குயின் நடவடிக்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குயின் நடவடிக்கை (Operation Queen) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நேச நாடுகளுக்கும், நாசி ஜெர்மனிக்கும் நடந்த ஒரு சண்டை. சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேசநாட்டுப் படைகள் ஜெர்மனியின் ரோயர் பகுதியைக் (Rur) கைப்பற்ற முயன்று தோற்றன.
1944ல் நேசநாட்டுப் படைகள் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் மீது படையெடுத்தன. ஜூன் மாதம் துவங்கிய இத்தாக்குதலால் சில மாதங்களுக்குள் பிரான்சின் பெரும் பகுதி ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு விட்டன. செப்டம்பர் மாதத்தில் நேசநாட்டுப் படைகள் பிரெஞ்சு-ஜெர்மானிய எல்லையை அடைந்து விட்டன. கடந்த மாதங்களின் அதிவேகமான முன்னேற்றத்தால் சற்றே நிலை குலைந்திருந்த அவை ஜெர்மானிய எல்லை அரணான சிக்ஃபிரைட் கோட்டினைத் தாக்கும் முன்னர் சிறிது காலம் தாமதப்படுத்தின. இந்த காலதாமதத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் சிக்ஃபிரைட் கோட்டிற்குப் பின்னிருந்த ரோயர் பகுதியை வெகுவாக பலப்படுத்தி விட்டார்கள். அப்பகுதியிலிருந்த கிராமங்கள், காடுகள், ஊர்கள் ஆகியவை நன்றாக ஒன்றிணைக்கப்பட்டு பதுங்கு குழிகளால் பாதுகாக்கப்பட்டிருந்தன. அக்டோபர் மாதம் ரோயர் பகுதியின் மீது அமெரிக்கத் தாக்குதல் ஆரம்பமாகியது. நன்கு அமைக்கப்பட்டிருந்த அரண் நிலைகளின் மீது நேரடியாக மோதிய அமெரிக்கப் படைகளுக்குத் தோல்வியே கிட்டியது. ரைன் ஆற்றங்கரையை அடைய இப்பகுதியைக் கைப்பற்ற வேண்டியது அவசியமென்பதால், அடுத்த கட்ட தாக்குதலுக்கு திட்டம் வகுத்தனர் அமெரிக்கத் தளபதிகள்.
புதிய தாக்குதல் திட்டத்துக்கு குயின் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. அதன்படி ரோயர் பகுதியை வான்வழியே பெரும் குண்டு வீச்சுக்கு உள்ளாக்க வேண்டும். அரண்நிலைகளைத் தரைவிரிப்பு குண்டுவீச்சு (carpet bombing) மூலம் அழித்துவிட்டு பின்னர் தரைப்படைகள் முன்னேறி ரோயர் பகுதியைக் கைப்பற்ற வேண்டும். திட்டமிட்டபடி நவம்பர் 16, 1944 அன்று பிரிட்டானிய வான்படையும், அமெரிக்க வான்படையும் ரோயர் பகுதி நகரங்கள் மீது தங்கள் குண்டு வீச்சினைத் தொடங்கின. யூலிக், டியூரென், எஷ்வெய்லர், ஆல்டென்ஹோவன், ஹெய்ன்ஸ்பெர்க், எர்கெலென்ஸ், ஹக்கெல்ஹோவன் போன்ற நகரங்கள் மீது இடைவிடாது குண்டுவீசப்பட்டது. இத்தாக்குதலில் பல நகரங்கள் பெரும் சேதமடைந்தன. பொது மக்களுக்குப் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஆனால் ராணுவ ரீதியாக எந்தப் பலனும் கிட்டவில்லை. நகரங்களைச் சுற்றி அமைந்திருந்த ஜெர்மானிய அரண்நிலைகளை அழிக்க இந்த குண்டுவீச்சு பெரும்பாலும் தவறிவிட்டது. இதனால் நவம்பர் 16, நண்பகல் தொடங்கிய நேசநாட்டுத் தரைப்படை முன்னேற்றம் விரைவில் தடைபட்டது.
அடுத்த முப்பது நாட்களுக்கு இப்பகுதியில் கடும் சண்டை நிகழ்ந்தது. அமெரிக்கப்படைகள் மெதுவாக கிராமம் கிராமமாகக் கைப்பற்றி முன்னேறின. பல இடங்களில் இரு தரப்பினருக்கும் பதுங்குகுழிச் சண்டைகள் (trench warfare) மூண்டன. ஜெர்மானியரின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கப்படைகள் டிசம்பர் மாதம் ரோயர் ஆற்றை அடைந்துவிட்டன. ஆனால் டிசம்பர் 16ம் தேதி ஜெர்மானியப் படைகள் ஆர்டென் காட்டுப் பகுதியில் பல்ஜ் தாக்குதலைத் தொடங்கியதால் ரோயர் பகுதிக்கான சண்டை முடிவுக்கு வந்தது. இரு தரப்பும் இதில் ஈடுபட்டிருந்த படைப்பிரிவுகளை பல்ஜ் தாக்குதலில் ஈடுபடுத்துவதற்காகப் பின் வாங்க உத்தரவிட்டன. பல்ஜ் தாக்குதல் முடியும் வரை ரோயர் பகுதியில் இழுபறி நிலையே நிலவியது. பெப்ரவரி 1945ல் தான் அமெரிக்கப் படைகள் ரோயர் ஆற்றைக் கடந்து இப்பகுதியைக் கைப்பற்றின.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads