சப்த விடங்க தலங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.[1] இவற்றின் தலைமையிடம் திருவாரூர் ஆகும். பிற விடங்கத்தலங்கள் திருநள்ளாறு, நாகபட்டினம் எனப்படும் நாகைக்காரோணம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம் ஆகியனவாகும். இந்த ஏழு ஊர்களிலுமுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் "விடங்கர்" என அழைக்கப்படும் இலிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. விடங்கர் என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும்[2]. இந்திரனிடம் முசுகுந்தச் சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு [3] இவை உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும். வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது.
Remove ads
தனிப்பாடல்
சப்தவிடங்கத்தலங்கள் குறித்து தனிப்பாடல் ஒன்று உள்ளது.[4]
- சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு
- காரார் மறைக்காடு காராயில்-பேரான
- ஒத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி
- சத்த விடங்கத் தலம்
‘டங்கம்‘ என்றால் உளியால் பொளிதல், உளியால் பொள்ளாத சுயம்புமூர்த்தியாக, தானே தோன்றியதாகக் கொள்ளப்படுகிறது. மேற்குறிய அனைத்துக் கோயில்களிலும் ‘விடங்கர்‘ என அழைக்கப்படும் பளிங்குக்கல்லில் செய்யப்பட்ட சிறிய லிங்கத்திற்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன. விடங்கர் என்ற சொல் ஆடவல்லான் பெருமானைக் குறிக்கும்போது ‘பேரழகன்‘ என்ற பொருளில் வரும்.[4]
Remove ads
சப்தவிடங்கத் தலங்களின் இறைவன்
சப்தவிடங்கத்தலங்களில் உள்ள இறைவன் பின்வரும் நிலையில் அமைகின்றனர்.
- திருவாரூர் - வீதி விடங்கர்
- திருநள்ளாறு - நாகவிடங்கர்
- நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர்
- திருக்காராயில் - ஆதிவிடங்கர்
- திருக்கோளிலி - அவனிவிடங்கர்
- திருவாய்மூர் - நீலவிடங்கர்
- வேதாரண்யம் - புவனிவிடங்கர்
சப்தவிடங்க நடனங்கள்
ஒவ்வொரு தலத்திலும் இறைவன் ஆடும் ஆட்டத்திற்கு ஒவ்வொரு பெயர் உள்ளது.
- திருவாரூர் தியாகராசப்பெருமான் - உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் அஜபா நடனம்
- திருநள்ளாறு - பித்தர் ஆடுவது போன்ற உன்மத்த நடனம்
- நாகைக்காரோணம் - கடல் அலைகள் எழுவது போன்று உள்ள தரங்க நடனம்
- திருக்காராயில் - கோழியைப் போல் ஆடும் குக்குட நடனம்
- திருக்குவளை - வண்டு மலருக்கும் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று உள்ள பிருங்க நடனம்
- திருவாய்மூர் - தாமரை மலர் அசைவது போன்றுள்ள கமல நடனம்
- வேதாரண்யம் - அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போலுள்ள ஹம்சபாத நடனம்
இத்தலங்களில் சிவபெருமான் ஆடும் தாண்டவங்கள் சப்த விடங்க தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads