சேந்தமங்கலம் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேந்தமங்கலம் கோட்டை தமிழ்நாடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை வட்டம் சேந்தமங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டிலுள்ள சிதிலமடைந்த கோட்டைகளில் ஒன்றாகும். இக்கோட்டை 12 வகையான கோட்டைகளுள் 7வது வகையைச் சேர்ந்த சதுர்முகதுர்க்கம் எனும் வகையைச் சேர்ந்தது. சதுர்முகதுர்க்கம் என்பது 4 வாசல்களையுடைய கோட்டையாகும். இக்கோட்டை காடவ மன்னர்களுள் ஒருவரான மணவாளப்பெருமான் காலத்திலும் அவரது மகன் கோப்பெருஞ்சிங்க காடவராயன் காலத்திலும் கட்டப்பட்டது.
Remove ads
அமைவிடம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் சேந்தமங்கலத்தில் உள்ளது. இது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் நதியின் தென்கரைக்கு அண்மையில் உள்ளது. இவ்வூர் திருக்கோவிலூருக்குத் தென்கிழக்கே 25 கி.மீ தொலைவிலும் விழுப்புரத்திற்கு தென்மேற்கே 24 கி.மீ தொலைவிலும் பண்ணுருட்டிக்கு மேற்கே 20 கி.மீ தொலைவிலும் உளுந்தூர்பேட்டைக்கு வடகிழக்கே 12 கி.மீ தொலைவிலும் இருக்கின்றது. தென்கரையில் சேந்தமங்கலமும், வடகரையில் திருநாவலூரும் உள்ளன.

இவ்வூரில் கோவில் கொண்டுள்ள சிவனும், பெருமாளும் சேர்ந்தே மங்களம் வழங்குவதால் சேர்ந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரை ஆண்ட பல்லவர் வழியில் வந்த கோப்பெருஞ்சிங்கனுக்கு சேந்தன் என்ற பட்டப்பெயர் இருந்துள்ளது. இதனால் இவூர் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
Remove ads
வரலாற்றில் சேந்தமங்கலம்
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூர் கி.மு முதலாம் நூற்றாண்டிலிருந்து புகழ்பெற்றிருந்ததாக தொல்லியல் சான்றுகளின் மூலம் தெரியவருகிறது. இது மத்தியகால தொல்லியல் தளமாகும் இங்கு 1992-93 மற்றும் 1994-95 ஆம் ஆண்டுகளில் அகழாய்வு நடைபெற்றுள்ளது, சோழர் ஆட்சிகாலத்தில் தொண்டைமண்டலத்தில் திருமுனைப்பாடியின் ஒரு பகுதியாக சேந்தமங்கலம் இருந்திருக்கிறது. பழங்காலத்தில் திருமுனைப்பாடி நாடு பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்பட்டுவந்தது. அவை நடுநாடு, சேதிநாடு, சனதாதநாடு என்பவை ஆகும்.
இப்பகுதி கடைசி பல்லவ மன்னன் அபராஜிதவர்மனை முதலாம் ஆதித்தசோழன் வென்று பல்லவ பேரரசுக்கு முடிவுகட்டினான். அதன்பின் சிதறுண்ட பல்லவர்கள் சம்புவராயர்கள் மற்றும் காடவராயர்கள் எனப் பிரிந்து தனக்கென தனித்தனி சிற்றரசுகளை உருவாக்கினர். சம்புவராயர்கள் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனர். காடவராயர்கள் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இவர்கள் தங்களை பிற்காலப் பல்லவர்கள் என்றும் அழைத்துக்கொண்டனர். இவர்கள் சோழர்களின் ஆட்சிக்கு கட்டுப்பட்டு சிற்றரசுகளாக ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள் வன்னியரகள் ஆவார்
காடவ அரசன் மணவாளப் பெருமான், என்றழைக்கப்படும் காடவராயன் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு தனி சிற்றரசை உருவாக்கினான். சேந்தமங்கலத்தில் வாணிலைக் கண்டேசுவரம் என்ற சிவன் கோவில் ஒன்றைக் கட்டினார். இக்கோயிலிலுள்ள சிவன் ஆபத்தசகாயேசுவரர் என அழைக்கப்படுகிறார். அதன் அருகிலேயே திருக்காமக்கோட்ட நாச்சியார் திருச்சன்னதியும் உருவாக்கினார்.
Remove ads
கோட்டைக் கோயில்
கோயில் கட்டடக் கலையில் ஒருப்புதியவகை கட்டிடக்கலையை காடவராயர் தோற்றுவித்தனர்.கோயில் திருச்சுவற்றில் உள்ள மதில்கள் கோயிலுக்கு அரணாக மற்றுமின்றி போர்க்களப் பாதுகாப்பிற்கு கோட்டையாகவும் பயன்பட்டுள்ளது.கோயில் கோட்டையைச் சுற்றி அகழியுண்டு.இக் கோட்டையுலுள்ள சிவன் கோயில் கிழக்கு நோக்கி கெடிலம் நதியை பார்த்தபடி அமைந்துள்ளது.இக்கோயிலில் கண்ணைக் கவரும் பல்வேறு வகை சிற்பங்களும்,கோயில் சாளரங்கள் கருங்கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.இதில் பல்வேறு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.கோயிலின் மேற்கூரையில் பாம்பு ஒன்று ஊர்ந்துசெல்வதைப் போன்ற சிற்ப அமைப்பு அனைவரையும் கவர்கிறது.இந்தக் கோட்டைக் கோயிலின் மேற்கே நீராழி குளம் என்ற பெயருடைய ஒரு குளமும் உள்ளது.இக் குளத்தின் நீர் சிவனுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படிருக்கிறது.இக்குளத்தின் வடகரையில் இரண்டு குதிரை சிலைகள் கருங்கல்லால் செய்யப்பட்டிருக்கின்றன.இக் குதிரைகள் இசைச் சிற்பமாகும்.இக்குதிரையின் ஒவ்வொரு பாகத்திலும் தட்டிப்பார்க்கும்போது பல்வேறு இசைகளை தருவது இதன் சிறப்பாகும்.
முதலாம் கோப்பெருஞ்சிங்க காடவராயன்
காடவ மன்னன் மணவாளப்பெருமான் கி.பி 1195 ல் சேந்தமங்கலத்தை தலை நகராகத் தோற்றுவித்தான் என்று அவனது 5ம் ஆண்டு ஆட்சிக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவன் இவரது மகன் முதலாம் கோப்பெருஞ்சிங்கன் காடவராயன் என்பவன்.கோப்பெருஞ்சிங்க காடவராயனைப் பற்றி வரலாற்று ஆசிரியர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது.வரலாற்று ஆசிரியர் வேங்கட சுப்பையைர் கூற்றுப்படி காடவ மன்னர் கோப்பெருஞ்சிங்கன் இருவரென்றும் அவர்கள் முறையே முதலாம் கோப்பெருஞ்சிங்கன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் என்கிறார்.இவரின் கருத்தை “கோப்பெருஞ்சிங்கன்” என்ற வரலாற்று நூலை எழுதிய எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் மறுத்துக் கூறி திருவண்ணாமலை கல்வெட்டுச் சான்றுகளை ஆதாரமாகக்கொண்டு எடுத்துரைக்கிறார். “சோழர் வரலாறு” என்ற நூலை எழுதிய வரலாற்றாசிரியர் கூற்றுப்படி கோப்பெருஞ்சிங்கன் கி.பி 1229 முதல் 1278 வரை ஆட்சிபுரிந்தான் எனக் கூறுகிறார்.இக்கருத்தைக் கொண்டு கோப்பெருஞ்சிங்கன் ஒருவனாக இருக்கக்கூடும் எனக்கருதலாம்.மேலும் சேந்தமங்கலத்தில் 1995 மற்றும் 1996 ம் ஆண்டு நடைபெற்ற தொல்பொருள் ஆய்வின் மூலமும் கிடைத்த சான்றுகளின் மூலமும் மணவாளப்பெருமான் என்ற காடவராயனுக்குப் பிறகு அவனது மகன் ஆட்சிக்குவந்தான் என்பது உறுதியாகிறது.

Remove ads
கோப்பெருஞ்சிங்கனின் போர்ச்செயல்
மூன்றாம் ராஜராஜ சோழனின் காலத்தில் குறு நில மன்னனாக விளங்கிய கோப்பெருஞ்சிங்கன் வீரமும் சூழ்ச்சியும் மிக்கவன்.பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் கி.பி 1231ல் நடந்த யுத்தத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் 3ம் ராஜராஜனை வென்று முடிகொண்ட சோழபுர்த்தில் வெற்றிவிழா கொண்டாடினான்.தோல்வியுற்ற 3ம் ராஜராஜசோழன் போசளமன்னனான வீர நரசிம்மனின் ஆதரவை நாடிச்சென்றபோது இடையில் வழிமறித்து வந்தவாசி வட்டத்திலுள்ள தெள்ளாறு என்ற இடத்தில் கி.பி1231 ல் கோப்பெருஞ்சிங்கன் தன்படையுடன் வந்து 3ம் ராஜராஜசோழனைப் போரில் தோற்கடித்து அவரைத் தனது தலைநகரான சேந்தமங்கலத்தில் ஏறத்தாழ முப்பது நாள்களுக்கு மேலாக தன்னுடைய கோட்டைச் சிறையிலடைத்தான்.மூன்றாம் ராஜராஜனை சிறையிலடைத்த சேதி அறிந்த போசள மன்னன் வீரநரசிம்மன் கெடிலம் நதிக்கரையிலுள்ள அனைத்து ஊர்களையும் பேரழிவிற்கு உள்ளாக்கியும்,கொள்ளையிட்டும் சேந்தமங்கலத்தை பேரழிவிற்குள்ளாக்கினான். இதனைக் கண்ட கோப்பெருஞ்சிங்கன் ராஜராஜனை விடுவித்து ஆட்சியை விட்டுத்தருவதாக அறிவித்தான்.இச்செய்தியை திருவந்திபுரம் கல்வெட்டு மூலம் அறியலாம்.மீண்டும் ராஜராஜனின் ஆட்சிக்குட்பட்டு ஆண்டுவந்தான்.மீண்டும் கி.பி 1253 ல் பெரம்பலூர் எனுமிடத்தில் போசளருடன் போர்புரிந்து அவர்களை வென்றான்.கி.பி 1255 ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சேந்தமங்கலம் கோட்டையை முற்றுகையிட்டான்.இதன்பின் இருவரும் நட்பு உடன்படிக்கை செய்துகொண்டு ஆட்சியை மீண்டும் கோப்பெருஞ்சிங்கனிடம் ஒப்படைத்தான்.ஆனால் கி.பி 1279ம் ஆண்டு மாறவர்மன் குலசேகர பாண்டியன் சோழ நாடு,திருமுனைப்பட்டி நாடு முதலிய நாடுகளையெல்லாம் வென்று தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்ததின் மூலம் கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சி முடிவுற்றது.அவனோடு காடர்குல ஆட்சியும் முடிவுக்கு வந்தது.
Remove ads
கோயில் கோட்டையின் தற்போதைய நிலை
இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயிலில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads