சைலேந்திர வம்சம்
கிபி 750 முதல் 850 வரை சாவகத்தில் வளர்ந்த வம்சம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சைலேந்திர வம்சம் (Shailendra dynasty) [1] சைலேந்திரா அல்லது செலேந்திரா என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது 8ஆம் நூற்றாண்டில் இந்தோனீசியாவிலுள்ள சாவகத் தீவில் ஆட்சி செய்த குறிப்பிடத்தக்க இந்திய வம்சத்தின் பெயராகும். இவர்களின் ஆட்சியில் பிராந்தியத்தில் ஒரு கலாச்சார மறுமலர்ச்சி ஏற்பட்டது.[2]

சைலேந்திரர்கள் இந்து மதத்தின் பார்வையுடன் மகாயான பௌத்தத்தின் தீவிர ஊக்குவிப்பாளர்களாக இருந்தனர். மேலும் நடுச் சாவகத்தின் கேது சமவெளியை பௌத்த நினைவுச்சின்னங்களால் நிரப்பியுள்ளனர். அவற்றில் ஒன்று போரோபுதூரில் உள்ள பிரம்மாண்டமான தாது கோபுரமாகும். இது இப்போது யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[3][4][5]
Remove ads
பொது
சைலேந்திரர்கள் கடல்சார் பகுதிகளை ஆண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் பரந்த கடல் பகுதிகளை ஆட்சி செய்தனர். இருப்பினும் இவர்கள் நடுச் சாவகத்தின் கேது சமவெளியில் தீவிர நெல் சாகுபடியின் மூலம் விவசாய நோக்கங்களையும் நம்பியிருந்தனர். இந்த வம்சம் நடுச் சாவகத்தின் மாதரம் இராச்சியம், சில காலம் மற்றும் சுமாத்ராவில் உள்ள சிறீவிஜய இராச்சியம் ஆகிய இரண்டின் ஆளும் குடும்பமாகத் தோன்றியது.
சைலேந்திரர்கள் உருவாக்கிய கல்வெட்டுகள் மூன்று மொழிகளைப் பயன்படுத்துகின்றன. பழைய மலாய், பழைய சாவக மொழி மற்றும் சமசுகிருதம் - காவி எழுத்துகளில் அல்லது நாகரிக்கு முந்தைய எழுத்துகளில் எழுதப்பட்டது. பழைய மலாய் மொழியின் பயன்பாடு சுமாத்ரா வம்சாவளி அல்லது இந்த குடும்பத்தின் சிறீவிஜயன் தொடர்பு பற்றிய ஊகங்களைத் தூண்டியது. மறுபுறம், பழைய சாவக மொழியின் பயன்பாடு சாவகத்தில் அவர்களின் உறுதியான அரசியல் நிறுவனத்தைக் குறிக்கிறது. சமசுகிருதத்தின் பயன்பாடு பொதுவாக எந்தவொரு கல்வெட்டிலும் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வின் அதிகாரப்பூர்வ தன்மை அல்லது மத முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
Remove ads
சாத்தியமான தோற்றம்
சைலேந்திரர்களின் எழுச்சி சாவகத்தின் மையப்பகுதியில் உள்ள கேது சமவெளியில் நிகழ்ந்தாலும், அவர்களின் தோற்றம் விவாதத்திற்கு உட்பட்டது.[6] சாவகத்தைத் தவிர, சுமாத்திரா, இந்தியா அல்லது கம்போடியாவில் முந்தைய தாயகம் பரிந்துரைக்கப்பட்டது. சமீபத்திய ஆய்வுகள் வம்சத்தின் பூர்வீக தோற்றத்தை ஆதரிக்கின்றன. சுமாத்ரா மற்றும் தாய்-மலாய் தீபகற்பத்தில் உள்ள சிறீவிஜயத்துடன் இவர்களின் தொடர்பு இருந்தபோதிலும், சைலேந்திரர்கள் சாவக வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.[7]
இந்தியா
இந்திய அறிஞரான ரமேஷ் சந்திர மஜும்தாரின் கூற்றுப்படி, இந்தோனீசிய தீவுக்கூட்டத்தில் தன்னை நிலைநிறுத்திய சைலேந்திர வம்சம் கிழக்கு இந்தியாவில் உள்ள கலிங்கத்திலிருந்து (நவீன ஒடிசா ) உருவானது.[8] இந்த கருத்தை க. அ. நீலகண்ட சாத்திரி, ஜே.எல் மோயன்ஸ் ஆகியோரும் பகிர்ந்து கொள்கிறார்கள். சிறீவிஜயத்தின் ஜெயநேசன் எனும் தபுந்தா ஆயாங் ஸ்ரீ ஜெயநேசன் வருவதற்கு முன்பு சைலேந்திரர்கள் இந்தியாவில் தோன்றி பலெம்பாங்கில் தங்களை நிலைநிறுத்தியதாக மோயன்ஸ் மேலும் விவரிக்கிறார். 683ஆம் ஆண்டில், தபுண்டா ஹயாங் மற்றும் அவரது படைகளின் அழுத்தம் காரணமாக சைலேந்திரர்கள் சாவகத்திற்கு சென்றனர்.[9]
சுமாத்ரா
சிறீவிஜய பௌத்த இராச்சியத்தின் விரிவாக்கம் சாவகத்தில் வம்சத்தின் எழுச்சியில் ஈடுபட்டதாக மற்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.[10] இந்த இணைப்பின் ஆதரவாளர்கள், கலப்புத் திருமணங்கள் மற்றும் லிகோர் கல்வெட்டு போன்ற பகிரப்பட்ட மகாயான ஆதரவை வலியுறுத்துகின்றனர். சைலேந்திரர்களின் சில கல்வெட்டுகள் பழைய மலாய் மொழியில் எழுதப்பட்டவை. இது சிறீவிஜயம் அல்லது சுமாத்ரா தொடர்புகளை பரிந்துரைத்தது. 'செலேந்திரா' என்ற பெயர் முதலில் சோஜோமெர்டோ கல்வெட்டில் (725) "தபுண்டா செலேந்திரா" என்று குறிப்பிடப்பட்டது. சைலேந்திரர்களின் மூதாதையராக தபுண்டா செலேந்திரா பரிந்துரைக்கப்படுகிறார். தபுண்டா என்ற தலைப்பு சிறீவிஜய மன்னர் தபுந்தா ஹயாங் ஸ்ரீ ஜயனாசாவின் தலைப்பைப் போன்றது. மேலும் கல்வெட்டு - நடு சாவகத்தின் வடக்கு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டாலும் - பழைய மலாய் மொழியில் எழுதப்பட்டது. இது சுமாத்ரா வம்சாவளி அல்லது சிறீவிஜய குடும்பத்துடன் தொடர்பை பரிந்துரைத்தது.
Remove ads
சாவகத்தில் சைலேந்திரர்கள்

சைலேந்திர ஆட்சியாளர்கள் சுமாத்ராவில் சிறீவிஜயத்துடன் திருமண உறவுகள் உட்பட நல்லுறவைப் பேணி வந்தனர். உதாரணமாக, சமரக்ரவீரன் சிறீவிஜய மகாராஜா தர்மசேதுவின் மகள் தேவி தாராவை மணந்தார். இரு இராச்சியங்களுக்கிடையேயான பரஸ்பர கூட்டணி, சாவகப் போட்டியாளர் தோன்றுவதைப் பற்றி சிறீவிஜயம் பயப்படத் தேவையில்லை என்பதையும், சைலேந்திரர்களுக்கு சர்வதேச சந்தைக்கான அணுகல் இருப்பதையும் உறுதி செய்தது.
பொ.ச.824 தேதியிட்ட கரங்தெங்கா கல்வெட்டில் சமரதுங்கன் என்ற மன்னரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மகள் பிரமோதவர்தனி ஒரு புனிதமான பௌத்த சரணாலயத்தை திறந்து வைத்துள்ளார். இந்திர மன்னனின் சாம்பலை தகனம் செய்ய 'வேணுவானா' என்ற புனித பௌத்த கட்டிடமும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 842 தேதியிட்ட திரி தெபுசன் கல்வெட்டு, 'பூமிசம்பரன்' என்ற 'கமுலனின்' நிதி மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதற்காக சிறீ ககுலுனன் (சமரதுங்காவின் மகள் பிரமோதவர்தனி) வழங்கிய 'சிமா' (வரி இல்லாத) நிலங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. 'கமுலான் என்பது 'முலா' என்ற வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது 'பிறந்த இடம்', மூதாதையர்களை மதிக்கும் ஒரு புனித கட்டிடம். இந்த கண்டுபிடிப்புகள் சைலேந்திரர்களின் மூதாதையர்கள் மத்திய சாவகத்தில் இருந்து தோன்றியவர்கள் அல்லது சைலேந்திரர்கள் சாவகத்தில் தங்கள் பிடியை நிலைநிறுத்தியதற்கான அடையாளமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தது. சமசுகிருதத்தில் "போதிசத்துவத்துவத்தின் பத்து நிலைகளின் ஒருங்கிணைந்த நற்பண்புகளின் மலை" என்று பொருள்படும் பூமி சம்பார பூதாரா என்பது போரோபுதூரின் அசல் பெயர் என்று காஸ்பரிஸ் பரிந்துரைத்தார்.[11]
சாவகத்தில் சஞ்சய வம்சத்திற்கு அடுத்தபடியாக சைலேந்திர வம்சம் இருந்ததாகப் பெறப்பட்ட பழைய பதிப்பு கூறுகிறது. காலத்தின் பெரும்பகுதி அமைதியான சகவாழ்வு மற்றும் ஒத்துழைப்பால் வகைப்படுத்தப்பட்டது. ஆனால் 9ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உறவுகள் மோசமடைந்தன. 852-இல் சஞ்சய ஆட்சியாளர் பிகாடன், சைலேந்திர மன்னர் சமரதுங்கன் மற்றும் இளவரசி தாரா ஆகியோரின் மகனான பாலபுத்ரனை தோற்கடித்தார். இது சாவகத்தில் சைலேந்திரர்களின் இருப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது. மேலும், பாலபுத்ரன் சுமாத்ராவில் உள்ள சிறீவிஜய இராச்சியத்திற்கு பின்வாங்கினார். அங்கு அவர் முதன்மையான ஆட்சியாளரானார்.[12][13] :108
என். ஜே. குரோம், கோடெஸ் போன்ற முந்தைய வரலாற்றாசிரியர்கள், சமரக்ரவீரன் மற்றும் சமரதுங்கன் ஆகியோரை ஒரே நபராக சமன்படுத்த முனைகின்றனர். :108இருப்பினும், இசுலாமெட் முல்ஜானா போன்ற பிற்கால வரலாற்றாசிரியர்கள் சமரதுங்கனை இரகாய் கருங்குடன் ஒப்பிடுகின்றனர். இது மாதரம் இராச்சியத்தின் ஐந்தாவது மன்னராக மாண்டியாசிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் சமரதுங்கன் சமரக்ரவீரனின் வாரிசு, மேலும் சமரக்ரவீரனின் மகனான பாலபுத்ரதேவன், சமரதுங்கனின் இளைய சகோதரர். சுவர்ணதிவீபத்தில் (சுமாத்ரா) ஆட்சி செய்தவர். அவர் சமரதுங்கனின் மகன் அல்ல. இந்த பதிப்பில் பாலபுத்ரன் சுமாத்ராவின் ஆட்சி சாவகத்தில் பிகாடன்-பிரமோதவர்தனி ஆட்சியை எதிர்த்தது. அவருடைய மருமகள் மற்றும் அவரது கணவருக்கு சாவகத்தை ஆளுவதற்கான உரிமைகள் குறைவாக இருப்பதாக வாதிட்டார்.
851 ஆம் ஆண்டில், சுலைமான் என்ற அரபு வணிகர், சாவகத்தில் இருந்து கடல் கடந்து, ஆற்றில் இறங்கி தலைநகரை நெருங்கி, கெமர்கள் மீது திடீர் தாக்குதலை நடத்திய சாவக சைலேந்திரர்களைப் பற்றிய ஒரு நிகழ்வைப் பதிவு செய்தார். கெமரின் இளம் மன்னன் பின்னர் மகாராஜாவால் தண்டிக்கப்பட்டார். பின்னர் இராச்சியம் சைலேந்திர வம்சத்தின் அடிமையாக மாறியது.[14] :35 கிபி 916 இல், ஒரு சாவக இராச்சியம் கெமர் பேரரசின் மீது படையெடுத்தது. 1000 "நடுத்தர அளவிலான" கப்பல்களைப் பயன்படுத்தி, சாவகத்தினர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது. கெமர் மன்னரின் தலை பின்னர் சாவகத்திற்கு கொண்டு வரப்பட்டது.[15]
Remove ads
சுமாத்ராவில் சைலேந்திரர்கள்
824-க்குப் பிறகு, சாவக கல்வெட்டுப் பதிவில் சைலேந்திர இல்லத்தைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. சுமார் 860-இல் இந்தியாவில் உள்ள நாளந்தா கல்வெட்டில் பெயர் மீண்டும் தோன்றுகிறது. உரையின்படி, வங்காளத்தின் ( பாலப் பேரரசு ) மன்னர் தேவபாலதேவன், 'பாலபுத்ரன், சுவர்ண-திவீபம்' (சுமாத்ரா) மன்னனுக்கு 5 கிராமங்களின் வருவாயை புத்தகயைக்கு அருகிலுள்ள ஒரு பௌத்த மடாலயத்திற்கு வழங்கினார். பாலபுத்ரன் சைலேந்திர வம்சத்தின் வழித்தோன்றல் எனவும் சாவக மன்னரின் பேரன் எனவும் அறியபடுகிறது. :108–109[16]
சோழர்களுடனான உறவு
சுமாத்ராவிலிருந்து, சைலேந்திரர்கள் தென்னிந்தியாவில் உள்ள சோழ இராச்சியத்துடன் வெளிநாட்டு உறவுகளைப் பேணி வந்தனர். இது பல தென்னிந்திய கல்வெட்டுகளால் காட்டப்பட்டுள்ளது. 1005 ஆம் ஆண்டு சிறிவிஜய மன்னரால் கட்டப்பட்ட உள்ளூர் பௌத்த சரணாலயத்திற்கு வருவாய் வழங்குவதை 11 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
உறவுகள் ஆரம்பத்தில் மிகவும் சுமுகமாக இருந்தபோதிலும், 1025 இல் விரோதங்கள் ஏற்பட்டுள்ளன.[17] . சோழ வம்சத்தின் பேரரசர் இராசேந்திர சோழன் 11 ஆம் நூற்றாண்டில் சைலேந்திர வம்சத்தின் சில பகுதிகளை கைப்பற்றினார்.[18] 1025 இல் சிறிவிஜயத்தின் மீது சோழர் படையெடுப்பால் ஏற்பட்ட பேரழிவு, சுமாத்ராவில் ஆளும் வம்சத்தின் சைலேந்திர குடும்பத்தின் முடிவைக் குறித்தது.
சைலேந்திர வம்சத்தின் கடைசி மன்னர் - மகாராஜா சங்க்ராம விஜயதுங்கவர்மன் - சிறையில் அடைக்கப்பட்டு பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டார். ஆயினும், 11 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் இரு அரசுகளுக்கு இடையே நல்லுறவு மீண்டும் நிறுவப்பட்டது. 1090 ஆம் ஆண்டில் பழைய பௌத்த சரணாலயத்திற்கு ஒரு புதிய சாசனம் வழங்கப்பட்டது. இது சைலேந்திரர்களைக் குறிக்கும் கடைசியாக அறியப்பட்ட கல்வெட்டு ஆகும்.
முறையான வாரிசு இல்லாததால், சைலேந்திர வம்சத்தின் ஆட்சி முடிவிற்கு வந்தது. சிறீவிஜய மண்டலத்தில் உள்ள மற்ற குடும்பங்கள் அரியணையைக் கைப்பற்றியது, சீன மூலத்தின்படி சிறீதேவன் என்ற புதிய மகாராஜா சிறீவிஜயத்தை ஆட்சி செய்ய புதிய வம்சத்தை நிறுவினார். அவர் பொ.ச.1028 -இல் சீனாவின் அரசவைக்கு ஒரு தூதரகத்தை அனுப்பினார்.
Remove ads
பாலியில் சைலேந்திரர்கள்
சிறீ கேசரி வர்மதேவன், சைலேந்திர வம்சத்தின் பௌத்த அரசர் என்று கூறப்படுகிறது. அவர் பாலியில் ஒரு மகாயான பௌத்த அரசாங்கத்தை நிறுவுவதற்காக இராணுவப் பயணத்தை [19] வழிநடத்தினார்.[20] 914 ஆம் ஆண்டில், பாலியில் உள்ள சனூரில் உள்ள பெலன்ஜோங் தூணில் அவர் தனது முயற்சியின் பதிவை விட்டுச் சென்றார். இந்த கல்வெட்டின் படி, பாலியை ஆண்ட சைலேந்திர வம்சத்தின் கிளையாக வர்மதேவ வம்சம் இருக்கலாம்.
சைலேந்திர ஆட்சியாளர்களின் பட்டியல்
பாரம்பரியமாக, சைலேந்திரர்களின் காலம் 8ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை, மத்திய சாவகத்தில் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. பனங்கரன் சகாப்தத்திலிருந்து சமரதுங்கன் வரை. எவ்வாறாயினும், 7ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து (சோஜோமெர்டோ கல்வெட்டின் படி) 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை (சோழர் படையெடுப்பின் கீழ் சிறீவிஜய சைலேந்திர வம்சத்தின் வீழ்ச்சி) சைலேந்திர குடும்பத்தின் நீண்ட காலம் இருந்திருக்கலாம் என்று சமீபத்திய விளக்கம் தெரிவிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, சைலேந்திரர்கள் நடு சாவகம், சுமாத்ரா ஆகிய இரண்டையும் ஆட்சி செய்தனர். சிறீவிஜய ஆளும் குடும்பத்துடனான அவர்களது கூட்டணியும் கலப்பு திருமணமும் இரண்டு அரச குடும்பங்களை ஒன்றிணைப்பதன் மூலம் விளைந்தது. சைலேந்திரர்கள் இறுதியாக சிறீவிஜயம் மற்றும் மாதரம் (நடு சாவகம்) ஆகிய இரண்டின் ஆளும் குடும்பமாக உருவெடுத்தனர்.
சில வரலாற்றாசிரியர்கள் சைலேந்திர ஆட்சியாளர்களின் வரிசை மற்றும் பட்டியலை மறுகட்டமைக்க முயன்றனர். இருப்பினும் பட்டியலில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. வரலாற்றாசிரியர் போச்சாரி, சோஜோமெர்டோ கல்வெட்டின் அடிப்படையில் சைலேந்திரர்களின் ஆரம்ப கட்டத்தை புனரமைக்க முயன்றார். அதே சமயம் மற்ற வரலாற்றாசிரியர்களான இசுலேமட் முல்ஜானா மற்றும் போர்பட்ஜரகா ஆகியோர் சைலேந்திர மன்னர்களின் பட்டியலை மறுகட்டமைக்க முயன்றனர். இருப்பினும், இதில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. ஏனெனில் சைலேந்திரர்கள் பல இராச்சியயங்களை ஆட்சி செய்தது போல் தெரிகிறது. உதாரணமாக கலிங்கம், மாதரம், பின்னர் சிறீவிஜயம் போன்றவை. இதன் விளைவாக, அதே அரசர்களின் பெயர் அடிக்கடி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து, இந்த இராச்சியங்களை ஒரே நேரத்தில் ஆட்சி செய்தது போல் தெரிகிறது. கிடைக்கக்கூடிய சரியான ஆதாரங்களின் பற்றாக்குறையால் சந்தேகம் அல்லது ஊகத்தைக் குறிக்கிறது.
Remove ads
சான்றுகள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads