கங்கா நகரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கங்கா நகரம் (மலாய்: Gangga Negara; ஆங்கிலம்: Gangga Nagara; சீனம்: 刚迦王国) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்து இருந்த ஒரு புராதன அரசு. தோராயமாக கி.பி.100-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1000 ஆண்டுகள் வரையில் பேராக் மாநிலத்தின் புருவாஸ் மாவட்டத்தில் கோலோச்சிய அரசு.[1]
இந்தப் பேரரசின் ஆளுமை, பேராக் மாநிலத்தில் உள்ள டிண்டிங்ஸ், மஞ்சோங் பகுதிகளிலும் விரிவு அடைந்து இருக்கிறது. இந்த இடங்களில் கங்கா நகரத்தின் பழமையான கலைப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன. சில பொருட்கள் ஈப்போ நகரத்திற்கு அருகிலும், மேலும் சில கலைப் பொருட்கள் பீடோர் பகுதிகளிலும் கிடைத்து இருக்கின்றன.[2]
கி.பி.1000-ஆம் ஆண்டுகள் வரை, கங்கா நகர அரசர்கள் பீடோர், தெலுக் இந்தான் பகுதிகளையும் ஆட்சி செய்து இருக்கின்றனர். கங்கா நகரப் பேரரசின் தலைநகரம் பேராக், புருவாஸ் சமவெளியில் இருந்தது. கி.பி. 1025 – 1026-ஆம் ஆண்டுகளில் அந்தப் பேரரசு அழிந்து போனது.
தமிழ்நாட்டில் இருந்து படையெடுத்து வந்த இராசேந்திர சோழன் தொடுத்தத் தாக்குதல்களினால், கங்கா நகரம் அழிந்து போனது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[3]
கங்கா நகரத்திற்குச் சான்று சொல்லும் புதைப் பொருட்களும் கிடைத்து இருக்கின்றன. அவற்றில் சில பொருட்கள், புருவாஸ் அரும் காட்சியகத்தில் உள்ளன. இன்னும் சில பொருட்கள், மலேசியாவின் பிரதானக் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.[4]
Remove ads
வரலாறு
செஜாரா மெலாயு (மலாய்:Sejarah Melayu) என்பது பழம் பெரும் மலாய் இலக்கிய மரபு நூல்.[5] அந்த மரபு நூல், மலாயாவின் 1500 ஆண்டு காலச் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட ஒரு காப்பியம். அதில் கங்கா நகரத்தைப் பற்றிய தகவல்கள் உள்ளன.
1500-களில், மலாக்காவில் சுல்தான்கள் ஆட்சி செய்த போது எழுதப்பட்டது. 1511-இல், மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றினார்கள. அப்போது, அசல் ‘செஜாரா மெலாயு’ சுல்தான் மகமுட் ஷாவிடம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டுதான் அவர், பகாங்கிற்குத் தப்பிச் சென்றார்.
அசல் செஜாரா மெலாயு
அதே அந்த அசல் ‘செஜாரா மெலாயு’, பின்னர் 1528-இல் சுமத்திராவில் இருக்கும் கம்பார் நகரத்திற்குக் கொண்டு வரப்பட்டது. போர்த்துகீசியர்கள் சும்மா விடவில்லை. ‘செஜாரா மெலாயு’ வைத் தேடிப் பிடித்துக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களிடம் அந்த ‘செஜாரா மெலாயு’ கொஞ்ச காலம் இருந்தது. பின்னர், ஜொகூரின் அரசப் பிரதிநிதியான ஓராங் காயா சாகோ என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டது. அதுதான் அசல் பிரதி. ஆனால், பழுதடைந்து போய் இருந்தது.
அதன் பிறகு ஜொகூர் சுல்தான்கள், அந்த வரலாற்று நூலைச் செப்பனிட்டு, சில மாற்றங்களையும் செய்தனர். பத்திரமாகப் பாதுகாத்தும் வந்தனர். துன் ஸ்ரீ லானாங் என்பவர்தான் செப்பனிடும் பொறுப்பை ஏற்று இருந்தார். ஜொகூர் சுல்தான்கள் மட்டும் இல்லை என்றால் ‘செஜாரா மெலாயு’வும் இல்லாமல் போய் இருக்கும். அந்த ‘செஜாரா மெலாயு’வின் அசல் பிரதியில் கங்கா நகரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இராஜேந்திர சோழன்
கங்கா நகரம், பேராக் மாநிலத்தின் புருவாஸ், டிண்டிங்ஸ், மாஞ்சோங் பகுதிகளில் வியாபித்து இருந்தது. அந்த இடங்களில் இருந்து கங்கா நகரப் பழம் பெரும் கலைப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன. சில பொருட்கள் ஈப்போவிலும், இன்னும் சில பீடோர் பகுதிகளிலும் கிடைத்து உள்ளன. ஆகக் கடைசியாக, கங்கா நகர அரசர்கள் பீடோர், தெலுக் இந்தான் பகுதிகளை ஆட்சி செய்து இருக்கின்றனர்.
இந்தப் பேரரசின் தலநகரம் பேராக், புருவாஸ் பகுதியில் இருந்து இருக்கிறது. கி.பி. 1025 – 1026-களில் அந்தப் பேரரசு வீழ்ச்சி அடைந்தது. தமிழ்நாட்டில் இருந்து வந்த இராஜேந்திர சோழன் தொடுத்தத் தாக்குதல்களினால், கங்கா நகரம் வீழ்ச்சி அடைந்து போய் இருக்கலாம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.[6] [7]
கங்கையில் ஒரு நகரம்
கங்கா நகரம் என்றால் கங்கையில் ஒரு நகரம் என்று பொருள். சமஸ்கிருதச் சொல். இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீ கங்காநகர் என்று ஓர் ஊர் இருந்தது. இன்னும் இருக்கிறது. அங்கே இருந்துதான் இந்தச் சொல் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.[8]
இந்து வம்சாவளியைச் சேர்ந்த சில வணிகர்கள், ராஜஸ்தானில் இருந்து வெளியேறித் தமிழகத்திற்கு வந்து இருக்கிறார்கள். தமிழகத்தில் சில காலம் வாழ்ந்து இருக்கின்றனர். அங்குள்ள பெண்களை மணந்து அவர்களுடைய கலாசாரங்களைப் பின்பற்றி இருக்கின்றனர். பின்னர் அங்கே இருந்து காவிரி, காரைக்கால், நாகப்பட்டினம் வழியாகத் தென் கிழக்கு ஆசியா நிலப் பகுதிகளில் குடியேறி இருக்கிறார்கள்.
கம்போடியா
இவர்களுடைய முக்கிய நோக்கம் வாணிபம் செய்வதுதான். இடங்களைப் பிடிப்பது அல்ல. அல்லது நாடுகளைப் பிடிப்பதும் அல்ல. இருந்தாலும், காலப் போக்கில் இந்த வணிகர்கள், பல குடியிருப்புப் பகுதிகளையும் சிற்றரசுகளையும் தோற்றுவித்து இருக்கிறார்கள். கம்போடியாவைத் தோற்றுவித்தவர்களும் இவர்கள்தான்.
அந்த வணிக வழிமுறையில் தோன்றியவர்கள்தான் ஜெயவர்மன், சூரியவர்மன் போன்ற இந்து மாமன்னர்கள். பூனான், சென்லா, சாம்பா, கெமர், அங்கோர், லங்காசுகா, சைலேந்திரா, ஸ்ரீ விஜயா போன்ற சாம்ராஜ்யங்களைத் தோற்றுவித்தவர்களும் இந்த இந்திய வணிகர்கள்தான்.[9]
கோத்தா கெலாங்கி
தொடக்கக் காலத்தில் வந்தவர்களில் பல பிரிவுகள் உண்டாகின. இந்தப் பிரிவுகள் ஏற்படுவதற்கு சில நூறாண்டுகள் பிடித்து இருக்கலாம். அதன் பின்னர், அப்படிப் பிரிந்த ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு புதிய இடத்தில் கால் பதித்தனர்.
ஒரு பிரிவு வடக்கு பக்கம் கம்போடியாவிற்குப் போனது. இன்னொரு பிரிவு சுமத்திரா பக்கம் போனது. ஒரு பிரிவு வியட்நாமில் காலடி வைத்தது. ஒரு பிரிவு லங்காவித் தீவிற்கு வந்தது. ஒரு பிரிவு புருவாஸ் பக்கம் போனது. இன்னும் ஒரு பிரிவு கோத்தா கெலாங்கி பக்கம் போனது. இப்படி நிறைய இடங்களுக்குப் பிரிந்து போய் இருக்கின்றனர்.
ஸ்ரீ விஜய பேரரசு
போன இடங்களில் வணிகம் செய்தனர். அங்குள்ள பூர்வீக மக்களுடன் ஒன்றித்துப் போயினர். அப்படியே தங்களுடைய சிற்றரசு, பேரரசுகளையும் உருவாக்கிக் கொண்டனர். அந்த மாதிரி வந்ததுதான் பேராக், புருவாஸ் பகுதியில் உருவாக்கப்பட்ட கங்கா நகரமும் ஆகும். அப்படி வந்ததுதான் சுமத்திராவில் ஸ்ரீ விஜய பேரரசு.
புருவாஸ் நகரில் ஒரு புராதன பேரரசு இருந்து இருக்கிறது. அழிந்து போய் விட்டது என்பதை, வரலாற்று அறிஞர்கள் பல காலமாகத் தெரிந்து வைத்து இருந்தனர். இருந்தாலும் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை. 1849-ஆம் ஆண்டு, அதற்கு ஒரு விடிவெள்ளி கிடைத்தது.
கார்னல் ஜேம்ஸ் லோ
கார்னல் ஜேம்ஸ் லோ எனும் ஆங்கிலேயர் புருவாஸ் பகுதியில் முதல் ஆய்வைச் செய்தார். அந்த இடத்தில் கங்கா நகரம் எனும் ஒரு சிற்றரசு இருந்தது என்பதை உறுதிப் படுத்தினார். அவர் போன பிறகு, அந்த ஆய்வுகள் அப்படியே விடப்பட்டன.
பின்னர் 1940-களில் குவாட்ரிச் வேல்ஸ் எனும் மற்றொரு ஆங்கிலேயர் மறு ஆய்வு செய்தார். இவர்தான் பூஜாங் பள்ளத்தாக்கைப் பற்றி முதன்முதலில் வெளியுலகத்திற்குச் சொன்னவர். இவரும் அதையே உறுதிப் படுத்தினார். அதாவது கங்கா நகரம் இருந்ததை மறு உறுதி செய்தார்.[10]
புருவாஸில் ஓர் இந்து சாம்ராஜ்யம்
கி.பி.100-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1000-ஆம் ஆண்டுகளுக்குள், புருவாஸில் ஓர் இந்து சாம்ராஜ்யம் இருந்து இருக்கிறது என்பதை அவர்கள் இருவரும் உறுதியாகச் சொன்னார்கள். அதன் பின்னர், புருவாஸ் கிராம மக்கள் பல புராதன கலைப் பொருட்களைத் தோண்டி எடுத்தனர்.
அதன் பிறகு பல உண்மைகள் தெரிய வந்தன. தோண்டி எடுக்கப்பட்ட புதைப் பொருட்கள் இப்போது புருவாஸ் அரும் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. அவை 5-ஆம் 6-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த புதைக் கலைப் பொருட்கள் ஆகும்.
சீனாவின் பீங்கான் மங்குகள்
புருவாஸ் காட்சியகத்தில் அந்தப் பொருட்கள் இருக்கின்றன. 128 கிலோ எடை கொண்ட ஒரு பீரங்கி, நீண்ட வாள்கள், கிரீஸ், சில்லறை நாணயங்கள், ஈயக் கட்டிகள், சீனாவின் பீங்கான் மங்குகள், பெரிய ஜாடிகள் போன்றவை தோண்டி எடுக்கப்பட்டு உள்ளன.
நிறைய கல் வெட்டுகள், குறியீடுகள், குறிப்புகள், சின்ன வடிவங்களும் கிடைத்தன. அதன் பின்னர் வரலாற்று ஆசிரியர்களும் கங்கா நகரத்தைப் பற்றி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தனர்.[11]
கிந்தா பள்ளத்தாக்கு
அந்தக் காலத்தில், கங்கா நகரம் புருவாஸ் பகுதியை மட்டும் நிர்வாகம் செய்யவில்லை. ஈப்போவில் இருந்து நான்கு மைல் தொலைவில் பெங்காலான் எனும் ஓர் இடம் இருக்கிறது. அங்கேயும் அரசாட்சி செய்து இருக்கிறார்கள். அந்த இடத்தில் ஆறாம் நூற்றாண்டுப் புத்தர் சிலை 1959-இல் கிடைத்து இருக்கிறது.
கிந்தா பள்ளத்தாக்கு, தஞ்சோங் ரம்புத்தான், பீடோர், சுங்கை சிப்புட் போன்ற இடங்களிலும் கங்கா நகரத்தின் ஆளுமை இருந்து இருக்கிறது. 1952-இல் சுங்கை சிப்புட் பகுதியின் ஜாலோங் கிராமத்தில் ஒரு சிலை கிடைத்தது. ஓர் இந்து சமய அர்ச்சகர் போன்ற சிலை. ஒன்பதாம் நூற்றாண்டுச் சிலை. [12]
தவிர, 1936-ஆம் ஆண்டு, பீடோர் நகரில் மேலும் ஒரு சிலை கிடைத்தது. அங்கே ஆங்கிலோ ஓரியண்டல் ஈயச் சுரங்கம் இருந்தது. அந்த இடத்தில் ஈயம் தோண்டும் போது 79 செண்டிமீட்டர் உயரம் கொண்ட ஒரு புத்தர் சிலை கிடைத்தது. [13]
அந்தச் சிலைகள் அனைத்தும் கங்கா நகர காலத்தில், புழக்கத்தில் இருந்த சிலைகள் ஆகும். ஆக, கங்கா நகரத்தின் நிர்வாக மையம் பல இடங்களில் இடம் மாறி மாறி வந்து இருக்கிறது.
Remove ads
ராஜா சார்ஜானா
கங்கா நகரத்தை ராஜா சார்ஜானா என்பவர் இரண்டாம் நூற்றாண்டில் தோற்றுவித்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். இவர் கம்போடிய அரச வம்சத்தைச் சார்ந்தவர். இவர் கம்போடியாவில் இருந்து கீழே மலாயாவுக்கு வந்து, புதிய கங்கா நகர அரசைத் தோற்றுவித்து இருக்கிறார்.[14] கங்கா நகரத்தை ஆட்சி செய்தவர்களில் ராஜா கங்கா ஷா என்பவரும் ஒருவர். புருவாஸ், பீடோர், தெலுக் இந்தான் போன்ற இடங்களில் கிடைத்த பொருட்களில் காணப்பட்ட வடிவ அடையாளங்கள், எழுத்துகளைப் போன்ற வடிவங்கள் பல மர்மங்களை அவிழ்த்து விடுகின்றன.
கங்கா நகரத்தில் இஸ்லாமிய சமயம்
முதலாம் இராஜேந்திர சோழன் கடாரத்தைத் தாக்கிய பின்னர், கங்கா நகரத்திற்கும் வந்து இருக்கிறார். அங்கேயும் 1025-இல் தாக்குதல் நடத்தி இருக்கிறார். அதில் அழிந்து போனதுதான கங்கா நகரம். அதன் பின்னர் கங்கா நகரத்தில் இஸ்லாமிய சமயம் வேரூன்ற ஆரம்பித்தது. ஆய்வுகள் சொல்கின்றன.
கங்கா நகரத்தைப் போல மேலும் பல இந்திய அரசுகள் மலாயாவில் இருந்து இருக்கின்றன. ஏழாம் நூற்றாண்டில் சீட்டு சாம்ராஜ்யம்; இலங்காசுகம்; பான் பான்; ஸ்ரீ விஜயா; மஜபாகித் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவை காலத்தால் மறக்கப் பட்ட சாம்ராஜ்யங்கள். அண்மையில்தான் அவற்றைப் பற்றிய உறுதியான சான்றுகள் கிடைத்தன.[15]
கங்கா நகரம் என்பது மாபெரும் காலச் சுவடு. காலத்தை வென்ற ஒரு கதாபாத்திரம். இந்தியப் பின்னணிகளைக் கொண்ட ஒரு வரலாற்றுச் சாசனம். இன்றும் இனி என்றும் உயிர் வாழும்!
Remove ads
பெருவாஸ் தமிழ்ப்பள்ளி
மலேசியாவில் பழைமையான பள்ளிகளில் பெருவாஸ் தமிழ்ப்பள்ளியும் (SJK(T) Beruas) ஒன்றாகும். 16 ஆசிரியர்கள் கற்பிக்கும் இந்தப் பள்ளியில் ஏறக்குறைய 170 மாணவர்கள் பயில்கிறார்கள். தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு பற்பல சாதனைகளைப் படைத்து உள்ளது. [16]
பெருவாஸ் தமிழ்ப்பள்ளியின் பாடலில் கங்கையின் வாசம் தென்றலில் வீசும்; இராஜ ராஜ சோழனின் வம்சம் என்று தொடங்கும். அந்த அளவிற்கு இன்று வரை இராஜ ராஜ சோழனின் வரலாறு கங்கா நகரத்தில் நீடித்து நிலைத்து உள்ளது.[17] பெருவாஸ் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி இரஹ்மா துனிசிஷா பேகம் அப்துல் ரஹிமான்.[18]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads