சூயெசு நெருக்கடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முக்கூட்டுத் தாக்குதல் எனவும் அழைக்கப்படும், சூயெசு நெருக்கடி என்பது, எகிப்து சூயெசுக் கால்வாயை நாட்டுடைமை ஆக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையைக் குறிக்கும். இது, பிரான்சு, ஐக்கிய இராச்சியம், இசுரேல் என்னும் நாடுகள் எகிப்துக்கு எதிராக 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கிய போரையும் உள்ளடக்கியது.
எகிப்து சோவியத் ஒன்றியத்துடன் புதிய உறவுகளை ஏற்படுத்தியதும்; சீனாவுக்கும், தாய்வானுக்கும் இடையே பிரச்சினைகள் உச்ச கட்டத்தில் இருந்தபோது எகிப்து சீனாவை அங்கீகரித்ததும் எகிப்துக்கும், பிரித்தானியா, அமெரிக்கா என்பவற்றுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அசுவான் அணை கட்டுவதற்காக நிதி வழங்க இணங்கியிருந்த அமெரிக்காவும் பிரித்தானியாவும் அதிலிருந்து பின்வாங்கின. அதைத் தொடர்ந்து, எகிப்தின் ஒரு பகுதியாக இருந்த, முக்கியமான கப்பல் போக்குவரத்து வழியான சூயெசுக் கால்வாயை எகிப்தின் அதிபராக இருந்த கமால் அப்துல் நாசர் நாட்டுடைமை ஆக்கினார். சூயெசுக் கால்வாயில் மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், முக்கூட்டு நாடுகளின் நலன்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டவர் என்று கருதப்பட்ட நாசரைப் பதவியிலிருந்து அகற்றுவதுமே முக்கூட்டுத் தாக்குதலின் முக்கியமான நோக்கம் ஆகும்.
முதலில் இசுரேல் எகிப்துக்குள் ஆக்கிரமிப்பு நடத்தியது. இது நிகழ்ந்து ஒரு நாளுக்குள் இசுரேலுக்கும் எகிப்துக்கும் பிரான்சும், ஐக்கிய இராச்சியமும் கூட்டாகக் கெடு விதித்துவிட்டு, எகிப்தின் தலைநகரமான கெய்ரோ மீது குண்டுத் தாக்குதல் நடத்தின. இசுரேலும், ஐக்கிய இராச்சியமும் மறுத்தபோதும், இது பிரான்சு, ஐக்கிய இராச்சியம், இசுரேல் என்பன கூட்டாகத் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் என்பதற்கான சான்றுகள் விரைவிலேயே கிடைத்தன. பிரித்தானியா பிரான்சு என்பவற்றின் கூட்டுப் படைகள் ஆண்டு முடிவுக்குள்ளாகவே தமது படைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டன. ஆனால், இசுரேல் 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ந்து இருந்து நெருக்கடியை நீடிக்கச் செய்தது.
முக்கூட்டு நாடுகள், குறிப்பாக இசுரேல் தமது உடனடியான இராணுவ நோக்கங்களை அடைவதில் வெற்றிகண்டன. ஆனால் ஐக்கிய நாடுகள் அவையிலும், வெளியிலும் அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக இம் மூன்று நாடுகளும் எகிப்தை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. இவ்வாறான வெளி அழுத்தங்களினால், சூயெசுக் கால்வாயைக் கட்டுப்படுத்துதல், நாசரைப் பதவியில் இருந்து அகற்றுதல் என்னும் நோக்கங்களில் பிரான்சும், ஐக்கிய இராச்சியமும் வெற்றிபெறவில்லை. எனினும் இசுரேல் தனது நோக்கங்களில் சிலவற்றை அடைவதில் வெற்றிகண்டது. அவற்றுள் டிரான் நீரிணையூடாகச் சுதந்திரமாகக் கப்பல் செலுத்துவதற்கான வாய்ப்பும் அடக்கம்.
Remove ads
இவற்றையும் பார்க்க
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads