics) இருந்து வேறுபட்டது. ஒலியியல், பேச்சொலிகளின் உற்பத்தி, கடத்தல், கேட்டுணர்தல் என்பவை குறித்துக் கவனம் செலுத்தும் அதே வேளை, ஒலியனியல், ஒரு குறித்த மொழியிலோ அல்லது பல மொழிகளிலோ பொருளுணர்த்துவதற்காக ஒலிகள் செயற்படும் முறை குறித்து விளக்குகிறது. ஒரு மொழியில் உள்ள பேச்சொலிகளை அடிப்படையாகக் கொண்டு, சில கொள்கைகளின் அடிப்படையில், ஒலிகளை ஒலியன்களாக இனங்கண்டு, அவற்றின் வருகையிடங்கள், சேர்க்கைகள், அதன் மூலம் அமையும் அசைகள் போன்ற தகவல்களையும், அவற்றுக்கான விளக்கங்களையும் கொடுப்பதே ஒலியனியலின் பணியாகும்[2]. ஒலியியல் விளக்க மொழியியலையும், ஒலியனியல் கோட்பாட்டு மொழியியலையும் சார்ந்தவை என்பது பல மொழியியலாளர்களின் கருத்து. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஒலியன் குறித்த தற்காலக் கருத்துரு வளர்ச்சியடைவதற்கு முன் இவ்வாறு பிரித்துப் பார்க்கும் முறை இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்கால ஒலியனியலின் துணைத்துறைகள் சிலவற்றின் ஆய்வுப் பரப்புகள், உளமொழியியல், பேச்சுணர்தல் போன்ற ஒலியலின் விளக்கமுறை சார்ந்த எல்லைகளுக்குள்ளும் விரிவடைந்து காணப்படுகின்றன.
Remove ads
ஒலியனியலின் வளர்ச்சி
1876-ஆம் ஆண்டில், போலந்து நாட்டைச் சேர்ந்த சான் பௌதியீன் டி கோர்ட்டனே (Jan Baudouin de Courtenay) என்பவர் அவரது முன்னாள் மாணவரான மிக்கோலாய் குருசெவ்சுக்கி (Mikołaj Kruszewski) என்பவருடன் சேர்ந்து "ஒலியன்" என்னும் கருத்துருவை அறிமுகப்படுத்தினார். இவரது ஆக்கம் பெருமளவு அறிஞர்களின் கவனத்தை ஈர்க்காத போதும், இதுவே நவீன ஒலியனியலின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
குறிப்புகள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads