யோகானசு நிக்கோலசு பிரோன்சுதெடு
தென்மார்க்கு நாட்டு வேதியியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யோகானசு நிக்கோலசு பிரோன்சுதெடு (Johannes Nicolaus Brønsted) (பிறப்பு - பெப்ரவரி 22, 1879, வார்தே, தென்மார்க்கு; இறப்பு - திசம்பர் 17, 1947) தென்மார்க்கு நாட்டு வேதியியலாளர் ஆவார்.[1][2][3] பிரோன்சுதெடு வேதிப்பொறியியல் பட்டத்தை 1899 ஆம் ஆண்டிலும், முனைவர் ஆய்வுப்பட்டத்தை 1908 ஆம் ஆண்டிலும் கோப்பனேகன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார். படிப்பு முடித்தவுடனே அதே பல்கலைக்கழகத்தில் கரிமமல்லா வேதியல் மற்றும் இயற்பிய வேதியியல் துறைகளுக்கான பிரிவில் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார்.[4]
இவர் வேதியியலில் காடி என்பது ஒரு வேதியியல் பொருள் ஒரு காரப்பொருளுக்கு ஒரு ஐதரசனை ஈவது என்னும் அடிப்படையான வரையறை ஒன்றை 1923 இல் முன்னிட்டார்.[5][6] அதே ஆண்டு இங்கிலாந்து வேதியியலாளர் தாமசு மார்ட்டின் லோரி என்பவரும் இதே கருத்தை பிற தொடர்பின்றி தானும் முன்வைத்தார். மேலும் அதே ஆண்டில் காடியைப் பற்றி கில்பர்ட் நியூட்டன் லூயிசு என்பார் எதிர்மின்னி இரட்டையைப் பெறுவன (காரம் இரட்டை எதிர்மின்னைகளைத் தருவன) என்னும் எதிர்மின்னிக் கொள்கையை முன்வைத்தார்.
எதிர்மின்னி ஈர்ப்புமை பற்றி இவர் வெளியிட்டுள்ள பல ஆய்வுக்கட்டுரைகளில் 1906 ஆம் ஆண்டில் வெளியிட்ட முதலாவது ஆய்வுக்கட்டுரையும் ஒன்றாகும்.[4] பின்னர் 1923இல் காடியைப்பற்றிய நேர்மின்னிக் கொள்கை அல்லது எதிர்மின்னி நீங்கிய ஐதரசனை தரும் கொள்கையை முன்வைத்தார். பின்னாளில் காடிகள், காரங்கள் வழியாக வினையூக்கி முறைகளில் தேர்ந்த வல்லுனர் ஆனார்.
இரண்டாவது உலகப்போரின் பொழுது, இவர் நாசியிசக் கொள்கைகளை எதிர்த்தார். 1947இல் இவர் தென்மார்க்கு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் நோய்வாய்ப்பட்டமையால் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற இயலாது விரைவில் இறந்து போக நேரிட்டது.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads