சேந்தனார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேந்தனார் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருப்பல்லாண்டு பாடிய அருளாளர் ஆவார். இவர் திருவெண்காட்டிற்கு அருகில் நாங்கூர் என்னும் ஊரில் தோன்றியவர்.[1] பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்காளராக இருந்த சமயம் அவரின் கட்டளைப்படி அவரது கருவூலத்தைத் திறந்து எல்லோரும் அதில் உள்ள பொருள்களை எடுத்துச்செல்லுமாறு செய்தார். இதை அறிந்த பட்டினத்தாரின் சுற்றத்தவர்கள் சோழ மன்னனிடம் முறையிடவே மன்னன் சேந்தனாரைச் சிறையில் அடைந்தான். சேந்தனார் பட்டினத்தாரின் அருளால் சிறையிலிருந்து விடுதலை பெற்றார்.
Remove ads
தில்லையில் சேந்தனார்
சேந்தனார் தனது மனைவி மக்களுடன் தில்லைக்குச் சென்று விறகு வெட்டி விற்று வாழ்வு நடத்தினார். நாள்தோறும் விறகுவிற்றுப் பெற்ற பொருளிலிருந்து ஒரு சிவனடியார்க்கு உணவு அளித்து சிவத்தொண்டாற்றி வந்தார். ஒருநாள் நடராசப்பெருமானே சிவனடியாராக அவர் வீட்டிற்கு வந்து சேந்தனார் அளித்த களியை உணவாக ஏற்று அதன் ஒரு பகுதியைத் தமது திருமேனியில் காட்டிச் சேந்தனாரின் சிறந்த சிவபக்தியை உலகம் உணரும்படி செய்தருளினார்.
திருப்பல்லாண்டு பாடுதல்
ஒருசமயம் சேந்தனார் சிதம்பரத்தில் இருக்கும்பொழுது மார்கழித் திருவாதிரைத் திருவிழாவின் போது நடராசப்பெருமான் எழுந்தருளி வரும் திருத்தேர் ஓடாது தடைப்பட்டு நின்றிருந்தது. அப்போது "சேந்தா தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக" என்று ஓர் அசரீரி கேட்டது. அது கேட்ட சேந்தனார் இறையவன் திருவருளால் "மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள்" எனத் தொடங்கும் திருப்பல்லாண்டு பாடி, வடம்பிடிக்காமல் தேர் தானே ஓடி இருப்பிடம் வந்து சேரச் செய்தார். இவ்வற்புதத்தைக் கண்ட அனைவரும் சேந்தனாரின் பத்தியைப் போற்றினார்கள்.
Remove ads
வாழ்ந்த காலம்
கண்டராதித்த சோழ மன்னரின் (கி.பி. 947-957) ஆட்சிக் காலத்தில் தோன்றிய கல்வெட்டில், `கலி விசயன் தருணேந்து சேகரன்` என்ற தொடர்கள் காணப்படுகின்றன. `தருணேந்து சேகரன்` என்ற தொடர் சேந்தனார் பாடிய இரண்டாம் பதிகத்து மூன்றாம் பாடலில் உள்ளது. ஆகவே சேந்தனார் கண்டராதித்த சோழரின் காலத்துக்கு முற்பட்டவராதல் வேண்டும். பட்டினத்து அடிகளின் கணக்கர் என்பதால் இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியும், பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும் எனலாம்.[1]
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads