சங்கப் பாடல்களில் இராமாயணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்கப் பாடல்கள் இரண்டிலும், பழமொழி நானூறு பாடல் ஒன்றிலும் இராமாயணக் கதை பற்றிய குறிப்புகள் உள்ளன.
சீதை செயல்
ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழ அரசன் இளஞ்சேட் சென்னியின் அரண்மனை வாயிலில் நின்றுகொண்டு அவன் செருப்பாழி (பாழி, மிதியல் செருப்பு என்னும் ஊரை வஞ்சிப் போரில் வென்றதைப் பாடினார். அவன் தன் அணிகலன்களைப் புலவர்க்கு மிகுதியாக வழங்கினான். புலவர் தாங்கமுடியாத அளவுக்கு வழங்கினான். புலவருடன் வந்து சேர்ந்து பாடிய அவரது சுற்றத்தார் வறுமையில் வாடியவர்கள். அவர்கள் அந்த நகைகளை முன்பின் பார்த்ததில்லை. எந்த அணியை எங்கே அணிந்துகொள்வது என்று தெரியவில்லை. விரலில் அணியவேண்டுவனவற்றைக் காதுகளில் தொங்கவிட்டுக் கொண்டார்களாம். காதில் அணியவேண்டிய அணிகளை விரலில் செருகிக்கொண்டார்களாம். இடுப்பில் அணியும் அணிகளைக் கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டார்களாம். கழுத்தில் அணியவேண்டிய அணிகளை இடுப்பில் கட்டிக்கொண்டார்களாம். இது எப்படியிருந்தது என்றால்,
- 'கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
- வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
- நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
- செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு' [1]
இருந்ததாம்.
இராமனுடன் காட்டுக்கு வந்திருந்த சீதையை இராவணன் வௌவிச் சென்றான். அவள் இராமனுக்கு வழி தெரியத் தான் அணிந்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாக ஆங்காங்கே நிலத்தில் போட்டுவிட்டுச் சென்றாள். அவள் அணிந்திருந்ததைப் பார்த்த செங்குரங்குகள் (முசு) அவற்றை எடுத்து எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் தாறுமாறாக அணிந்துகொண்டது போல் இருந்ததாம்.
Remove ads
தனுஷ்கோடியில் இராமன்
கடுவன் மள்ளனார் என்னும் சங்ககாலப் புலவர் இராமன் தனுஷ்கோடி ஆலமரத்தடியில் வேதம் ஓதிய செய்தியைக் குறிப்பிடுகிறார்.
- 'வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
- முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
- வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
- பல்வீழ் ஆலம் போல
- ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே' [2]
தலைவன் திருமணம் செய்துகொள்ள வந்துவிட்டான். அவனையும் உன்னையும் இணைத்து அலர் தூற்றிய ஊரார் வாய் அடங்கிவிட்டது - என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். இது செய்தி. ஊர் வாய் அடங்கியதற்குக் காட்டப்படும் உவமைதான் இராமனைப் பற்றிய செய்தி.
இராமன் தன் வெற்றிக்குப் பின் பாண்டியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தனுஷ்கோடி வந்தடைந்தான். முழங்கிக்கொண்டிருக்கும் கடல் இரக்கத்தோடு காணப்பட்டது. அங்கு ஆறு கடலோடு கலக்கும் முன்றுறை (முன் துறை) ஓரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. அந்த மரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் தன் மறைகளை ஓதிக்கொண்டிருந்தான். அப்போது பல விழுதுகளை உடைய அந்த ஆலமரம் தன் ஒலியை அவித்து வைத்துக்கொண்டது. அதாவது ஆலமரத்துப் பறவைகள் ஒலிப்பதை மறந்து கேட்டுக்கொண்டிருந்தன. (ஆல மரத்தடியில் குழுமியிருந்த மற்ற உயிரினங்களும் ஒலி எழுப்பாமல் வாய்மூடிக்கொண்டன.)
Remove ads
பழமொழி நூலில் இராமாயணம்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று பழமொழி நானூறு. இலங்கை அரசன் இராவணனின் தம்பி வீடணன். இவன் இராமனை நண்பனாகப் பெற்று இலங்கை அரசனானான் என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது.
- பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
- இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
- பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
- சார்ந்து கெழீஇயிலார் இல் [3]
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads