சுயாட்சிக் கட்சி

இந்திய விடுதலைப் போராட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுயாட்சிக் கட்சி (Swaraj Party) அல்லது சுவராஜ் கட்சி அல்லது சுவராஜ்ய கட்சி, சுயராஜ்ய கட்சி என்பது 1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி. இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான இது காலப்போக்கில் காங்கிரசுடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியது. காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாக செயல்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் அதனுடன் இணைந்துவிட்டது.[1][2][3]

1919ல் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் 1922ல் மகாத்மா காந்தியால் கைவிடப்பட்டது. 1922ல் உத்தர பிரதேசத்தில் சவுரி சாரா என்ற இடத்தில் சௌரி சௌரா போராட்டத்தில் பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட வன்முறையில் சிலர் காவல் நிலையம் ஒன்றை கொளுத்தியதால் பல காவல்துறையினர் உயிரிழந்தனர். தனது அறவழிப் போராட்டம் வன்முறை வழியில் திசை மாறுவதை விரும்பாத காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிடுவதாக அறிவித்தார். ஆனால் இதனை காங்கிரசு கட்சியுள் பலரும் பிற தேசியவாதிகளும் ஏற்கவில்லை. இவர்கள் காந்தியின் தலைமையில் அதிருப்தி கொண்டனர். மேலும் மாநில மற்றும் இந்திய சட்டமன்றங்களில் காங்கிரசு பங்கு பெறாது என்ற காந்தியின் கொள்கையினையும் அவர்கள் எதிர்த்தனர். இச்சட்டமன்றங்கள் காலனிய ஆளுனர்களால் ஆட்டுவிக்கப்பட்டும் கைப்பாவைகள் என காந்தியும் அவரது ஆதரவாளர்களும் கருதினர். தேர்தல்களில் பங்கேற்று சட்டமன்றத்துக்குச் செல்வது அரசுடன் ஒத்துழைப்பதுக்கு சமமென்றும் கருதினர். ஆனால் காங்கிரசு அதிருப்தியாளர்கள் தேர்தல்களில் பங்கேற்று, அரசு எந்திரத்தை உள்ளிருந்தே எதிர்க்க வேண்டுமென்று நினைத்தனர்.

டிசம்பர் 1922ல் நடந்த காங்கிரசின் கான்பூர் மாநாட்டில் இப்பிளவு வெளிப்படையாக வெடித்தது. சித்தரஞ்சன் தாஸ், என். சி. கேல்கார், மோதிலால் நேரு போன்றோர் காங்கிரசு-கிலாபத் சுவராஜ் கட்சி என்ற புதிய அமைப்பினைத் தொடங்கினர். ஆனால் 1907ம் ஆண்டு சூரத் மாநாட்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் பூசல் ஏற்பட்டு கட்சி பிளவுற்றதைப் போல் இம்முறை நிகழ இரு தரப்பினரும் விரும்பவில்லை. அதனால் வெளிப்படையாக பிரிந்து செல்லாமல் ஒரு சமரசம் செய்து கொண்டனர். அதன்படி சுயாட்சிக் கட்சி ஆதரவாளர்கள் காங்கிரசு உறுப்பினர்களாக இருந்து கொண்டே சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடலாம் ஆனால் வெற்றி பெற்றால் ஆட்சிப் பொறுப்பை ஏற்கக் கூடாது என்று முடிவானது. அதன்படி சுயாட்சிக் கட்சி 1923 முதல் மாநில மற்றும் மத்திய சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டது. ஆனால் வெற்றி பெற்றால் ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்து எதிர்க்கட்சியாகவே செயல்பட்டது. ஆண்டுகள் செல்லச் செல்ல, காங்கிரசுக்கும் சுயாட்சிக் கட்சிக்கும் இருந்த கொள்கை வேறுபாடுகள் குறைந்து கொண்டே வந்தன. 1928-29ல் நிகழ்ந்த சைமன் கமிஷன் எதிர்ப்பும், 1930ல் நிகழ்ந்த சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் உப்புச் சத்தியாகிரகம் ஆகியவை இரு கட்சிகளையும் நெருக்கமாக்கின. 1930களில் இரு கட்சிகளுக்குமிடையே இருந்த வேறுபாடு அறவே மறைந்து போனது. 1935க்குள் சுயாட்சிக் கட்சி மறைந்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரசு உறுப்பினர்கள் என்றே அறியப்படலாயினர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads