சர்வோதயம்
காந்தியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர்வோதயம் (Sarvodaya) என்பது மகாத்மா காந்தி கண்ட சமுதாயக் கொள்கைகளின் வடிவத்துக்குப் பெயர். காந்தி தான் அடைய விரும்பிய சமுதாயத்தைச் சர்வோதய சமுதாயம் என்ற முறையில் வடிவமைத்தார். ஒழுக்கத்தை முதன்மைப்படுத்தும் இச்சமுதாய முறைமை குறித்து, ‘ஒழுக்கமே எல்லாவற்றிற்கும் அடிப்படை. சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றின் சாரமும் என்று நான் கொண்ட உறுதியே அது. சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று. ஒவ்வொரு நாளும் அதன் மகிமை வளரலாயிற்று. அதற்கு நான் கொண்ட பொருளும் விரிவாகிக் கொண்டே வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.[1]
![]() | இந்தக் கட்டுரையில் தனிப்பட்ட கருத்து பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. விக்கிப்பீடியாக் கட்டுரை போல் எழுதப்பட வேண்டியிருப்பதால் தூய்மையாக்க தேவை இருக்கலாம். தயவுசெய்து, இதை விக்கிப்பீடியாக் கலைக்களஞ்சிய நடையில் மேம்படுத்த உதவுங்கள். (திசம்பர் 2017) |
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
Remove ads
சர்வோதயம் என்னும் சொல்
சர்வோதயம் என்னும் சொல் முதன்முதலில் சமண சமய நூல்களில் பயன்படுத்தப் பெற்றது. இதனைச் சாமந்த பந்தரா (Samant Bhadra) என்பவர் சமய அடிப்படையில் பயன்படுத்தினார். காந்தி ஜான் ரஸ்கினின் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ (Unto This Last) என்ற நூலின் சாரத்தை குஜராத்தி மொழியில் நூலாக வடித்துக் கொடுத்த பொழுது அதற்குச் ‘சர்வோதயம்’ என்று பெயரிட்டார். காந்தி அதன்பின்பு ‘சர்வோதயம் குறித்த தத்துவத்தை விளக்கினார்.[2]
1983-ஆம் ஆண்டில் காந்தி சேவா சங்கத்தால் காந்தியின் தத்துவத்தை விளக்குவதற்காகத் தோன்றிய மாத இதழுக்கு ‘சர்வோதயம்’ (Sarvodaya) என்ற பெயர் வழங்கப்பட்டது.
Remove ads
சர்வோதயம் என்பதன் பொருள்
‘சர்வோதயம்’ என்னும் சொல் ‘எல்லாருடைய நலம்’ என்று நேரடிப் பொருள் தரும். சமுதாயத்தில் வாழும் அனைவரின் நலனுக்காகவும் முயலும் வாழ்வியல் முறைமையைக் குறித்த சொல்லாக, ‘சர்வோதயம்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காந்தியின் வாழ்வு முறைகளையும் அவர்தம் கொள்கைகளையும் பின்பற்றும் காந்தியவாதிகள் இச்சொல்லை ஆழ்ந்த பொருளில் பயன்படுத்தி வருகின்றனர். சமுதாயத்திலுள்ள அனைத்து மனிதர்களின் முழு வளர்ச்சியையும் நலனையும் குறிப்பதாக இச்சொல் அமைகிறது.[2]
Remove ads
சர்வோதயத்தின் பொதுக்கோட்பாடுகள்
காந்தியடிகள் தான் விரும்பிய சமுதாய முறையை மாறாத தத்துவமாக அமைக்கவில்லை. மாறாக, உயிரோட்டமுள்ள தத்துவமாக வழங்கினார். காந்தியின் சர்வோதயம் கோட்பாடாக உருவாக அடிப்படையாக அமைந்தது ஜான் ரஸ்கினின் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்னும் நூலில் காணப்படும் மூன்று கருத்துகளாகும். அவை,
- எல்லாருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலன் அடங்கியிருக்கிறது.
- தங்கள் உழைப்பினால் வாழ்க்கைப் பொருளைத் தேடிக் கொள்ளும் அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமை உண்டு. அதனால் சவரத் தொழிலாளியின் வேலை[1] மதிப்பும் வக்கீலின் வேலை மதிப்பும் ஒன்றே.
- நிலத்தில் உழுது பாடுபடும் குடியானவரின் வாழ்க்கையும், கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கையுமே வாழ்வதற்கு உகந்த மேன்மையான வாழ்க்கையாகும்
என்பனவாகும். இவற்றைக் குறித்துக் காந்தி, ‘முதலில் கூறப்பட்டதை நான் அறிவேன். இரண்டாவதாகக் கூறப்பட்டிருந்ததை அரைகுறையாகவே அறிந்து கொண்டிருந்தேன். மூன்றாவதாகக் கூறப்பட்டதோ என் புத்தியில் தோன்றவேயில்லை. இரண்டாவதும் மூன்றாவதும் முதலாவதிலேயே அடங்கி இருக்கின்றன என்பதை, ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ பட்டப்பகல் போல எனக்கு வெளிச்சமாக்கி விடும்படி செய்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.[3]
சமுதாயக் கொள்கைகள்
சர்வோதயம் மனித குலத்தை எல்லாம் ஒன்றெனக் கருதும் சமுதாய அமைப்பு முறையாகும். பிறப்பினாலோ, செய்யும் தொழிலாலோ எந்த வகையான ஏற்றத்தாழ்வுகளுக்கும் சர்வோதயம் இடமளிக்கவில்லை. ஆண்களும் பெண்களும் சரிசமமாக வாழும் முறையைச் சர்வோதயம் வலியுறுத்துகிறது. சர்வோதய சமுதாயத்தில் அன்பே முதற்பொருளாகும்.[4]
பொருளியல் கொள்கைகள்
சர்வோதயத்தின் பொருளியல் கொள்கைகள் இன்றைய மேற்கத்தியப் பொருளியல் கொள்கைகளிலிருந்து அடிப்படையில் வேறுபட்டவை. சுரண்டலற்ற பொருளாதார அமைப்பை உருவாக்குவதே சர்வோதய சமுதாயத்தின் நோக்கம். எல்லாரும் உழைத்து வாழும் சர்வோதய சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தோன்றுவதில்லை. உற்பத்தி சாதனங்கள் யாவும் சமுதாயத்தின் உடைமைகளாக இருக்கும்.[4]
அரசியல் கொள்கைகள்
சர்வோதயக் கொள்கைகளின்படி அரசு என்பது மிகவும் குறைவான பணிகளையே மேற்கொள்ளும். அரசாங்கத்தின் அதிகாரம் பரவலாக்கப்படும். ஒவ்வொரு சிறிய சமுதாயமும் பஞ்சாயத்து முறையில் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும். சர்வோதயத்தின் அரசியல் பதவி அதிகாரத்தைப் பயன்படுத்துவதாக அல்லாமல் தொண்டு செய்வதற்கே முன்னுரிமை அளிக்கிறது. தனி மனித, சமுதாய வளர்ச்சிக்குத் துணை செய்கிற வகையில் அரசியல் நிறுவனங்கள் செயல்படும்.[4]
சமயக் கொள்கைகள்
சர்வோதயம் தனிச் சமயக் கொள்கைகளை வலியுறுத்தவில்லை. எல்லாச் சமயங்களின் சாரங்களையும் ஏற்று எல்லாத் துறைகளிலும் அதை வளர்ச்சிக்கு அனுமதிக்கும். சர்வோதய சமுதாயத்தில் சமயச் சமத்துவம் நிலைநாட்டப்படும். சமய வேறுபாடுகளுக்கு அச்சமுதாயத்தில் இடமில்லை.[4]
முடிவுரை
எல்லாரும் அமரநிலை அடையவேண்டும் என்னும் அடிப்படைக் கொள்கையிலேயே சர்வோதயம் உருவாக்கம் பெற்றது. வல்லவனுக்கே வாழ உரிமை உண்டு என்னும் விலங்கு நிலையிலிருந்து வாழு வாழ விடு என்னும் மனித நிலைக்கு உயர்ந்து பிறர் வாழ வாழ் என்னும் தெய்வ நிலைக்கு உயரும் கொள்கைகளைச் சர்வோதயம் வகைப்படுத்திக் கற்பிக்கிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறி சர்வோதயத்தின் உயிர்நாடி என்பது பொருந்தும்.[4]
துணைக் குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads