குரூசேடர் நடவடிக்கை

From Wikipedia, the free encyclopedia

குரூசேடர் நடவடிக்கை
Remove ads

குரூசேடர் நடவடிக்கை (Operation Crusader) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் பிரிட்டானிய 8வது ஆர்மி லிபியாவின் கிழக்குப் பகுதியில் அச்சுநாட்டுப் படைகளை முறியடித்து பின்வாங்கச் செய்தது.

விரைவான உண்மைகள் குரூசேடர் நடவடிக்கை, நாள் ...

1941ல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் அச்சு நாட்டுப் படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது. தோற்கும் நிலையிலிருந்த இத்தாலியப் படைகள் ரோம்மலின் தலைமையிலான ஜெர்மானிய ஆப்பிரிக்கா கோரின் வருகையால் தப்பினர். நேச நாட்டுப் படைகளின் மீது எதிர்த்தாக்குதலைத் தொடங்கிய ரோம்மல் விரைவில் லிபியாவின் கிழக்குப் பகுதியில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி விட்டார். பலம் வாய்ந்த டோப்ருக் கோட்டையை முற்றுகையிட்டார். டோபுருக்கை மீட்டு லிபியாவிலிருந்து ரோம்மலை விரட்ட நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட பிரீவிட்டி நடவடிக்கை, பேட்டில்ஆக்சு நடவடிக்கை போன்றவை தோல்வியில் முடிவடைந்தன. நவம்பர் 18ம் தேதி ரோம்மலை லிபியாவிலிருந்து விரட்ட பிரிட்டானியப் படைகள் மூன்றாவதாக ஒரு முயற்சியைத் தொடங்கின. இதற்கு குரூசேடர் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது.

ரோம்மலின் முன்னணிப் படைகளை பிரிட்டானிய கவசப் படைகள் லிபியப் போர் முனையில் தாக்கி அவர்களது கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். அதே நேரத்தில் காலாட்படைகள் டோப்ருக் நகருக்கு விரைந்து அதன் முற்றுகையை முறியடிக்க வேண்டுமென்பது நேச நாட்டுத் திட்டம். நவம்பர் 18ம் தேதி பிரிட்டானிய 8வது ஆர்மி லிபியப் போர் முனையில் தன் தாக்குதலைத் தொடங்கியது. இந்த மோதல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே பிரிட்டானிய 18வது கோர் அச்சு நாட்டு நிலைகளை சுற்றி வளைத்து டோப்ருக் நகரை நோக்கி விரைந்தது. டோப்ருக் நகரை அடைந்து அதனை முற்றுகை இட்டிருந்த அச்சுப் படைகளைப் பின்புறமிருந்து தாக்கியது, டோப்ருக்கின் பாதுகாவல் படைகளும் தங்கள் அரண்நிலைகளுக்குப் பின்னிருந்து வெளிவந்து அசுசு முற்றுகைப்படைகளைத் தாக்கின. 8வது ஆர்மியின் முதல் கட்ட தாக்குதலை முறியடித்திருந்த ரோம்மல், டோப்ருக்கில் இக்கட்டான சுழ்நிலையிலிருந்த தனது படைப்பிரிவுகளின் துணைக்கு லிபியப் போர்முனையிலிருந்த அச்சுப் படைப்பிரிவுகளை அனுப்பினார். ஆனால் டோப்ருக்கிலும் லிபிய எல்லையிலும் நான்கு வாரங்கள் நடந்த கடுமையான மோதல்களால் அச்சுத் தரப்பு டாங்குகளில் பெரும்பாலானவை சேதமடைந்திருந்தன. எஞ்சியிருந்த கவசப் படைப்பிரிவுகளைப் பாதுகாப்பதற்காக ரோம்மல் டோப்ருக் முற்றுகையைக் கைவிட்டு பின்வாங்க நேர்ந்தது. டோபுருக்கிலிருந்து பின்வாங்கி முதலில் கசாலா என்ற இடத்தில் பாதுகாவல் அரண்நிலைகளை அமைக்க முயன்றார். ஆனால் நேச நாட்டுப் படைகள் அங்கும் பின் தொடர்ந்து வந்து தாக்கியதால், கசாலாவிலிருந்து எல் அகீலா நிலைக்குப் பின்வாங்கினார். இந்த பின்வாங்கலால் பார்டியா, ஆலஃபாயா கணவாய் போன்ற பல அச்சு நாட்டு கோட்டைகளும், அரண்நிலைகளும் நேச நாட்டுப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டுப் பின் சரணடைந்தன.

வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் ரோம்மலின் படைகளுடன் சண்டையிட்ட நேச நாட்டுப் படைகளுக்கு கிடைத்த முதல் பெரும் வெற்றி இதுவே.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads