கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை

From Wikipedia, the free encyclopedia

கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை
Remove ads

கிறித்தவ சமய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது [1]. இயேசு கிறிஸ்துவின் போதனைக்குச் செவிமடுத்து அவரைப் பின்பற்றியோர் ஒரு குழுவாக அமைந்த போது அக்குழு திருச்சபை என்னும் பெயர் பெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை என்னும் இக்கட்டுரை[2] உலகளாவிய முறையில் பரந்து விரிந்துள்ள கத்தோலிக்க திருச்சபையில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்துள்ள முதன்மையான நிகழ்வுகளைச் சுருக்கமாகத் தருகின்றது.

Remove ads

கத்தோலிக்க திருச்சபை - பெயர் விளக்கம்

கிரேக்கத்தில் எக்ளேசியா (ekklesia - ἐκκλησία) என்றும் இலத்தீனில் ecclesia என்றும் அமைந்த மூலச் சொல்லுக்கு மக்கள் கூட்டம்/குழு/அவை/சபை (assembly, congregation, church community) என்பது பொருள். ஆங்கிலத்தில் church என்றுள்ள சொல் பழைய ஆங்கிலத்தில் இருந்த "cirice" என்னும் சொல்லின் திரிபு. அச்சொல் "kirika" என்னும் மேற்கு செர்மானிய மூலத்திலிருந்து வருவது. அதற்கும் அடிப்படையாக இருப்பது கிரேக்க மூலம். கிரேக்க மொழியில் kurios (κύριος) என்பது ஆண்டவர், தலைவர், மேல்நர் என்னும் பொருள்தரும். இச்சொல் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசு கிறிஸ்துவைக் குறிக்க கிறித்தவர்களால் பயன்படுத்தப்பட்டது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சார்ந்தவர் குழு/சபை என்பது கிரேக்கத்தில் ekklēsia kuriakē (ἐκκλησία κυριακή =congregation of the Lord). இவ்வாறு church என்னும் சொல் திருச்சபை என்றும், திருச்சபையினர் கூடி வந்து வழிபாடு நடத்துகின்ற கோவில் என்றும் இருபொருள்கள் பெறலாயிற்று.

கத்தோலிக்க என்னும் சொல்லும் கிரேக்க மொழியிலிருந்து வருவதே. இலத்தீனில் catholicus என்பதன் கிரேக்க மூலம் katholikos (καθολικός). அதன் பொருள் பொதுவான, எங்கும் பரந்த, அனைத்தையும் உள்ளடக்குகின்ற என்பது. உரோமையை மைய இடமாகக் கொண்ட கிறித்தவ திருச்சபை கத்தோலிக்க என்னும் பெயரைத் தன் அடைமொழியாகக் கொண்டது. எனவே அத்திருச்சபை உரோமை கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church = R.C. Church) என்னும் பெயராலும் அழைக்கப்படுவதுண்டு. இன்றைய உலகில் கத்தோலிக்க திருச்சபையே பிற கிறித்தவ சபைகளைவிட விரிந்து பரந்து காணப்படுகிறது. அதன் தலைவராகிய போப்பாண்டவரும் உலகறிந்த தலைவராக உள்ளார்.

இக்கட்டுரையில் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் நிகழ்ந்த முதன்மை நிகழ்ச்சிகள் கால வரிசையில் (Timeline) பட்டியலிடப்படுகின்றன. பொது நிகழ்ச்சிகளே குறிக்கப்படுவதால் இந்தியா [3], இலங்கை [4] போன்ற தனி நாடுகளின் திருச்சபை வரலாறு பற்றிய விவரமான வரலாற்றினை வேறு இடங்களில் காணலாம்.

இயேசு கிறிஸ்துவால் தோற்றுவிக்கப்பட்ட சபை திருச்சபை என்று அழைக்கப்படுகிறது. அத்திருச்சபை கத்தோலிக்க திருச்சபையில் உறைகிறது என்பது கத்தோலிக்க கொள்கை. பிற கிறித்தவ சபைகளிலும் கிறித்தவக் கொள்கைகளும் பண்புகளும் உள்ளன என்பதைக் கத்தோலிக்கர் மறுப்பதில்லை. என்றாலும், தன்னகத்தே கிறித்தவ வெளிப்பாட்டின் முழுமை உள்ளது என்பது கத்தோலிக்க சபையின் உறுதிப்பாடு.

Remove ads

திருச்சபையில் ஏற்பட்ட பிளவுகள்

கடந்த இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றைப் பார்க்கும்போது, இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட திருச்சபையில் அவ்வப்போது பெரும் பிளவுகள் ஏற்பட்டதை நாம் அறிகிறோம்.

  • கி.பி. 144 அளவில் மார்சியன் என்பவர் ஒரு பிளவுக்கு அடிகோலினார். கிறித்தவ சபை பழைய ஏற்பாட்டைப் புறக்கணித்து, புதிய ஏற்பாட்டு நூல்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று அவர் வாதாடினார். அவரது கொள்கை (Marcionism) திருச்சபையால் கண்டிக்கப்பட்டது [5].
  • கி.பி. 318இல் ஆரியுசு (Arius) என்பவர் இன்னொரு பிளவுக்கு வழிவகுத்தார். "ஆரியுசு கொள்கை" (Arianism) [6] என்று அழைக்கப்படும் இக்கோட்பாட்டின்படி, கிறித்தவம் "தந்தை" என்று அழைக்கும் கடவுள் தம் "மகன்" இயேசுவைவிட உயர்ந்தவர். தந்தைக் கடவுள் தொடக்கமும் முடிவும் இன்றி எக்காலமும் இருப்பவர்; ஆனால் "மகன்" என்னும் இயேசு தந்தையால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தெய்வப்பண்போடு "படைக்கப்பட்டார்"; படைப்புப் பொருள் என்னும் விதத்தில் இயேசு தம்மைப் படைத்த தந்தையை விடக் குறைந்தவரே. - திருச்சபை இக்கொள்கையைக் கண்டித்தது. திருச்சபைக் கொள்கைப்படி, இயேசு தம் தந்தையாகிய கடவுளோடு எந்நாளும் இருந்துவருகிறார். இருவரிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு கிடையாது. இருவரும் கடவுள் தன்மையில் ஒருவரொருவருக்கு சமநிலையில் உள்ளனர். இயேசு தந்தையின் படைப்பு என்பது தவறு. இயேசு பற்றிய சரியான பார்வையை கி.பி. 325இல் கூடிய முதலாம் நிசேயா சங்கம் வரையறுத்தது.[7]
  • கி.பி. 1054இல் "பெரும் பிளவு" ("Great Schism") என்று அறியப்படுகின்ற "கிழக்கு-மேற்கு பிளவு" (East-West Schism) நிகழ்ந்தது [8]. கி.பி. 70இல் எருசலேம் நகர் அழிந்ததிலிருந்தே கிறித்தவத்தின் மைய இடம் உரோமையாக மாறிற்று. அந்தியோக்கியா, அலெக்சாந்திரியா என்னும் பெருநகர்களில் கிறித்தவம் வலுப்பெற்றிருந்த போதிலும் உரோமையின் முக்கியத்துவம் மேலோங்கியது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. உரோமைப் பேரரசின் தலைநகர் என்னும் அளவிலும், தொடக்க காலக் கிறித்தவக் குழு உரோமையில் குடியேறியிருந்தது என்னும் அளவிலும் உரோமை முக்கியத்துவம் பெற்றது. மேலும் தொடக்க காலத் தலைவருள் ஒருவராகிய புனித பவுல் உரோமையில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்நீத்தார். அதுபோலவே புனித பேதுருவும் அங்கு இறந்தார். பேதுரு இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரு திருத்தூதர்களுள் முதல்வராகக் கருதப்பட்டார்; உரோமையின் ஆயராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். எனவே அவரின் வழிவந்த உரோமை ஆயர்கள் பிற கிறித்தவக் குழுக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். உரோமை நகர் படிப்படியாக முக்கியத்துவம் இழந்த காலகட்டத்தில் உரோமைப் பேரரசின் கீழைப் பகுதியாகிய பைசான்டியம் (Byzantium) முக்கியத்துவம் பெற்றது. அங்கே கான்சுதாந்திநோபுள் (Constantinople) என்னும் புதிய துணைத் தலைநகர் உருவாயிற்று. அந்நகரும் கிறித்தவ சபைகளுள் வலிமை பெற்றது. ஆனால் மேற்குப் பகுதியில் அமைந்த உரோமைக்கும் கிழக்குப் பகுதியில் அமைந்த கான்சுதாந்திநோபுளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு இறையியல் காரணங்களும் இருந்தன. பல ஆண்டுகளாக நிலவிய இழுபறி 1054இல் பெரும் பிளவாக வெடித்தது. திருச்சபையும் கிழக்கு-மேற்கு என்று பிரிந்தது. மேற்கு சபை "உரோமை கத்தோலிக்க திருச்சபை" என்றும் கிழக்கு சபை ஆர்த்தடாக்சு திருச்சபை அல்லது மரபுவழி திருச்சபை (Orthodox Church) என்றும் பெயர் பெற்றன.
  • கி.பி. 1517இல் புரட்டஸ்தாந்து பிளவு நிகழ்ந்தது [9].
  • மேற்கூறிய பிளவுகளுக்கு நடுவிலும் கத்தோலிக்க சபை உலக வரலாற்றில் பெரும் பங்கு ஆற்றிவந்துள்ளது. அச்சபை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிறித்தவம் பரவுவதற்கு வழிவகுத்தது. மேலும், ஆசியா, ஆப்பிரிக்கா, ஓசியானியா போன்ற பகுதிகளிலும் கிறித்தவம் பரவ கத்தோலிக்க திருச்சபை பெரும் தூண்டுதல் அளித்தது. இச்சபை சாதாரண மக்களும் எழுத வாசிக்கக் கற்றுக்கொள்ளும்படி உலகின் பல பகுதிகளில் கல்விக் கூடங்களையும் பல்கலைக் கழகங்களையும் நிறுவியது. நோயாளரின் பராமரிப்புக்காக மருத்துவ மனைகளை ஏற்படுத்தியது. மேலை நாடுகளில் துறவியர் இயக்கம் தோன்றவும் அதன்மூலம் கல்வியறிவு மற்றும் தொழிலறிவு வளரவும் உதவியது. பல்வேறு கவின்கலைகள், இசை, இலக்கியம், கட்டடக்கலை, அறிவியல் ஆய்வுமுறை, நடுவர்குழு வழி நீதி வழங்கும் முறை ஆகியவற்றை வளர்த்தெடுத்தது. மேலும், கிறித்தவக் கொள்கையை ஏற்க மறுத்தோரைத் தண்டிக்கும் வழியாகவும், சிலுவைப் போர்கள் நிகழ்த்தியதன் வழியாகவும் உரோமை கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் குறைபாடுள்ளதாகச் செயல்பட்ட சூழ்நிலைகளும் உண்டு.
Remove ads

திருச்சபை வரலாற்றின் கால கட்டங்கள்

கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான கால கட்டத்தை உள்ளடக்கியது. அதன் வரலாற்றுக் காலங்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்:

(தொடர்ச்சி): திருச்சபை உருவாதல்: கிறிஸ்து பிறப்பு முதல் கி.பி. 33 வரை

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads