சர்வசார உபநிடதம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஸர்வஸார உபநிடதம் என்பது கிருஷ்ணயஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 35வது உபநிஷத்து. 'ஸர்வஸாரம்' என்ற சொல் பொருள் பொதிந்தது. எல்லா நூல்களிலிருந்தும் சாற்றைப் பிழிந்து எடுக்கப்பட்டது என்ற பொருளிற்குகந்தாற்போல், இதனில் வேதாந்தத்தின் முழுப்பொருளும் இரண்டே பக்கத்தில் உரைநடையில் தெளிவு படுத்தப்பட்டிருக்கும் உபநிடதம் இது.

Remove ads

கேள்விகள்

வேதாந்தநூல்களில் வரும் பல கலைச்சொற்களுக்கும் பொருள் வேண்டி எழுப்பப்பட்ட கேள்விகள் இவை. இவை யாவற்றிற்கும் சுற்றி வளைக்காமல் நேரடியாக விளக்கம் சொல்வதால்தான் இவ்வுபநிடதம் பெயர் பெற்றது.

ஆன்மா, தளை, வீடு, அறிவு

உடம்பு முதலிய அழியும் பொருள்களை ஆள்வது ஆன்மா. உடம்பு, மனம் இவைகளைத்'தான்' எனக் கருதும் எண்ணம் ஆன்மாவுக்குத் தளை. அதனின்று விடுதலை பெறுவதுதான் வீடு (மோட்சம்). அவ்வெண்ணத்தை ஏற்படுத்துவது அவித்தை. எதனால் அவ்வெண்ணம் விலகுகிறதோ அது பேரறிவு (ஞானம்).

மூன்று உணர்வு நிலைகள்

இவ்வுடம்பில் வசிப்பவனுக்கு நனவு, கனவு, உறக்கம் என்ற மூன்று நிலைகள் உண்டு.வெளி விஷயங்களை எப்பொழுது புலன்களாலோ மனதாலோ எடுத்துக் கொள்கிறதோ அப்பொழுது ஆன்மாவின் ஜாக்ர (நனவு) நிலை. அவ்வாசனைகளுடன் கூடிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தக்கரணங்களால் ஓசை முதலியவை இல்லாதபொழுதும் வாசனை வடிவான ஓசை முதலியவற்றை எப்பொழுது ஆன்மா அனுபவிக்கிறதோ அது கனவுநிலை.அந்தக்கரணம் என்றால் அகக்கரணம். அகம், அதாவது உள், புறம், அதாவது வெளி, இவையிரண்டையும் அறிதற்குச் சாதனமாய் இருக்கும் கரணம் அந்தக்கரணம்.பத்து புலன்களும் இந்நான்கு அந்தக்கரணங்களும் ஓய்ந்து எவ்வுணர்வுமற்றிருக்கும் நிலை சுஷுத்தி அல்லது உறக்கம். இம்மூன்று நிலைகளின் இருப்புக்கும் இல்லாமைக்கும் சாட்சியாகவும், அப்படிப்பட்ட இருப்பும் இல்லாமையும் அற்றதாயும் எல்லையற்றதாயும் உள்ள நிலை துரீயம் (நான்காவது, கடந்தது) என்று பெயர்.

ஐந்து கோசங்கள்

உணவால் தோற்றுவிக்கப்பட்ட உறுப்புக்களின் தொகுதி அன்னமயகோசம். பிராணன் முதலிய பதினான்கு வாயு வகைகள் அன்னமயகோசத்தில் புகுந்துறையும்போது அது பிராணமயகோசமாகும். இவ்விரண்டு கோசங்களையும் பற்றிக்கொண்ட ஜீவன் எப்பொழுது மனம் முதலிய கரணங்களால் எண்ணம் முதலிய கருமங்களைச் செய்கிறதோ அப்பொழுது அது மனோமயகோசமாகும். இம்மூன்று கோசங்களையும் தனதென்றுணர்ந்து அவைகளுடன் விளங்கும்போது அதுவே விஞ்ஞானமயகோசம் எனப்படும். இந்நான்கு கோசங்களுடன் கூடி தனக்குக் காரணமான பொருளில் அதை அறியாமல் ஆலவிதையில் மரம் இருப்பதுபோல் எது இருக்கிறதோ அது ஆனந்தமயகோசமெனப்படும்.

Remove ads

ஜீவன், க்ஷேத்திரஞ்ஞன், சாட்சி, கூடஸ்தன்

புண்ணிய பாவங்களால் பிறப்பெடுத்து உடம்புடன் ஒட்டாது அதை வெறும் துணைப்பொருளாக (உபாதி) மட்டும் கொண்டவன் ஜீவன் எனப்படுகிறான். அந்த துணைப்பொருளையும் எந்த மெய்யறிவு உள்ளிருந்தே விளங்கவைக்கிறதோ அது க்ஷேத்திரஞ்ஞன் எனப்படுகிறான். அறிபவன், அறிவு, அறியப்படுவது இவைகளின் தோற்றத்தையும் மறைவையும் உணர்பவன், ஆனால் தான் தோற்றமும் மறைவும் இல்லாதவன்—அவன்தான் சாட்சி எனப்படுவான். பிரம்மா முதல் எறும்பு வரை எல்லாப்பிராணிகளின் புத்திகளிலும் ஏற்றத்தாழ்வில்லமல் காணக்கூடியவனாய் எல்லாப்பிராணிகளின் புத்திகளிலும் உறைபவன் கூடஸ்தன் எனப்படுகிறான்.

Remove ads

அந்தர்யாமி, பரமாத்மா

இரத்தினங்களைக் கோத்து மாலையாக்கும் சரடு போல் எல்லா உடல்களிலும் ஊடுருவித் தொடர்ந்து விளங்கும் ஆன்மாதான் அந்தர்யாமி என்ற உள்ளுறைபவன்.அவனே தத்-த்வம்-அஸி மகாவாக்கியத்தில் த்வம் (=நீ) எனும் சொல்லின் பொருளாக இருப்பவன். ஸத்யம், ஞானம், அனந்தம், ஆனந்தம் இந்நான்கும் எதனுடைய இலக்கணமோ, அது தேசம், காலம், பொருள், காரணம் ஆகியவற்றால் மாறுபடாததோ அதுவே தத் எனும் சொல்லின் பொருளான பரமாத்மா அல்லது பரம்பொருள்.

மாயை

அனாதி கர்ப்பிணி, ஏற்புடைத்தலுக்கும் ஏற்புடையாமைக்கும் சமமானது, உளதென்றும் இலதென்ரறும் கூற முடியாதது, மாறுபாடுகளுக்குக் காரணமானது, ஆராய்ந்து நிரூபித்தால் இல்லாதது,அப்படி நிரூபிக்காதபொழுது உள்ளது, அடையாளம் ஏதுமில்லாதது --இவ்வளவும் சேர்ந்ததுதான் மாயை.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads