க. அன்பழகன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
க. அன்பழகன் (K. Anbazhagan, திசம்பர் 19, 1922 - மார்ச் 7, 2020)[2] தமிழகத்தின் முதிர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர், தமிழக தி.மு.க. அரசின் அமைச்சரவையில், பல்வேறு காலகட்டங்களில், நிதி, கல்வி, சுகாதார, சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த இவரை 'பேராசிரியர்' என இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.[3] 2001-2006இல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இவர் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2020 மார்ச்சு 7 ஆம் நாள், தம்முடைய 97 ஆம் வயதில், சென்னையில் காலமானார்.[4][5] தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 75 ஆண்டு கால நண்பராக இருந்தவர்.[5]
Remove ads
இளமைப் பருவம்
அன்பழகன், திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார், சுவர்ணம்பாள் இணையருக்கு, 1922 திசம்பர் 19 இல் பிறந்தார். இவரது இயற்பெயர் இராமையா ஆகும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை (சிறப்பு) தமிழ் படித்தார். இது கலைமுதுவர் பட்டத்திற்கு இணையானது. படிப்பை முடித்தபின், 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றினார்.[6]
பொது வாழ்க்கை
தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக, 1962 ஆம் ஆண்டில், சென்னை-செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] இந்திய நாடாளுமன்றத்தில், மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971இல், சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1983 ஆகத்து 10ஆம் நாள் ஈழத்தமிழரின் பிரச்சனையில் மத்திய அரசும் மாநில அரசும் போதிய கவனஞ்செலுத்தாதைக் கண்டித்து தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இவரும் அன்றைய தி.மு.க.தலைவர் மு. கருணாநிதியும் துறந்தனர். தி.மு.க.வின் மூத்த மேடைப் பேச்சாளராக இருந்தார். ஈ.வெ.ரா. அடியொற்றி நடந்தார். இவர், 1996, 2001, 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 2011 சட்டமன்றத் தேர்தலில், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.
Remove ads
இதழாளர்
க. அன்பழகன், சென்னை புரசைவாக்கம், வெள்ளாளர் தெரு, கட்டிட எண் 10-இலிருந்து "புதுவாழ்வு" என்னும் மாத இதழை, 1948 சனவரி 15ஆம் நாள் (தை முதல் நாள்), முதல் ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.[8]
எழுத்துப் பணி
எழுத்தாளராகப் பல தமிழ் சமூகக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். இவர் எழுதிய நூல்கள் பின்வருமாறு:
- அழகுராணி [9]
- இன-மொழி வாழ்வுரிமைப் போர்
- உரிமை வாழ்வு, 1956, பாரி நிலையம், சென்னை.
- தமிழர் திருமணமும் இனமானமும்
- தமிழினக்காவலர் கலைஞர்
- தமிழ்க்கடல்
- தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி
- தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்
- தொண்டா? துவேஷமா? 1953, பாரி நிலையம், சென்னை. (தி.மு.க., பார்ப்பனர்களைச் துவேஷிக்கிறதா? தமிழகத்திற்கு தொண்டு புரிகிறதா? என விளக்கும் நூல்)
- நீங்களும் பேச்சாளர் ஆகலாம்
- வகுப்புரிமைப் போராட்டம், 1951; மக்கள் மன்றம், பவழக்காரத்தெரு, சென்னை.[10]
- வளரும் கிளர்ச்சி, 1953, பாரி நிலையம், சென்னை. (டாக்டர் நாயர் காலத்திலிருந்து, 1953 வரை திராவிட இயக்கத்தின் வரலாறு)
- வாழ்க திராவிடம் (ஓர் ஆராய்ச்சி நூல்), 1947, திராவிடன் பதிப்பகம், வேலூர்.[11]
- விடுதலைக் கவிஞர்
- விவேகானந்தர் - விழைந்த மனிதகுலத் தொண்டு
- பேராசிரியர்கள்
- சிங்க இளைஞனே! சிலிர்த்து எழு!
- மாமனிதர் அண்ணா
- தி திராவிடியன் மூவ்மெண்ட்டு (The Dravidian Movement)
Remove ads
குடும்பம்
இவர் வெற்றிச்செல்வி என்பவரை 1945 பிப்ரவரி 21இல் ஈ.வெ.ரா. தலைமையில் சென்னையில் மணந்தார்.[12] இவர்களுக்கு அன்புச்செல்வன் (பிறப்பு: பிப்ரவரி 17,1952)[13] என்னும் மகனும் டாக்டர் மனமல்லி சிவராமன் (மறைவு:13-6-2020)[14] செந்தாமரை [15] என்னும் இரு மகள்களும் பிறந்தனர். வெற்றிச்செல்வியின் மறைவிற்குப் பின்னர் மருத்துவர் சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருசோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்னும் இரு மகன்களும் ஜெயக்குமாரி என்னும் மகளும் பிறந்தனர்.[16] சாந்தகுமாரி திசம்பர் 23, 2012 ஆம் நாள் மறைந்தார்.
க. அன்பழகனுக்கு புலவர் க. திருமாறன், க. அறிவழகன், க. மணிவண்ணன், க. பாலகிருட்டிணன் என்னும் நான்கு தம்பிகள் உள்ளனர். இவர்களுள் புலவர் க. திருமாறன் விருதுநகர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினர்.[17] மற்றொரு தம்பியான க. அறிவழகன் சென்னை தியாகராயர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[18]
Remove ads
மறைவு
முதுமையின் காரணமாக 2020 பிப்ரவரி 24 அன்று அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் 2020, மார்ச் 7 அதிகாலை 1.10 மணி அளவில் காலமானார்.[19]
பெற்ற சிறப்புகள்
அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2021 திசம்பர் 19 அன்று சென்னை, நந்தனம் நீதித்துறை வளாகத்தில் அன்பழகனின் மார்பளவு சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வைத்தார். மேலும் அந்த வளாகத்திற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்ற பெயரையும் சூட்டினார். அன்பழகனின் நூல்களை நாட்டுடமையாக்கி அதற்கு ஈடாக அவரின் வாரிசுகளுக்கு 25 இலட்சம் ரூபாய் வழங்கினார்.[20] [21]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads