சதகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சதகம் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம் என்பது பாட்டியல் நூல்களில் சொல்லப்படும் இலக்கணம்.[1] சதம் என்பது நூறு எனப்பொருள்படும் வடமொழிச் சொல். ஆகவே நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் எனப்பட்டது.
Remove ads
வகைகள்
சதகங்கள் பல பொருட்களைக் கொண்டவையாக அமைந்து உள்ளன. சமயத்துறையில் இவ்வகையைச் சேர்ந்த சிற்றிலக்கியங்கள் பெருமளவில் காணப்படுகின்றன. இவை, இறைவனை வழிபடுவதற்கான பக்திச் சதகங்கள், சமயக் கொள்கைகளை எடுத்தியம்பும் தத்துவச் சதகங்கள், வாழ்க்கை பற்றிக் கூறும் வாழ்வியல் சதகங்கள் எனப் பலவாறாக உள்ளன. நாட்டுப் பகுதிகளைப் பற்றிக்கூறும் சதகங்கள், பழமொழிச் சதகங்கள், நீதிகளைக் கூறும் சதகங்கள், மருத்துவம் சார்ந்த சதகங்கள் எனவும் பல வகைகள் உள்ளன.
நாட்டுப் பகுதிகளைப் பற்றிக் கூறும் சதகங்களுக்கு எடுத்துக் காட்டாகப் பாண்டி மண்டல சதகம், சோழமண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், தொண்டைமண்டல சதகம், ஈழமண்டல சதகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். திருச்சதகம், திருத்தொண்டர் சதகம், யேசுநாதர் சதகம் என்பன சமயத் தொடர்புடையவை. செயங்கொண்டார் சதகம் பழமொழிகள் பற்றியது. கைலாசநாதர் சதகம் நீதிக் கருத்துக்களைக் கொண்டது.
Remove ads
சதக இலக்கிய வரலாறு
தமிழில் தோன்றிய முதல் சதக இலக்கியமாக மாணிக்கவாசகரின் திருச்சதகத்தைக் குறிப்பிடலாம். இச்சதகம் இயற்றப்பட்ட காலம் பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டு. புலவர் ஒருவர் தாம் வாழ்ந்த நாட்டுப்புறப் பகுதியில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தொகுத்து ஒரு சதகம் பாடினார். உடனே வேறு சில புலவர்களும் நாட்டின் மற்றப் பகுதிகளின் நிகழ்ச்சிகளைத் தொகுத்துச் சதகங்கள் பாடினர். அவ்வாறு தோன்றியவை தொண்டை மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், சோழ மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், ஈழ மண்டல சதகம், நந்தி மண்டல சதகம் ஆகிய சதக இலக்கியங்கள்.
அடியார்களின் வரலாறுகளைத் தொகுத்துக் கூறுவதில் ஆர்வம் கொண்ட ஒருவர் திருத்தொண்டர் சதகம் இயற்றினார். நாட்டில் உள்ள பல பழமொழிகளைத் தொகுத்து, அவற்றை அமைத்துப் பாடிய சதகங்களும் உள்ளன. தண்டலையார் சதகம், கோவிந்த சதகம் என்பவை பழமொழிகளை அமைத்து, தெய்வ வழிபாட்டுடன் சேர்த்து இயற்றப்பட்டவை. ஜெயங்கொண்டார் சதகத்தில் பழமொழிகளும் அவற்றை விளக்கும் கதைகளும் நிகழ்ச்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. வாழ்க்கைக்கு உரிய நீதிகளை எடுத்துக் கூறும் சதகங்கள் சில உண்டு. கைலாச நாதர் சதகம் என்பதில் நீதிகள் மட்டும் அல்லாமல், சோதிடம் உடலோம்பல் முதலியன பற்றிய கருத்துகளும் கூறப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை, திருப்பதி முதலான தலங்களின் தெய்வங்களை வழிபடும் முறையில் அமைந்த சதகங்கள் பல உண்டு. இசுலாமிய மதத்தவர் பாடிய சதகங்கள் அகத்தீசர் சதகம், அரபிச் சதகம் முதலியன. இவ்வாறு பலவகைக் காரணம் பற்றியும், பல தலங்களைப் புகழ்ந்தும் பல வகைப் புலவர்களால் இயற்றப்பட்டவைதாம் சதக இலக்கியங்கள்.
Remove ads
காலம்
இன்று கிடைக்கும் சதகங்களுள் பழையது மாணிக்கவாசகரின் திருச்சதகம் ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 11 ஆம் நூற்றாண்டில் ஆறைக் கிழார் என்னும் புலவர் கார்மண்டல சதகம் என்னும் நூலை இயற்றினார். பின்னர், 17 ஆம் நூற்றாண்டில் படிக்காசுப் புலவரின் தண்டலையார் சதகம், கொங்கு மண்டல சதகம், தொண்டைமண்டல சதகம், குணங்குடி மஸ்தான் சாகிபுவின் நந்தீசர் சதகம், முகைதீன் சதகம் போன்ற நூல்கள் எழுந்தன. கைலாசநாதர் சதகம், அம்பலவாணக் கவிராயரின் அறப்பளீசுர சதகம், சாந்தலிங்க அடிகளாரின் வைராக்கிய சதகம் ஆகியன பொ.ஊ. 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை. பொ.ஊ. 19ஆம் நூற்றாண்டில் இயேசுநாதர் திருச்சதகம் என்பது யாழ்ப்பாணத்தாராகிய சதாசிவப் பிள்ளை இயேசுநாதரைப் போற்றி எழுதிய சதகம், செயங்கொண்டர் சதகம், ஈழமண்டல சதகம் போன்ற நூல்கள் எழுந்தன. மலைக்கொழுந்துக் கவிராயர் இயற்றிய திருத்தொண்டர் சதகம் 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
அமைப்பும் சிறப்பும்
சதக இலக்கியங்கள் நூறு என்னும் எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தவை. எண்ணிக்கையால் பெயர் பெற்றவை. நூறு செய்யுட்கள் ஒவ்வொன்றிலும் இறுதியடியோ, அதற்கு முந்திய பகுதியோ ஒரே வகையான தொடரைப் பெற்று விளங்கும். பாடல் தோறும் பயின்று வரும். இவற்றை மகுடம் என்பர். எடுத்துக்காட்டாக, பாண்டி மண்டல சதகத்தின் செய்யுட்கள் பாண்டி மண்டலமே என்று முடியும். அறப்பளீசுர சதகத்தில் அறப்பளீசுர தேவனே என்று ஒவ்வொரு செய்யுளிலும் மகுடம் அமையும். ‘மயிலேறி விளையாடு குகனே புல் வயல் நீடுமலை மேவு குமரேசனே’ என்று குமரேச சதகத்தில் ஒவ்வொரு செய்யுளும் முடிவு பெறும்.
சதகப்பாடல்கள் நீதி இலக்கியத்திலும் சிறப்பிடம் பெறுகின்றன. நீதி கூறும் இலக்கியத்தில், சதகங்கள் மக்கள் செல்வாக்குப் பெற்றவை. கலைக்களஞ்சியம் போன்றவை இல்லாத அக்காலத்தில் கற்பவர்க்குத் தேவையான பல குறிப்புகளையும் இவ் விலக்கியங்களில் புலவர்கள் தந்திருக்கிறார்கள். திருமாலின் அவதாரங்களைக் குறித்தும், புராணங்கள் குறித்தும் அறங்கள் முப்பத்திரண்டு என்னென்ன என்பது பற்றியும் விளக்கம் தரப்படுகிறது. இவ்வாறு பலவற்றைக் கூறுவதற்குச் சதகச் செய்யுட்கள் பயன் பட்டன.
நூறு பழமொழிகளை நூறு செய்யுட்களில் அமைத்து இயற்றப்பட்ட நூல் தண்டலையார் சதகம் ஆகும். குமரேச சதகம், சிலவகை மனிதர்களைப் பேய்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் குற்றங்களை எடுத்துக் காட்டுகிறது. கடன் தந்தவர் வந்து திருப்பிக் கேட்கும்போது முகம் கடுகடுப்பவர் பேயாம். பெரிய பதவி வந்த போது செருக்கோடு நடப்பவர் பேய். பகைவரின் சொல்லை மதித்து அதில் மயங்கி அகப்படுவோர் பேய். இலஞ்சம் வாங்கும் ஆசையால் பிறர்க்குத் துன்பம் செய்பவர் பேய். மனைவி வீட்டில் இருக்கப் பரத்தையரை நாடிச் செல்வோர் பேய். இவ்வாறு நீதிகள் வெவ்வேறு வகையாக உணர்த்தப்படுதல் காணலாம்.
Remove ads
சதகங்கள் சில
- திருச்சதகம் - மாணிக்க வாசகர் - பொ.ஊ. 9-ம் நூற்றாண்டு
- கார்மண்டல சதகம் - ஆறைக்கிழார் - 11-ம் நூற்றாண்டு
- சோழமண்டல சதகம் - ஆத்மநாத தேசிகர் - 18-ம் நூற்றாண்டு
- வைராக்ய சதகம் - சாந்தலிங்க சுவாமிகள் - 18-ம் நூற்றாண்டு
- கைலாசநாதர் சதகம் - சிதம்பரவாணர் - 18-ம் நூற்றாண்டு
- மயிலாசல சதகம் - நமச்சிவாய நாவலர் - 18-ம் நூற்றாண்டு
- அருணாசல சதகம் - காஞ்சி சபாபதி முதலியார் - 18-ம் நூற்றாண்டு
- அறப்பளீசுர சதகம் - அம்பலவாணக் கவிராயர் - 18-ம் நூற்றாண்டு
- கொங்குமண்டல சதகம் - விசயமங்கலம் கார்மேகக் கவிஞர் - 18-ம் நூற்றாண்டு
- குமரேச சதகம் - குருபத தேசிகர் - 18-ம் நூற்றாண்டு
- அகத்தீசர் சதகம் - குணங்குடி மஸ்தான் சாகிபு - 19-ம் நூற்றாண்டு
- செயங்கொண்டார் சதகம் - முத்தப்பச் செட்டியார் - 19-ம் நூற்றாண்டு
- ஈழமண்டல சதகம் - கணபதிப்பிள்லை - 19-ம் நூற்றாண்டு
- திருத்தொண்டர் சதகம் - மலைக்கொழுந்துக் கவிராயர் - 20-ம் நூற்றாண்டு
- பாண்டிமண்டல சதகம்
- தொண்டைமண்டல சதகம்
- தண்டலையார் சதகம் - படிக்காசுப் புலவர்
- காசி விசுவநாத சதகம் - கனகராச ஐயர்
- அரபிச் சதகம்
Remove ads
குறிப்புகள்
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads