சோடியம் ஆக்சலேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோடியம் ஆக்சலேட்டு (Sodium oxalate) என்பது (Na2C2O4) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். ஆக்சாலிக் அமிலத்தின் சோடியம் உப்பான இச்சேர்மம் டைசோடியம் ஆக்சலேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. வெண்மை நிறத்துடன், நெடியின்றி படிக வடிவத் தூளாக இது காணப்படுகிறது. 250 முதல் 270 பாகை செல்சியசு வெப்பநிலையில் சோடியம் ஆக்சலேட்டு சிதைவடைகிறது.
ஒடுக்கும் முகவராக டைசோடியம் ஆக்சலேட்டு செயல்படுகிறது. தரப்படுத்தும் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு கரைசல்களில் முதல்நிலை தரப்படுத்தும் வேதிப்பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது. ராக்சலேட்டு என்பது சோடியம் ஆக்சலேட்டின் கனிம வடிவம் ஆகும். மிக அரிதாகவும் நுண் காரத்தன்மை மிக்க தீப்பாறைகளிலும் இக்கனிமம் காணப்படுகிறது[3].
Remove ads
தயாரிப்பு
1:2 மோலார் அமில கார விகிதத்தில் ஆக்சாலிக் அமிலமும் சோடியம் ஐதராக்சைடும் நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தப்பட்டால் சோடியம் ஆக்சலேட்டு உருவாகிறது. சோடியம் ஐதராக்சைடுடன் 1:1 விகிதத்தில் அமைந்த வினையெனில் ஒற்றைக்கார சோடியம் ஆக்சலேட்டு அல்லது ஐதரசனாக்சலேட்டு (NaHC2O4) உருவாகிறது. 360 பாகை செல்சியசு வெப்பநிலையில் சோடியம் பார்மேட்டை சூடுபடுத்தி சிதைவடையச் செய்து மாற்று வழிமுறையில் சோடியம் ஆக்சலேட்டு தயாரிக்கலாம்.
Remove ads
வினைகள்
பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு கரைசலை தரப்படுத்துதலில் சோடியம் ஆக்சலேட்டு பயன்படுத்தப்படுகிறது. சேர்க்கப்படும் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு முழுவதும் வினைபுரிந்தன என்பதை உறுதி செய்வதற்கு, தரம் காணப்படும் கலவை 60 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் இருப்பது விரும்பத்தக்கதாகும். நிகழும் வினையின் வினைவேகம் சிக்கலானது. வினையில் உருவாகும் மாங்கனீசு(II) அயனிகள் வினையூக்கியாகச் செயல்பட்டு மேற்கொண்டு வினையைத் தொடர்கின்றன. மிகையளவு கந்தக அமிலம் சேர்ப்பதால் எஞ்சியுள்ள பெர்மாங்கனேட்டுடன் வினைபுரிவதற்குத் தேவையான ஆக்சாலிக் அமிலம் தளத்தில் உருவாகிறது. இவ்வினைக்கான இறுதிநிலைச் சமன்பாடு இங்கு தரப்பட்டுள்ளது[4]
- 5Na2C2O4 + 2KMnO4 + 8H2SO4 → K2SO4 + 5Na2SO4 + 2MnSO4 + 10CO2 + 8H2O.
Remove ads
உயிரியல் நடவடிக்கைகள்
மற்ற பல ஆக்சலேட்டுகள் போல சோடியம் ஆக்சலேட்டும் மனிதர்களுக்கு நச்சுத்தன்மையை அளிக்கிறது. வாய் தொண்டை, வயிறு ஆகியவற்றில் கடுமையான வலி, இரத்த வாந்தி, தலைவலி, தசைப்பிடிப்பு, தசைநார்பிடிப்பு, தசையில் வலி, இரத்த அழுத்தக் குறைவு, மாரடைப்பு, சுயநினைவு இழத்தல், மரணம் போன்ற அனைத்து வகையான பாதிப்புகளும் இச்சேர்மத்தால் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் அளவின்படி உடல் எடைக்கு ஏற்ப 10-15 கிராம்/கிலோகிராம் ஆக்சலேட்டு மட்டுமே உயிர் கொல்லும் அளவாக ஏற்கப்பட்டுள்ளது.
இரத்த பிளாசுமாவிலிருந்து கால்சியம் அயனிகளை நீக்குவதற்கு சிட்ரேட்டுகளைப் போலவே சோடியம் ஆக்சலேட்டும் பயன்படுத்தப்படுகிறது. இரத்தம் உறைதலையும் சோடியம் ஆக்சலேட்டு தடுக்கிறது. இரத்தத்திலுள்ள கால்சியம் அயனிகள் நீக்கப்படும் போது மூளையை சரிவர இயங்காமல் செய்து சிறுநீரகங்களில் சோடியம் ஆக்சலேட்டு சேகரமாகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads