சுவர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுவர் என்பது வழக்கமாக ஒரு இடத்தை அல்லது வெளியை வரையறுக்கின்ற அல்லது அதனைப் பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாகும். சரிவான நிலையில் அமைந்த சுவர்களும் இருந்த போதிலும் சுவர்கள் பொதுவாக நிலைக்குத்து அமைப்புகளாகும். மிகப் பொதுவாக, சுவர்கள் கட்டிடங்களினுள் இடத்தைப் பல்வேறு அறைகளாகப் பிரிப்பதுடன், கட்டிடத்தின் உட்பகுதிகளை வெளிப்புறப் பகுதிகளினின்றும் பிரிக்கின்றது. கட்டிடங்களுக்குரிய அல்லது வேறு நடவடிக்கைகளுக்குரிய நிலப் பகுதிகளை வரையறுத்துப் பாதுகாப்பதற்கும் சுவர்கள் அமைக்கப்படுகின்றன. பெரிய நாடுகளின் பாதுகாப்புக்காக ஊடுருவல்களைத் தடுப்பதற்கும் சுவர்கள் அமைக்கப்படுவதும் உண்டு. புகழ் பெற்ற சீனப் பெருஞ் சுவர், இப்பொழுது அகற்றப்பட்டுவிட்ட பெர்லின் சுவர் என்பன இவ்வாறான சுவர்களுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.

Remove ads

சுவர் வகைகள்

சுவர்களைப் பலவகைகளாகப் பிரிக்கலாம்.

  • கட்டிடங்களுக்குரிய சுவர்கள்
  • எல்லைச் சுவர்கள் அல்லது சுற்று மதில்கள்
  • அணை சுவர்கள்

என்பன இவற்றுள் முக்கியமானவை.

கட்டிடச் சுவர்கள்

Thumb
ஆங்கிலப் பண்ணைக் கட்டிடமொன்றின் கற்சுவர்

கட்டிடங்களில் சுவர்கள் பல்வேறு செயற்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்காகக் கட்டப்படுகின்றன. கூரைகள் மற்றும் மேல் தளங்களினால் சுமத்தப்படும் சுமையைத் தாங்குதல், பல்வேறு செயற்பாடுகளுக்கான இடங்களைப் பிரித்து வேறுபடுத்துதல், மழை, வெய்யில் முதலியவற்றிலிருந்து கட்டிடங்களின் உட்பகுதிகளைப் பாதுகாத்தல், வெளியார் மற்றும் விலங்குகள் உட்புகுவதைத் தடுத்தல் என்பன அவற்றுட் சில. இவ்வாறு அவை நிறைவு செய்ய வேண்டிய தேவைகளைப் பொறுத்து அவற்றைக் கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்கள், மற்றும் வடிவமைப்புகள் வேறுபடுகின்றன. சுமை தாங்குமாறு வடிவமைக்கப்படும் சுவர்கள் செங்கற்கள், காங்கிறீற்றுக் கற்கள், வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று என்பவற்றைப் பயன்படுத்திக் கட்டப்படுகின்றன. பாதுகாப்புத் தேவைகளுக்கும் இத்தகைய சுவர்களே பெரிதும் விரும்பப்படுகின்றன. உள்ளக வெப்பக் கட்டுப்பாடு மற்றும் சக்தி மூலங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இக் காலத்தில் வெப்பத்தை அரிதிற் கடத்தும் தன்மையுள்ள வெளிச் சுவர்களுக்கான சிறப்புக் கட்டிடப் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Thumb
உலர் கற்சுவர்

சுமை தாங்காத உள்ளகச் சுவர்கள் மற்றும் அறைகளுக்கிடையேயான பிரிசுவர்கள் என்பன வெளிச் சுவர்களைப் போன்ற பலம், வெப்பம் கடத்தும் தன்மை என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. எனினும் இன்றைய கட்டிடங்கள் பல்வேறு சிக்கல் தன்மை வாய்ந்த செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டியிருப்பதன் காரணமாக உட்புறச் சுவர்களும் பல்வேறு விதமான தேவைகளை நிறைவு செய்ய வேண்டியவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குச் சத்தம் கடத்தப்படுவதைத் தடுத்தல், தீத் தடுப்பு என்பன இன்று முக்கியத்துவம் பெறுகின்ற சில அம்சங்களாகும். உள்ளகச் சுவர்கள் பல தற்காலத்தில் உருக்குச் சட்டக அமைப்புக்களின் மீது இரண்டு பக்கமும் ஜிப்சம் தகடுகள் போன்றவற்றைப் பொருத்துவதன் மூலம் அமைக்கப்படுகின்றன. இவை உலர் சுவர்கள் என அழைக்கப்படுகின்றன.

கட்டிடங்களில் அமையும் சுவர்கள் பல சந்தர்ப்பங்களில் அழகியற் கூறுகளாக அமைவதும் உண்டு. நவீன கட்டிடக்கலையின் அறிமுகத்துக்கு முன்னர் கட்டிடங்களின் வெளிச்சுவர்கள் பெருமளவு அழகியல் அம்சங்களால் அலங்கரிக்கப்பட்டன. நவீன கட்டிடங்கள் பெரும்பாலும் இத்தகைய மேலதிக சுவர் அலங்காரங்களைக் கொண்டிருப்பதில்லை. எனினும், கட்டிடப் பொருட்களைப் பயன்படுத்தும் விதத்திலும், அழகூட்டும் மேற் பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலமும், பல்வேறு முடிப்புப் பொருட்களால் போர்த்துவதன் மூலமும் சுவர்கள் அழகு படுத்தப்படுகின்றன. உள்ளகச் சுவர்கள் சுவரோவியங்கள் போன்ற கலைப் படைப்புக்களைத் தாங்கியிருப்பதும் உண்டு.

Remove ads

எல்லைச் சுவர்கள்

Thumb
சீனப் பெருஞ் சுவர்

கட்டிடங்கள் அமைந்துள்ள நிலப்பகுதியின் எல்லைகளில் எல்லைச் சுவர்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றைச் சுற்று மதில்கள் எனவும் அழைப்பதுண்டு. இவை பொதுவாக வெளியார் ஊடுருவலைத் தடுப்பதற்காகவே கட்டப் படுகின்றனவாயினும், சுற்று மதில்கள் அழகியல் கூறுகளாகவும் அமைவதுண்டு.

நீண்ட தூரம் சென்று தாக்கும் கனரக ஆயுதங்கள் பயன்பாட்டுக்கு வரு முன்னர் உலகின் பல நகரங்களைச் சுற்றிலும் பாதுகாப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேற்படி ஆயுதங்களின் அறிமுகம் சுற்று மதில்களின் பாதுகாப்புப் பயன்பாட்டை இல்லாமல் ஆக்கியதனால், பிற்காலத்தில் நகரங்கள் சுவர்களுக்கு வெளியே விரிவடையத் தொடங்கியதுடன் பழைய சுவர்கள் பலவும் அழிந்து போய்விட்டதையும் காண முடியும்.

அணைச் சுவர்கள்

நிலத்துக்குக் கீழ் கட்டப்படும் அமைப்புக்களிலோ அல்லது நிலத்துக்கு மேலுள்ள அமைப்புக்களிலோ மண், கற்கள், நீர் முதலியவற்றின் நகர்வைத் தடுக்கும் விதத்தில் கட்டப்படும் சுவர்கள் அணை சுவர்கள்(Retaining wall) ஆகும். வெளிப்புறத்தில் நில மட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு வேறுபாடுகள் காணப்படும் இடங்களில் அணை சுவர்கள் தேவைப்படுகின்றன. இதைவிட நிலக்கீழ் அறைகள், நீர்த் தாங்கிகள், பெரிய அணைகள் போன்றவைகள் கட்டப்படும்போதும் அணை சுவர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads