ஜே. பி. சந்திரபாபு

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

ஜே. பி. சந்திரபாபு
Remove ads

சந்திரபாபு (J.P.Chandrababu; 5 ஆகத்து 1927 – 8 மார்ச் 1974) தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர்.

விரைவான உண்மைகள் ஜே. பி. சந்திரபாபுJ. P. Chandrababu, பிறப்பு ...
Remove ads

இளமைப் பருவம்

சந்திரபாபு தூத்துக்குடியில் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர்.[1] ஜோசப்பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரைப் பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். இவர், சந்திரகுல வம்சத்தில் பிறந்திருந்த காரணத்தால் தமது பெயரைப் பின்னாளில் சந்திரபாபு என மாற்றிக் கொண்டார்.[சான்று தேவை] இவரை சார்லஸ் போயர் என்று ஜெமினி கணேசன் அழைப்பார்[2].

சந்திரபாபுவின் தந்தை ஜெ.பி.ரோட்ரிக்ஸ் ஒரு விடுதலைப் போராட்ட வீரர் [3]. சுதந்திர வீரன் என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அன்றைய பிரித்தானிய அரசு இவரது சொத்துகளைப் பறிமுதல் செய்து, சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டமைக்காக 1929 இல் அவரைக் கைது செய்தது. அவர் விடுதலையானவுடன் அவரையும் அவரது குடும்பத்தினரையும் இலங்கைக்கு நாடு கடத்தியது. அங்கு அவர் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றினார். சந்திரபாபு கொழும்பில் புனித யோசேப்பு கல்லூரியிலும் பின்னர்க் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியிலும் கல்வி கற்றார்.

சந்திரபாபுவின் தந்தை இந்தியா திரும்பி தினமணி பத்திரிகையில் பணியாற்றினார். அவரைத் தேடி 1942இல் சந்திரபாபு தன் நண்பர் மரியதாஸ் பர்னாண்டோவோடு இந்தியா திரும்பினார். அப்பொழுது தினமணியில் பணியாற்றிய சொ.விருத்தாசலம் என்னும் புதுமைப்பித்தன் உதவியால் தன் தந்தையை மயிலாப்பூர் ரங்கைய்யா தோட்டத்தில் கதவிலக்கம் 15உள்ள வீட்டில் தன் தந்தையைக் கண்டார். [4]

Remove ads

திரையுலகில் நுழைய முயற்சி

சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தனது 16-ஆம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார். அதற்காக கதகளி, மணிபுரி, கதக், பரதம் ஆகிய நடனங்களைக் கற்றார். [5]

படத்தில் நடிக்க ஒப்பந்தம்

கே. சுப்பிரமணியனின் கலைவாணி பிக்கர்சு 1944 திசம்பர் 25ஆள் தொடங்க இருந்த "நர்த்தன் முரளி" படத்தில் நடிக்க மாதம் முப்பது ரூபாய் ஊதியத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் படப்பிடிப்பு முயற்சி கைவிடப்பட்டது. [6]

முதல் படம்

1947-ஆம் ஆண்டு பி. எஸ். ராமையா தயாரித்த தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.[7]

தற்கொலை முயற்சி

1949 பிப்ரவரி 18ஆம் நாள் காலை 8.20 மணியளவில் செமினி படத்தளத்தில் எசு.எசு.வாசனைச் சந்தித்து வாய்ப்புக் கேட்க முனைந்தார். அவரை காவலர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கு முயன்றவர். அவரை ஜெமினி கணேசன் மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றினார். 1949 பிப்ரவரி 28ஆம் நாள் தற்கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சிக் கொளுத்தித் தனது கையைச் சுட்டுக்கொண்டு, "உங்களுக்கு நான் சுட்டுக்கொண்டதுதான் தெரியும்; என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும்." என்றார். [8]

முன்னணி நடிகர்

சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950-ஆம் ஆண்டுகளில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.

சபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.

தற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்ராஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார்.

தமது நடிப்பிற்காகவும் பாடல் திறமைக்காகவும் பிரத்தியேகமான ரசிகர் குழாமைக் கொண்டிருந்தார்.

கவலை இல்லாத மனிதன், குமார ராஜா என்னும் இரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும் இனி நகைச்சுவை நடிகராகப் போவதில்லை என்று அறிவித்தார். ஆயினும், அவை இரண்டுமே வர்த்தக ரீதியாக வெற்றிபெறாததால், மீண்டும் போலீஸ்காரன் மகள் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடம் ஏற்கத் தொடங்கினார்.

அவர் தாமே கதாநாயகனாக நடித்து, தயாரித்து இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் திரைப்படத்தின் படுதோல்வியுடன் அவரது திரை வாழ்க்கை அநேகமாக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றே கூறலாம். 1960 -ஆம் ஆண்டுகளில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் தொடங்கியதும் சந்திரபாபுவின் திரையுலக வாழ்வில் தேக்கம் உண்டானது. மேலும், அச்சமயம் அவர் மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். இருப்பினும், அடிமைப்பெண், ராஜா, கண்ணன் என் காதலன் (இதில் சோவும் உடன் நடித்தார்) போன்ற ஒரு சில படங்களிலும் நடித்தார்.

1975-ஆம் ஆண்டு வெளிவந்த 'பிள்ளைச் செல்வம்' (1974) என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974-ஆம் ஆண்டு இவர் மரணமடைந்தார். [Source: http://www.lakshmansruthi.com/cineprofiles/chandrababu-01.asp பரணிடப்பட்டது 2016-08-24 at the வந்தவழி இயந்திரம்]

Remove ads

சொந்த வாழ்க்கை

நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் ஷீலா, தான் வேறொருவரை விரும்புவதாகக் கூறியதால், அந்தப் பெண்ணின் விருப்பப்படியே அவர் விரும்பும் நபருடன் மகிழ்ச்சியாக வாழ, அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. [9] (இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே “அந்த 7 நாட்கள்” படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் தெரிவித்தார்.)

சர்ச்சைகளும் சகநடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன.

வாழ்க்கை வரலாறு

சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று, கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் கிழக்குப் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. பலங்களும், பலவீனங்களும் கலந்த மனிதரான சந்திரபாபு திரையுலகம் மறக்க இயாலாத திறமையாளர்களில் ஒருவர்.

தேவாலய திருப்பணி

சந்திரபாபு கத்தோலிக்க கிறிஸ்தவர் என்பதால் மாதாவின் மீது அதிக பக்தி கொண்டவர். 20-ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் உலகம் முழுவதும் பாத்திமா மாதாவின் புகழ் பரவிக்கொண்டிருந்த சமயம். சந்திரபாபுவும் பாத்திமா மாதாவின் மீது அதிகபற்றுக் கொண்டவராக இருந்தார். அந்தச் சமயத்தில் பாத்திமா மாதாவின் பெயரால் இந்தியாவில் ஒரு பெரிய தேவாலயம் கட்டும் முயற்சி தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் சங்கமிக்கும் பகுதியான கிருஷ்ணகிரியில் (1958) மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தேவாலயம் கட்டுவதற்காகக் கலைநிகழ்ச்சிகள் நடத்தி பெருந்தொகையைத் திரட்டிக்கொடுத்தார். அந்தத் தொகையைக்கொண்டே இந்தத் தேவாலயத்திற்கான அஸ்திவாரப்பணிகள் தொடங்கப்பட்டன. இதைக் குறிக்கும் வகையில் தூய பாத்திமா அன்னை தேவாலயத்தில் சந்திரபாபுவின் பெயரில் கல்வெட்டு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது.[10]

Remove ads

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

குறிப்பிடத்தக்க பாடல்கள்

சந்திரபாபு மேற்கத்திய பாணிப் பாடல்களைப் பாடுவதில் மிகச் சிறந்து விளங்கினார். எனவே, திரைவாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த காலத்தில் - நடிக்க வாய்ப்புக் கிடைப்பதற்கு முன்பே - இசை அமைப்பாளர் வேதாவின் உதவியால் சிங்களப் படமொன்றில் பாடல் பாடினார். [11] பின்னாளில் அவரது பாடல்கள் பலவற்றிற்கு அவரே ஓரளவு இசையமைத்ததாகவும் கூறுவர். சுமார் அரை நூற்றாண்டு கழிந்த பின்னரும் இன்றளவும் ஒலிக்கும் அவரது சில பாடல்கள்:

  • பிறக்கும்போதும் அழுகின்றான் (குமாரராஜா)
  • ஒண்ணுமே புரியலே உலகத்திலே (கவலை இல்லாத மனிதன்)
  • நான் ஒரு முட்டாளுங்க (சகோதரி)
  • புத்தியுள்ள மனிதரெல்லாம் (அன்னை)
  • பொறந்தாலும் ஆம்பிளயா (போலீஸ்காரன் மகள்)
  • சீமையெல்லாம் தேடிப்பாத்து (காத்தவராயன்)
  • கல்யாணம் வேணும் வாழ்வில் (பெண்)
  • கோவா மாம்பழமே (மாமன் மகள்)
  • உனக்காக எல்லாம் உனக்காக (புதையல்)
  • பம்பரக் கண்ணாலே காதல்
Remove ads

சுவையான தகவல்கள்

  • எஸ். ராதாகிருஷ்ணன் இந்தியக் குடியரசுத் தலைவராக இருக்கையில் அவரைச் சந்திக்கச் சென்ற தமிழ்த் திரைக் கலைஞர்கள் குழுவில் பங்கேற்றிருந்த சந்திரபாபு "பிறக்கும்போதும் அழுகின்றான்" என்ற தமது பாடலைப் பாடிக் காட்டினார். அதை வெகுவாகப் பாராட்டிய குடியரசுத் தலைவரின் மடிமீது பாய்ந்து அமர்ந்து, அவரது கன்னத்தை வருடி "நீ ரசிகன்" என்றார் சந்திரபாபு! சுற்றியிருந்தவர்கள் பதறினும், குடியரசுத் தலைவர் கோபிக்காது சிரித்தார்.
  • சந்திரபாபு தன்னுடைய படங்களில் தன் சொந்தக் குரலில் பாடுவது தான் வழக்கம் எனினும், பறக்கும் பாவை என்னும் படத்தில் சுகமெதிலே இதயத்திலா என்னும் படத்தில் கே.ஜே.ஏசுதாஸின் பாடலுக்கு இவர் வாயசைத்தார். இதைப்போலவே, சபாஷ் மீனா திரைப்படத்தில் ஆசைக்கிளியே கோபமா என்ற பாடலை இவருக்காகப் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்.
  • தாம் நடிக்காவிடினும் பெண் என்னும் திரைப்படத்தில், நகைச்சுவை வேடம் ஏற்றிருந்த எஸ்.பாலசந்தருக்காக கல்யாணம் வேணும் வாழ்வில் என்னும் பாடலைப் பாடினார். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற படத்தில், 'ஜாலி லைஃப்" என்னும் இவரது பின்னணிப் பாடலுக்குக்குத் திரையில் நடித்தவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!
  • எம்.ஜி.ஆரை வைத்து "மாடி வீட்டு ஏழை" என்னும் திரைப்படத்தை இயக்க சந்திரபாபு முயன்றார். இரண்டாம் நாள் படப்பிடிப்புடன் இது முடிவுற்றது. இந்த முயற்சியின் தோல்விக்கு இரு தரப்பினரையுமே இன்று வரை காரணமாகச் சொல்வதும் தொடர்கிறது.
  • புனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது![12]
Remove ads

பாடி நடித்த பாடல்கள்

  • ஜாலி லைப் ( கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )
  • விளையாடு ராஜா ( நான் சொல்லும் ரகசியம் 1959 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
  • கண்மணிப் பாப்பா ( தட்டுங்கள் திறக்கப்படும் 1966 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
  • தாங்கதம்மா (செந்தாமரை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
  • ஆளு கனம் ( கண்கள் 1953 கம்பதாசன் இயற்றிய பாடல் )
  • கோவா மாம்பழமே ( மாமன் மகள் 1955 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )
  • புத்தியுள்ள மனிதன் ( அன்னை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
  • ராக் ராக் அண்ட் ரோல் ( பதிபக்தி 1958 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
  • பம்பரக் கண்ணாலே ( மணமகள் தேவை 1957 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )
  • ஐயோ மச்சான் மன்னா ( ஸ்ரீ வள்ளி 1961 ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
  • ஒற்றைக் கண்ணு ( வாலிப விருந்து 1967 சீத்தாராமன் இயற்றிய பாடல் )
  • எப்போ வச்சிக்கலாம் ( பந்தபாசம் 1962 மாயவநாதன் இயற்றிய பாடல் )
  • என்னைத் தெரியலையா ( யாருக்கு சொந்தம் 1963 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
  • சிரிப்பு வருது ( ஆண்டவன் கட்டளை 1964 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
  • தனியா தவிக்கிற வயசு ( பாதகாணிக்கை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
  • கவலையில்லாத மனிதன் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
  • பிறக்கும் போதும் அழுகின்றாய் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
  • என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
  • ஒன்னுமே புரியல ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
  • ஹலோ மை டியர் ( புதையல் 1957 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
  • குங்குமப்பூவே ( மரகதம் 1959 கு.மா.பாலசுப்ரமணியன் இயற்றிய பாடல் )
  • தடுக்காதே என்னை ( நாடோடி மன்னன் 1958 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )
  • தில்லானா பாட்டு ( புதுமைப்பித்தன் 1957 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
  • சரியான ஜோடி தந்தானே ( காத்தவராயன் 1958 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
  • நான் ஒரு முட்டாளுங்க ( சகோதரி 1959 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
  • சந்தோஷம் வேணுமென்றால் ( சுகம் எங்கே 1954 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
  • அச்சு நிமிர்ந்த வண்டி ( குலேபகாவலி 1955 )
  • சொல்லுறதை சொல்லிப்புட்டேன் ( பாண்டித்தேவன் 1959 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
  • நீ ஆடினால் ( பாண்டித்தேவன் 1959 )
  • மனதிற்குகந்த மயிலே ( பெற்றமனம் 1960 )
  • பாடிப் பாடிப் ( பெற்றமனம் 1960 பாரதிதாசன் )
Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads