கம்பார்

From Wikipedia, the free encyclopedia

கம்பார்map
Remove ads

கம்பார் (ஆங்கிலம்: Kampar; மலாய்: Kampar; சீனம்: 金宝)எனும் நகரம் மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ளது. கம்பார் மாவட்டத்தின் பெயரும் கம்பார் என்றே அழைக்கப் படுகின்றது. கம்பார் நகரம் மலேசியாவில் மிகவும் விரைந்து வளர்ச்சி பெற்று வரும் நகரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.[1]

விரைவான உண்மைகள் கம்பார்Kampar பேராக், நாடு ...

2007-ஆம் ஆண்டு மே மாதம் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் இங்கு உருவாக்கப்பட்டது. பல்கலைக்கழகம் கட்டப்படுவதற்கு பேராக் மாநில அரசு 1300 ஏக்கர் நிலப்பரப்பை வழங்கியது. அதன் பின்னர் பண்டார் பாரு கம்பார் எனும் ஒரு புதுத் துணை நகரம் தோற்றுவிக்கப் பட்டது. இந்தத் துணை நகரத்தில் 20,000 மாணவர்கள் உயர் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.

கம்பார் நகரத்தில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் தமிழர்களையும் கணிசமான எண்ணிக்கையில் காண முடியும். கம்பார் நகரைச் சுற்றிலும் அடர்ந்த பச்சைக் காடுகளும் கண்ணுக்கு இனிய கனிமக் குன்றுகளும் காணப்படுகின்றன.[2]

Remove ads

புவியியல்

கம்பார் நகரம் கிந்தா பள்ளத்தாக்கில் அமைந்து இருக்கிறது. கிந்தா பள்ளத்தாக்கு ஈயக் கனிமத்திற்கு பெயர் போன இடம். ஈயம் தோண்டி எடுக்கப்பட்ட இடங்கள் ஈயக் குட்டைகளாக மாறியுள்ளன. அந்தக் குட்டைகளில் இப்போது மீன்கள் வளர்க்கப்படுகின்றன. மீன் வளர்ப்புத் துறை உபரி வருமானத்தை ஈட்டித் தரும் துறையாக மாறி வருகிறது.[3]

கம்பார் நகரம் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பிரிவு பழைய நகரம் என்றும், இன்னொரு பிரிவு புதிய நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது. பழைய நகரத்தில் உலகப் போர்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. சில கட்டிடங்கள் கலாசாரப் பாரம்பரியச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பண்டார் பாரு கம்பார்

பழைய நகரத்தில் காப்பிக் கடைகள், மளிகைக் கடைகள், ஆடை ஆபரணங்களை விற்கும் கடைகள், சில்லறைச் சாமான்கள் கடைகள், பழைய பாணியிலான உணவகங்களைக் காணலாம். புதிய நகரத்தில் பெரும்பாலும் வீடமைப்புத் திட்டங்கள் அமைந்து உள்ளன. அடுக்கு மாடிக் கட்டிடங்கள், அரசாங்க அலுவலகங்கள், பொதுச் சேவை நிறுவனங்கள் போன்றவை உள்ளன.

பண்டார் பாரு கம்பார் எனும் புதிய நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு கல்விக் கழகங்கள் உள்ளன. 2009-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி, கம்பார் நகராண்மைக் கழகம், பேராக் மாநிலத்தின் 10-ஆவது மாவட்டமாக அதிகாரப் பூர்வமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.[4][5]

Thumb
கம்பார் நகரத்தின் அகலப்பரப்புக் காட்சி
Remove ads

வரலாறு

Thumb
கம்பார் நகரத்தில் உருவாகி வரும் வானளாவி கட்டடங்கள்

கம்பார் நகரம் 1887-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதன் பழைய பெயர் மெம்பாங் டி அவான்[6]. 1894 மார்ச் 13-இல் மம்பாங் டி அவான் எனும் பெயர் கம்பார் என மாற்றம் கண்டது. கம்பார் எனும் பெயர் வருவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.[7]

சீனக் கண்டனீஸ் மொழியில் காம் பாவ்[6] என்றால் விலை உயர்ந்த தங்கம் என்று பொருள். அந்தக் கால கட்டத்தில் கம்பார் பகுதியில் ஈயம் அளவுக்கு மீறிக் காணப்பட்டதால் சீனர்கள் காம் பாவ் என்று அழைத்து இருக்கலாம். காம் பாவ் எனும் சொல் மருவிக் கம்பார் ஆனது என்று ஒரு சாரார் கருத்துச் சொல்கின்றனர்.

கம்பார் ஆறு

அடுத்து கம்பார் நகரில் கம்பார் ஆறு ஊடுருவிச் செல்வதால் கம்பார் எனும் பெயர் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. சுமாத்திரா, ரியாவ் தீவுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய இந்தோனேசியர்கள் அந்த ஆற்றுக்குக் கம்பார் ஆறு என்று பெயர் வைத்து இருக்கலாம் என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த இரு கூற்றுகளையும் ஆய்வு செய்த ஆய்வாளர்கள், கம்பார் ஆற்றின் பெயரிலிருந்து தான் கம்பார் எனும் சொல் வந்ததாக உறுதிப்படுத்துகின்றனர். கம்பார் எனும் சொல்லிலிருந்து தான் காம் பாவ் எனும் சீனச் சொல் மருவியது. இது மலேசிய வரலாற்று அறிஞர்களின் இறுதியான முடிவு.

கம்பார் போர்

1941-ஆம் ஆண்டிலிருந்து 1945-ஆம் ஆண்டு வரையிலான சப்பானியர்கள் ஆட்சியின் வரலாற்று ஏடுகளில் கம்பார் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இங்குதான் வரலாற்றுப் புகழ் பெற்ற கம்பார் போர் (Battle of Kampar) நடந்தது.

இந்தப் போர் 1941 டிசம்பர் 30 தொடங்கி 1942 சனவரி 2-ஆம் தேதி வரை நடந்தது. இந்தப் போரில் ஏறக்குறைய 3000 இந்திய, பிரித்தானிய, கூர்கா கூட்டுப் படை வீரர்களும் 6000 சப்பானியப் படை வீரர்களும் ஈடுபட்டனர். தீபகற்ப மலேசியாவின் வடக்கே இருந்து வந்த சப்பானியர்களைத் தடுத்து நிறுத்தியது இந்தக் கம்பார் நிகழ்ச்சி தான். சப்பானியர்கள் சற்றும் எதிர்பார்க்காத நிகழ்வு.

கூட்டுப் படையினர் இப்படியொரு பெரிய எதிர்ப்பைக் கொடுப்பார்கள் என்று சப்பானியப் படையினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சப்பானியர்கள் விமானங்களைக் கொண்டு கூட்டுப் படையினரைத் தாக்கினர். இருப்பினும், கூட்டுப் படையினரின் தற்காப்பு அரணைத் தாண்டி அவர்களால் போக முடியவில்லை.

போர் வீரர்களுக்கு நினைவாலயம்

ஆகவே, மேற்குப் பகுதியில் இருக்கும் மலாக்கா நீரிணை வழியாக விமானங்கள் மூலமாக ஜப்பானியர்கள் தாக்குதல் நடத்தினர். தெலுக் இந்தான் நகரிலிருந்து ஜப்பானியர்களுக்குக் கூடுதல் படைகள் வந்து சேர்ந்தன. இந்தப் போர் மூன்று நாட்கள் நீடித்தது. வேறு வழி இல்லாமல் மூன்றாவது நாள் கூட்டுப் படைகள் பின் வாங்கின.

போர் இறுதியில் 150 கூட்டுப் படை வீரர்களும் 500 ஜப்பானியப் படை வீரர்களும் பலியாயினர்[8]. கம்பார் போரைப் பற்றிச் சாய் கூய் லூங் எனும் ஒரு வரலாற்று ஆய்வாளர் நிறைய ஆய்வுகளைச் செய்துள்ளார்.

இந்தப் போரில் மறைந்தவர்களுக்கு நினைவாலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து கூட்டுப் படை வீரர்களும், அவர்களுடைய உறவினர்களும் இந்த நினைவாலயத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டுப் போகின்றனர். அப்படி வரும் கூட்டுப் படை வீரர்களில் சிலர் 90 வயதுகளைத் தாண்டியவர்கள்.

Remove ads

மக்கள் பரம்பல்

மேலதிகத் தகவல்கள் கம்பார் நகரத்தின் இனக்குழுக்கள் (2020) ...

கம்பார் நகரத்தின் மக்கள் தொகை 67,000[6]. இதில் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 20,000 மாணவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. கம்பாரில் பெரும்பாலோர் சீனர்கள்.

மலேசியத் தமிழர்களின் மக்கள் தொகை 15 விழுக்காடு. தமிழர்கள் அரசாங்கத் துறைகளிலும் உடல் உழைப்புப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். தவிர, மளிகைக் கடைகள், ஒட்டுக் கடைகள், துணிக்கடைகள், உணவகங்கள், காய்கறிக் கடைகள் போன்றவற்றையும் நடத்தி வருகின்றனர்.

பூர்வீகக் குடிகள்

கம்பாரில் சீக்கியர்களும் ஓரளவுக்கு அதிகமாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் பாதுகாவலர் வேலைகளைச் செய்கின்றனர். சிலர் பசு மாடுகளை வளர்ப்பதன் மூலம் பால் பண்ணைகளை வைத்து நடத்துகின்றனர். ஒரு சிலர் வட்டித் தொழிலும் செய்கின்றனர்.

கம்பார் மலைவளங்கள் சூழ்ந்த பகுதி. சுற்றிலும் பச்சைப் பசேலென நிறைய காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் பூர்வீகக் குடிகள் வாழ்கின்றனர். இவர்களை ஓராங் அஸ்லி என்று அழைக்கிறார்கள். இவர்கள் காட்டில் கிடைக்கும் தாவரங்கள், மூலிகைகள், மருந்து வேர்கள் போன்றவற்றைக் கொண்டு வந்து விற்கின்றனர்.

கலாசாரம்

கம்பார் நகரத்தின் மக்கள் மட்டும் அல்ல, மலேசியாவின் அனைத்து மக்களும் இனம், மொழி, சமயம், கலாசாரம், பண்பாடு போன்றவற்றினால் மாறுபட்டுள்ளனர். இருந்தாலும் அவர்கள் ஒரே மலேசியா எனும் கொள்கையின் கீழ் ஒன்றுபட்டுச் செயல்படுகின்றனர்.

கம்பார் வாழ் தமிழர்கள் தைப்பூசத் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். சுற்று வட்டாரங்களில் பல கோயில்கள் உள்ளன.

இந்துக் கோயில்கள்

  • ஸ்ரீ ராம பக்த அனுமான் கோயில்
  • ஆஞ்சநேயர் ஆலயம்
Remove ads

பொருளியல்

Thumb
கம்பார் தொடருந்து னிலையம்

19-ஆம் 20-ஆம் நூற்றாண்டுகளில் கம்பார் நகரத்தின் பொருளாதாரம், பெரும்பாலும் ஈயத் தொழிலையே நம்பி இருந்தது. 1980-களில் ஏற்பட்ட பொருளியல் மந்த நிலையினால் பல ஈய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை மூடின. அண்மைய காலங்களில் பொருளியல் மந்த நிலை மாறி வழக்க நிலைக்கு மெதுவாகத் திரும்பிக் கொண்டு இருக்கின்றது.

மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை திறந்தபிறகு கம்பார் நகரத்தின் வாணிகம் பெரிதும் பாதிப்புற்றது. கோலாலம்பூரிலிருந்து பினாங்கிற்குச் செல்லும் பயணிகள் கம்பார் நகரத்திற்கு வருவதைக் குறைத்துக் கொண்டனர்.

அதற்கு முன்னர் எல்லா வாகனங்களும் கம்பார் வழியாகத் தான் பினாங்கிற்குச் செல்ல வேண்டி இருந்தது. அதனால் கம்பார் நகரத்தில் உள்ள கடைகளில் நல்ல வியாபாரம் நடைபெற்றது. பணப் புழக்கமும் நல்ல நிலையில் இருந்தது. 2007ல் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் திறந்தபின்னர், கம்பாரின் பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது.

நன்னீர்க் குளங்கள்

கம்பார் நகரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான நன்னீர்க் குளங்கள் உள்ளன. இவை அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. ஏற்கனவே ஈயக் குட்டைகளாக இருந்தவை. அவற்றைச் சுத்தம் செய்து மீன் வளர்ப்பதற்கு ஏற்றவைகளாக மாற்றம் செய்து உள்ளனர்.

இந்தக் குளங்களில் திலப்பியா, பெங்காசியுஸ், காலோய், தூத்தூ, தோங்சான், மயிரை மீன்கள் வளர்க்கப் படுகின்றன. இவற்றுக்கு அருகில் கோழிப் பண்ணைகள், வாத்துப் பண்ணைகளும் இருக்கின்றன. காய்கறித் தோட்டங்களும் உள்ளன. 2008 ஆகத்து மாதம் 13-ஆம் தேதி புதிய நகரத்தில் ’தெஸ்கோ’ பேரங்காடி திறக்கப்பட்டது. அதற்கு முன்னர் பழைய நகரத்தில் மீனாட் பேரங்காடி, தார்கெட் பேரங்காடிகள் செயல்பட்டு வந்துள்ளன.

Remove ads

கல்வி

Thumb
துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம்

பண்டார் பாரு கம்பாரில் கல்வி பயில வந்து உள்ள மாணவர்கள் ஓர் ஆண்டிற்கு 200 மில்லியன் ரிங்கிட் செலவு செய்கின்றனர் என்பது அண்மைய புள்ளி விவரங்கள். இன்னும் 5-10 ஆண்டுகளில் கம்பாருக்கு அருகில் உள்ள குவா தெம்புரோங் எனும் இடத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி தோற்றுவிக்கப்பட இருக்கின்றது.

அதனால், பண்டார் பாரு கம்பாரில் மாணவர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டார் பாரு கம்பாரை அங்குள்ள மாணவர்கள் கம்பார் புத்ரா என்றும் அழைக்கின்றனர்.

தற்சமயம் கம்பார் நகரம் உயர்க் கல்வியின் ஒன்று படுத்தும் மையமாகத் திகழ்கின்றது. துங்கு அப்துல் ரகுமான் கல்லூரி, துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் போன்ற உயர்க் கல்விக் கூடங்கள் உள்ளன. தவிர, மெனாரா ஜெயா கல்லூரி, ஸ்ரீ ஆயூ கல்லூரிகளும் உயர் கல்வியை வழங்கி வருகின்றன.

கம்பாரில் சில முக்கியமான அரசு பள்ளிகள்

  • பெய் யுவான் உயர்நிலைப்பள்ளி
  • பெய் யுவான் சீனத் தொடக்கப் பள்ளி
  • பெய் யுவான் சீன உயர்நிலைப் பள்ளி
  • மெதடிஸ்ட் தொடக்கப் பள்ளி
  • மெதடிஸ்ட் உயர்நிலைப் பள்ளி
  • கம்பார் உயர்நிலைப் பள்ளி
  • கம்பார் பெண்கள் சீனப் பள்ளி
  • சுங் ஹுவா சீனப் பள்ளி
  • கம்பார் தமிழ்ப் பள்ளி
  • ஸ்ரீ கம்பார் உயர்நிலைப் பள்ளி
  • லா சால் உயர்நிலைப் பள்ளி
  • செந்தோசா உயர்நிலைப் பள்ளி
  • கம்பார் தொடக்கப் பள்ளி
Remove ads

கம்பார் தமிழ்ப்பள்ளி

கம்பார் தமிழ்ப்பள்ளி 1928-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. முதன் முதலில் கம்பார் நகருக்கு அப்பால் புறநகர்ப் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் அந்தப் பள்ளி செயல் பட்டு வந்தது. 1939 முதல் 1964 வரை கம்பார் நகரில் உள்ள பழைய புகை வண்டி நிலையத்திற்குச் செல்லும் பாதையில் ஒரு பலகை வீட்டில் ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம்.

1959-ஆம் ஆண்டு பேராக் கல்வி இலாகா, கம்பார் ஜாலான் இஸ்காந்தர் சாலை ஓரத்தில் இரண்டு வகுப்பு அறைகளைக் கொண்ட ஒரு பள்ளியைத் தற்காலிகமாக எழுப்பிக் கொடுத்தது.

தற்பொழுது இப்பள்ளியில் 260 மாணவர்கள் பயில்கின்றனர். 17 ஆசிரியர்கள் 3 அலுவகப் பணியாட்கள் 3 தோட்டப் பணியாட்கள் உள்ளனர். 2

Remove ads

துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம்

மலேசியாவில் வாழும் சீனர்களுக்கு ஒரு தனிப்பட்ட பல்கலைக்கழகம் வேண்டும் என்று அவர்கள் வெகுநாட்களாக அரசாங்கத்துடன் போராடி வந்தனர். அரசாங்கத்திற்கும் சீன சமுதாயத்திற்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து வந்தது. சீனர்களிடம் கோடிக் கோடியாகப் பணம் இருந்தும் மத்திய அரசாங்கத்தின் அனுமதி மட்டும் கிடைக்கவில்லை.

மலேசியத் தந்தை என்று புகழப் படும் மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் பெயரிலேயே பலகலைக்கழகம் திறக்கப் படும் எனும் கருத்து முன் வைக்கப்பட்டது. அதன் பின்னர் தான் 2001ல் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தது. பெட்டாலிங் ஜெயாவில் முதல் வளாகம் திறக்கப் பட்டது. அதை அடுத்து தலைமை வளாகம் ஒன்றைக் கட்ட மலேசியச் சீனர்கள் முடிவு செய்தனர். பல மாநிலங்கள் நிலம் கொடுக்க முன் வந்தன. இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்தபின்னர் பேராக் மாநிலத்தின் கம்பாரில் கட்டுவதென முடிவு செய்யப் பட்டது.

பேராக் மாநில அரசு

2003 ஆம் ஆண்டு பேராக் மாநில அரசு 3000 ஏக்கர், அதாவது 5.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை, துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியது. அந்தப் பல்கலைக்கழகத்தைக் கட்டி முடிக்க நான்கு ஆண்டுகள் பிடித்தன.

இந்தப் பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் நிறைய பசும் குன்றுகள், மீன் குளங்கள் உள்ளன. இயற்கையின் ரம்மியமான பின்னணியில் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் கட்டப் பட்டுள்ளது. பல நவீன வசதிகளுடன் உருவாக்கப் பட்டுள்ள இந்தக் கல்வி மையம் சீனர்களின் சமுதாய இலட்சியமாகக் கருதப்படுகிறது.

Remove ads

அரசியல்

கம்பார் ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஆகும். இந்தத் தொகுதியில் மாலிம் நாவார், கெராஞ்சி, தூவாலாங் செக்கா என மூன்று சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. பொதுத் தேர்தல்களில் கம்பார் தொகுதி ஒரு சூடான தொகுதியாக விளங்கும். பாரிசான் நேஷனல் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சியான சனநாயக செயல் கட்சிக்கும் பலத்த போட்டி ஏற்படும். 2008 ஆம் ஆண்டுத் தேர்தலில் பாரிசான் தேசிய ஆளும் கட்சியின் வேட்பாளர் லீ சீ லியோங் வெற்றி பெற்றார்.

Thumb
2008ல் பேராக் மாநிலத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.

கம்பார் நாடாளுமன்றத் தொகுதி (பி70)

  1. லீ சீ லியோங் (பாரிசான் நேஷனல்) : 20,126
  2. கியோங் மெங் சிங் (ஜனநாயக செயல் கட்சி) : 17,429
  • மொத்த வாக்காளர்கள்  : 59,784
  • செல்லுபடியாகாத வாக்குகள்  : 1,048
  • வாக்களித்தவர்கள் : 38,953
  • திரும்பி வராத வாக்குகள்  : 350
  • வாக்கு விழுக்காடு : 65.16%
  • பெரும்பான்மை  : 2,697

மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி (என்40)

  1. கெஷ்விந்தர் சிங் த/பெ காஷ்மீர் சிங் (ஜனநாயக செயல் கட்சி): 7,801
  2. சாய் சோங் போ (பாரிசான் நேஷனல்)  : 6,439
  • மொத்த வாக்காளர்கள்  : 23,276
  • செல்லுபடியாகாத வாக்குகள்  : 364
  • வாக்களித்தவர்கள் : 14,647
  • திரும்பி வராத வாக்குகள்  : 43
  • வாக்கு விழுக்காடு : 62.93%
  • பெரும்பான்மை  : 1,362

கெராஞ்சி சட்டமன்றத் தொகுதி (N41)

  1. சென் பூக் சாய் (ஜனநாயக செயல் கட்சி): 8,459
  2. சோங் முன் வா (பாரிசான் நேஷனல்)  : 4,024
  • மொத்த வாக்காளர்கள்  : 19,857
  • செல்லுபடியாகாத வாக்குகள்  : 212
  • வாக்களித்தவர்கள் : 12,738
  • திரும்பி வராத வாக்குகள்  : 43
  • வாக்கு விழுக்காடு : 64.15%
  • பெரும்பான்மை  : 4,435

தூவாலாங் செக்கா சட்டமன்றத் தொகுதி (N42)

  1. நூலி அஷிலின் பிந்தி முகமட் ராட்ஷி (பாரிசான் நேஷனல்) : 6,366
  2. நடராஜா த/பெ மாணிக்கம் (பி.கே.ஆர் மக்கள் கூட்டணி)  : 4,797
  • மொத்த வாக்காளர்கள்  : 16,651
  • செல்லுபடியாகாத வாக்குகள்  : 361
  • வாக்களித்தவர்கள் : 11,578
  • திரும்பி வராத வாக்குகள்  : 54
  • வாக்கு விழுக்காடு : 69.53%
  • பெரும்பான்மை  : 1,569

பொது

20-ஆம் நூற்றாண்டில் கம்பார் நகரம் ஈய உற்பத்திக்குப் பெயர் போனது. ஒரு கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கு என்றால் அது கம்பார் தான் என்று புகழ் பெற்று விளங்கியது. அனைத்துலகச் சந்தையில் ஈயத்தின் விலை குறைந்ததும் கம்பாரில் ஈயம் எடுப்பதும் நின்று போனது. இதைத் தவிர கம்பார் ஈயக் கையிருப்பும் வற்றிப் போனது.

அதனால், கம்பார் நகரத்தின் பொருளாதாரமும் நிலைகுத்திப் போய், இப்போதைக்கு ஒரு சமநிலையான தன்மையிலிருந்து வருகிறது. கம்பார் நகரத்தின் அடியில் இன்னும் இருபது ஆண்டுகளுக்குத் தோண்டி எடுக்கப்படக்கூடிய ஈயம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. கம்பார் கோடீஸ்வரர்கள் ஒரு குழுவாக இணைந்து முயற்சி செய்தனர். பல பில்லியன் பணத்தை மூலதனமாகப் போடுவதற்கும் முன் வந்தனர். ஆனால், கம்பார் மக்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை. அத்துடன், மலேசிய அரசாங்கமும் அந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads