பி. கக்கன்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பி. கக்கன் (P. Kakkan, 18 சூன் 1908 – 23 திசம்பர் 1981)[1] ஒரு விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் ஆவார். இவர் 1957 முதல் 1967 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் இன்னும் இதர பல பொறுப்புகளை வகித்த அரசியல்வாதி ஆவார்.
Remove ads
இளமைக்காலம்
கக்கன் சூன் 18, 1908-ஆம் ஆண்டு, தமிழ்நாடு மதராஸ் இராசதானியாக இருந்தபொழுது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைப்பட்டி என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தை பூசாரி கக்கன், ஊர்க் கோயில் பூசாரியாகப் பணிபுரிந்தவர். இவர் தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்றார். திருமங்கலம் அரசு மாணவர் விடுதியில் தங்கி பி. கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார்.[2][3] கக்கனின் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
Remove ads
இந்திய விடுதலைப் போராட்டம்
கக்கன் தனது பள்ளிப் பருவத்திலேயே காங்கிரசு இயக்கத்தில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.[4] அன்றைய காலகட்டத்தில் பறையர்களும் சாணார்களும் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு ‘கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939’ என்ற சட்டத்தினைக் கொண்டு வந்ததின் விளைவாக, இத்தடை நீக்கப்பட்டது. மதுரையில் கக்கன் பறையர்களுக்கும் சாணார்களுக்கும் தலைமை தாங்கி மதுரைக் கோயிலினுள் நுழைந்தார்.[4] கக்கன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.[4] 1946-இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று1946 முதல் 1950 வரை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார்.[4]
Remove ads
அரசியல் பணி
கக்கன் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்.[5] காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார்.[6][7][8] 1957-இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957-இல் பொறுப்பேற்றுக் கொண்டார்.[9][10] மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.[5] ஏப்ரல் 24, 1962 முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.[11] அக்டோபர் 3, 1963 [5] அன்று மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 1967 வரை அப்பொறுப்பிலிருந்தார். இவர் உள்துறை அமைச்சராக இருந்த போது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. அதில் சுமார் 70 மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டால் இறந்தனர்.[12][13]
நற்பணிகள்
கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை, வீடூர் அணைகள் கட்டப்பட்டன.[4] ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம்[4] உருவாக்கப்பட்டது. இவர் விவசாய அமைச்சராகப் பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள்[4] தொடங்கப்பட்டன.[14] இவர் நாட்டுக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999-ஆம் ஆண்டு வெளியிட்டுக் சிறப்பித்தது.[4]
Remove ads
இறுதிக் காலம்
கக்கன், 1967-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மேலூர் (தெற்கு) தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, திமுக வேட்பாளர் ஒ. பி. ராமனிடம் தோற்றார்.[15] இத்தேர்தல் தோல்விக்குப்பின் 1969 முதல் 1972 வரை தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். 1973-இல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
சமய ஈடுபாடு
கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக இருந்தார். மகாத்மா காந்தியின் வழியைப் பின்பற்றினார். பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான இராமனின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்றும் கருத்து தெரிவித்தார்.[16]
Remove ads
மறைவு
கக்கன் 1981-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக் குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாளில் நினைவிழந்த கக்கன், நினைவு திரும்பாமலேயே 1981 திசம்பர் 23-ஆம் நாள் இறந்தார். 1981-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24-ஆம் நாளில் கண்ணம்மாப் பேட்டையில் உள்ள இடுகாட்டில் எரியூட்டப்பட்டார்.[17]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads