கேஷ்விந்தர் சிங்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேஷ்விந்தர் சிங் (Keshvinder Singh a/l Kashmir Singh, பிறப்பு: 1972) மலேசியா, பேராக், மாலிம் நாவார் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். தேசிய முன்னணியின் டாக்டர் சாய் சோங் போ என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டு 1,362 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். 2010 ஜூன் மாதம் 15ஆம் தேதி, மக்கள் கூட்டணியில் இருந்து விலகி தன்னை ஒரு சுயேட்சை உறுப்பினராக அறிவித்தார். அதன் பின்னர் ஆளும் தேசிய முன்னணியுடன் இணைந்து கொண்டார்.
மக்கள் கூட்டணியில் இருந்து விலகி, தேசிய முன்னணியுடன் சேர்ந்து கொண்டால், தனக்கு இரண்டு கோடி மலேசிய ரிங்கிட் சன்மானமாகக் கொடுக்கப்படும்[1] என்று மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் புகார் செய்ததன் மூலம் இவர் மலேசியாவில் பிரபலம் அடைந்தார். 2010 பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி, கொடுத்த புகாரில் அப்போதைய துணைப் பிரதமராக இருந்த நஜீப் ரசாக்கின் உதவியாளர் தன்னிடம் அவ்வாறு அணுகியதாகக் கூறினார்.[2][3]
பேராக் மாநிலத்தில் அரசியல் இழுபறிகள் நடக்கும் போது, இவர் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தார்.[4] மக்கள் கூட்டணி பேரணிகள் நடத்திய போது தீவிர பங்கேற்பாளராகவும் கலந்து கொண்டார். காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட போது காயங்கள் அடைந்துள்ளார்.[5][6]
Remove ads
கண்ணோட்டம்
ஒரு வழக்கறிஞரான இவர் மீது, 2007 நவம்பர் மாதம் 17ஆம் தேதி மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் 10,000 மலேசிய ரிங்கிட் அபராதம் விதித்தது. நில ஒப்பந்தச் சட்ட ஒழுங்கு நடவடிக்கையின் கீழ், அவருக்கு அந்தத் தண்டனை வழங்கப்பட்டது.[7] தனக்குத் தெரியாமல் தன்னுடைய பணியாளர் ஒப்பந்தத்தைத் தயாரித்துள்ளார் என்று கிஷ்வேந்தர் சிங் கூறினார்.
எனினும் மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் அவருடைய கருத்துகளை ஏற்றுக் கொள்ளவில்லை. மலேசியாவின் 12வது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், இந்தச் செய்தி வெளியானது. அதனால் அவர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட முடியாது என்று மலேசிய சீனர் சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சான் கோங் சோய் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அவர் நீதிமன்றத்தின் மூலமாகத் தண்டனை பெறவில்லை. ஆகவே, அவர் தேர்தலில் போட்டியிட முடியும் என்று பேராக தேர்தல் ஆணையம் அறிவித்தது.[8][9]
பிரதமர் நஜீப்பிற்கு ஆதரவு
மக்கள் கூட்டணியின் தீவிர ஆதரவாளராகவும், அக்கூட்டணியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் விளங்கிய கிஷ்வேந்தர் சிங், திடீரென்று கட்சி மாறுவதாக அறிவித்தார்.[10] மாலிம் நாவார் தொகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு காலகட்டத்தில், தான் கட்சி மாறினால் பாரிசான் நேசனல் கூட்டணி தனக்கு 2 கோடி ரிங்கிட் வழங்க முன் வருகிறது என்று சொன்ன கிஷ்வேந்தர் சிங், ஏன் இப்போது கட்சி மாறுகிறார் என்று பொதுமக்கள் குழம்பிப் போயினர்.
அவர் சொன்னது போலவே 2010 மாதம் 15ஆம் தேதி தன்னை ஒரு சுயேட்சை உறுப்பினராக அறிவித்துக் கொண்டார். பின்னர், பாரிசான் நேசனல் எனும் தேசிய முன்னணியுடன் இணைந்தும் கொண்டார்.[11]
பேராக் மாநிலத்தை ஆட்சி செய்த மக்கள் கூட்டணியின் தலைமைத்துவம் அதிகமாக அரசியல் பேசுகிறது. ஆனால், மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்வது இல்லை. அதனால் ஏமாற்றம் அடைந்து கட்சியைவிட்டு வெளியேறுவதாக அறிவித்தார். பேராக் முதலமைச்சரின் தலைமைத்துவம் தன்னைப் பெரிதும் கவருவதாகவும், பிரதமர் நஜீப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கிஷ்வேந்தர் சிங் பத்திரிகைகளில் செய்திகள் வெளியிட்டார்.[12]
கேஷ்விந்தர் மீது நடவடிக்கை
கேஷ்விந்தர் சிங் கட்சியில் இருந்து வெளியேறியதும், அதன் தொடர்பாகச் சட்ட ரீதியிலான நடவடிக்கையை ஜ.செ.க. எடுக்கத் தயங்காது எனத் தெரிவித்தது. மக்கள் பிரதிநிதியான இவர் 2008ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் ஒப்பந்தந்தை மீறியதால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜ.செ.க. கருத்துரைத்தது.
ஜெலாபாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹீ இட் பூங் மற்றும் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங் ஆகிய இருவருக்கும், தலா ஒவ்வொருவருக்கும் ரிங்கிட் மலேசியா 50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.[13] மேலும் இவர்கள் பொறுப்பு ஏற்று இருக்கும் பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனவும் ஜ.செ.க. முடிவு செய்தது.[14]
பேராக் மாநில ஜ.செ.க. தலைவர் நிகே கூ ஹாம் இவ்விவகாரம் தொடர்பில், “ஜ.செ.க. கட்சியின் ஆலோசகர் தலைவர் லிம் கிட் சியாங், செயலாளர் லிம் குவான் எங், தலைவர் கர்பால் சிங் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர், கட்சியிலிருந்து வெளியாகிய இவ்விருவருக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என இறுதியாக முடிவு எடுக்கப்பட்டது” என கருத்துரைத்தார்.
கடன் தொல்லைகள்
மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங், ஜ.செ.க. கட்சியில் இருந்து விலகியதற்கு நிதி நோக்கங்கள் முக்கியமான காரணங்களாக இருக்கலாம் என்றும் பேராக் மாநில ஜ.செ.க. தலைவர் நிகே கூ ஹாம் கூறினார். “அவர் விலகியதற்குப் பண நெருக்கடியும், அவருடைய சொந்தப் பிரச்னைகளும் தான் காரணம்” என்று அவர் தெரிவித்தார்.
சபா மாநிலத்தின் சிபு இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள கேஷ்விந்தர் சிங் அங்கு சென்றார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பியதும், அவருடைய காரை நிதி நிறுவனம் எடுத்துக் கொண்டது தெரிய வந்தது. பல மாதங்களுக்கு அவர் தவணைப் பணத்தைக் கட்டாதது அதற்குக் காரணம் ஆகும்.
இதற்கிடையில், பேராக் மாநிலத்தின் தித்தி செரோங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் காலில் இட்ஹாம் லிம் அப்துல்லா, காரின் பாக்கித் தொகையைக் கட்டுவதற்குக் கேஷ்விந்தருக்கு ரிங்கிட் மலேசியா 3,500 ரிங்கிட் கடன் கொடுத்தார். கேஷ்விந்தர் எதிர்நோக்கிய பணப் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜ.செ.க. கட்சியும் உதவி செய்துள்ளது. இருப்பினும், கேஷ்விந்தர் சிங் கட்சியில் இருந்து வெளியேறினார். அதனால் ஓர் அரசியல் சர்ச்சையும் ஏற்பட்டுவிட்டது.[15]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads