சோமவன்ச அமரசிங்க
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோமவன்ச அமரசிங்க (Somawansha Amarasinghe, 1943 - 15 சூன் 2016)[1] இலங்கை இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக 1990 முதல் 2014 வரை பணியாற்றினார்.[2]
2015 இல் இவர் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகிய பின்னர் மக்களின் பணியாட்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை சூன் 2015 இல் தொடங்கினார்.
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
சோமவன்ச 1943 ஆம் ஆண்டில்[3] களுத்துறை பயகலை என்னும் இடத்தில் ஜோன் அமரசிங்க என்பவருக்குக் கடைசி மகவாகப் பிறந்தார். களுத்துறை வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றியவர்.[4]
அரசியல் வாழ்க்கை
1969 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) என்ற இடதுசாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் இவரது இயக்கத் தோழர்களால் "சிறி ஐயா", ரெஜி அங்கிள், ரெஜினால்ட் பாட்றிக் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டார். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடிய இவர் பல பொது ஆர்ப்பாட்டப் பேரணிகளில் கலந்து கொண்டார். மனித உரிமை, மற்றும் ஊடக வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார். சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசுக்கு எதிரான 1971 ஜேவிபி கிளர்ச்சியின் போது ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.[4] 1974ம் ஆண்டு சோமவன்ச அமரசிங்கவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[5] சிறைச்சாலையிலேயே ஜேவிபி தலைவர் ரோகண விஜயவீரவை முதன் முதலில் சந்தித்தார். விஜேவீரவின் இறுதிக் காலங்களில் அவருக்கு மிக நெருங்கிய நண்பராக சோமவன்ச விளங்கினார்.[4] 1977 ஆம் ஆண்டில் அன்றைய ஜெயவர்தனாவின் அரசினால் கிளர்ச்சியாளர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதில் சோமவன்சவும் சிறையில் இருந்து விடுதலையானார்.[6]
சோமவன்ச 1981 இல் களுத்துறை மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6]
1984 ஆம் ஆண்டில் ஜேவிபியின் அரசியல் பீட உறுப்பினரானார்.[2] 1989 ஜேவிபி புரட்சிக் காலத்தில், இவர் பாதுகாப்புக் கருதி தனது குடும்பத்தினரை சப்பான் உட்படப் பல வெளிநாடுகளுக்கு அனுப்பியிருந்தார். ஜேவிபியின் இந்த இரண்டாம் கிளர்ச்சியின் பின்னர் 14 பேரைக்கொண்ட அக்கட்சியின் அரசியல் பீட உறுப்பினர்களில் சோமவன்ச மட்டுமே உயிர் தப்பியவர் ஆவார்.[5][6] 1990 இன் இறுதியில் இலங்கையில் இருந்து தப்பி வெளிநாடு சென்றார்.[4] முதலில் இந்தியா சென்ற சோமவன்ச பின்னர் இலண்டன், பாரிசு போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் 12 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.[5][6]
2001 நவம்பர் 22 அன்று இலங்கை திரும்பிய சோமவன்ச[6] மக்கள் விடுதலை முன்னணியை மீளப் புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டார்.[7] 2014 பெப்ரவரியில் கட்சியின் தலைமைப் பொறுப்பை அனுர குமார திசாநாயக்கவிடம் ஒப்படைத்தார்.[8][9] 2015 ஏப்ரல் 15 இல் கட்சி மார்க்சியக் கொள்கைகளில் இருந்து தவறி விட்டதாகக் குற்றம் சுமத்தி கட்சியை விட்டு விலகினார்.[6] அதன் பின்னர் 2015 சூனில் மக்களின் சேவையாளர்கள் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.[2][10][11]
Remove ads
மறைவு
அமரசிங்க தனது 73வது அகவையில் ராஜகிரியவில் உள்ள அவரது உறவினரின் இல்லத்தில் காலமானார். இறப்பிற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.[2][12]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads