கந்த புராணம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கந்த புராணம், அல்லது ஸ்கந்த புராணம் (Skanda Purana), என்பது மகாபுராணங்களில் பதின்மூன்றாவது புராணமாகும். தமிழில் கந்த புராணம் என்பது பொ.ஊ. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாசாரியார் என்பவரால் எழுதப்பட்டது.

கந்த புராணம்

பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள், கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம்.

கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும். இது நூறாயிரம் சுலோகங்களால் ஆனது. அஃது ஆறு சங்கிதைகளைக் கொண்டது. இதில் சங்கர சங்கிதையும் ஒன்றாகும். சங்கர சங்கிதையில் உள்ள பல கண்டங்களில் சிவரகசிய கண்டமும் ஒன்றாகும். இக்கண்டத்தில் ஏழு காண்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் உபதேச காண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களின் தமிழ்த் தொகுப்பே கந்தபுராணமாகும்.

உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது. இது 135 படலங்களையும், 10345 பாடல்களையும் உடைய இது முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது.

Remove ads

நூலாசிரியர்

குமரக் கோட்டத்து முருகக்கடவுள்

காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாசாரியார். அவரின் குமாரர்தான் கச்சியப்ப சிவாசாரியார். குமரக் கோட்டத்து முருகக்கடவுளுக்கு நாள்தோறும் பூசனை செய்த மெய்யன்பில் வடமொழிப் புராணத்தின் சிறப்பினைத் தமிழ்கூறு நல்லுலகம் அறியும் வண்ணம் இந்தப் புராணத்தை இயற்றினார். அதன்பின் குமரக் கோட்டத்திலேயே அரசர், பிரபுக்கள், கல்வி கேள்விகளில் சிறந்த வல்லுநர்கள் முன்னிலையில் தினம் ஒரு பகுதியாகப் பாடிப் பொருள் கூறி விளக்கி ஓராண்டு காலமாகத் தன் நூலினை அரங்கேற்றினார்.

அரங்கேற்றம்

அரங்கேற்றம் முற்றுப் பெற்ற நாளில் கச்சியப்ப சிவாசாரியாரைத் தங்கச் சிவிகையில் ஏற்றித் தொண்டை மண்டலத்தின் இருபத்துநான்கு வேளாளர்களும் காஞ்சியின் மற்றையோரும் சிவிகை தாங்கியும் சாமரம் வீசியும் குடை, கொடி முதலானவைகளை எடுத்துப் பிடித்தும் வீதிவலம் வந்து நூலையும் ஆசிரியரையும் சிறப்புச் செய்தனர் என்று படிக்காசுப் புலவரின் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.

Remove ads

கந்தபுராணம் காலம்

மாணிக்கவாசகர், கம்பர், முதலானவர்களோடு ஒப்பிட்டு பொ.ஊ. 7 முதல் 17 வரை பல்வேறு காலங்களைக் கந்தபுராணத்துக்குச் சார்த்துகின்றனர். இவற்றின் வன்மை மென்மைகளைச் சீர்தூக்கி மு. அருணாசலம் 14-ஆம் நூற்றாண்டு என்னும் முடிவுக்கு வருகிறார்.

நூல்சிறப்பு

இந்நூல் சொற்பொருட் சுவையும் பக்திச் சுவையும் மிக்கதாக இருப்பதால் தமிழ்ப்புலவர்களாலும் முருகன் அடியார்களாலும் மிகவும் சிறப்பாகப் போற்றப்படுகிறது.இதனாலேயே "கந்த புராணத்தில் இல்லாதது வேறு எந்தப் புராணத்திலும் இல்லை" எனச் சிறப்பிக்கப்படுகின்றது. சிவனுடைய முக்கண்களாகக் கூறப்படும் புராணங்களில் கந்தபுராணம் நெற்றிக்கண்ணாகும்.

கந்த புராணமும் கம்பராமாயணமும்

கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒரேமாதிரியான காப்பிய அமைப்பினைப் பெற்றவை. பலவிதங்களில் இரண்டுக்கும் ஒப்புமை கூறி விளக்கிடுவர் தமிழ்ச்சான்றோர்.

  • இரண்டின் காலமும் பன்னிரண்டாம் நூற்றாண்டு.
  • இரண்டிலும் காண்டங்கள் ஆறு.
  • ஒன்றில் முருகன் தலைவன்; மற்றதில் இராமன்.
  • இதில் வீரபாகு துணைவன்; மற்றதில் இலக்குவன்.
  • இதில் சூரபத்மன் பகைவன்; மற்றதில் இராவணன்.
  • இதிலே பூதகணங்கள் படைகள்; மற்றதில் குரங்கினமே படைகள்.
  • இரண்டிலும் பகைவனுக்கு மைந்தர்கள்.
  • ஒன்றில் சிறையிருந்தவர் சயந்தன், மற்றதில் சீதை.
  • இதிலே போருக்குக் காரணம் அசமுகி; மற்றதில் சூர்ப்பனகை.

இதுபோல் நிறைய ஒப்பீடுகளுடன் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.

Remove ads

கருவிநூல்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads