தா. பாண்டியன்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

தா. பாண்டியன்
Remove ads

தாவீது பாண்டியன் (David Pandian), 18 மே 1932 - 26 பெப்ரவரி 2021) இந்திய இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளரும் ஆவார்.[2] இவர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.[3] இவர் 1989, 1991 தேர்தல்களில் வடசென்னைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு - இந்திய ஐக்கிய பொதுவுடைமைக் கட்சிக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.[4][5]

விரைவான உண்மைகள் தா.பாண்டியன், தனிப்பட்ட விவரங்கள் ...
Remove ads

இளமை வாழ்க்கை

பாண்டியன் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கீழவெள்ளைமலைப்பட்டி என்ற ஊரில் தாவீது - நவமணி ஆகியோருக்கு நான்காவது மகனாக 1932 மே 18 இல் பிறந்தார். பாண்டியனின் பெற்றோர் கிறித்தவ மிசனரிப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். பாண்டியன் காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளி, உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்றார். இவர் ஆங்கில முதுகலை படிக்க காரைக்குடி, அழகப்பா கல்லூரியில் சேர்ந்தார்.அங்கு இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாணவர் பெருமன்றம் சார்பில் போட்டியிட்டு மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆங்கில முதுகலைப் பட்டமும் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

இவர் தன் கல்வியை முடித்ததும், காரைக்குடி, அழகப்பச் செட்டியார் கல்லூரியில் விரிவுரையளராகப் பணியற்றினார்.[6][7] இவர் 1957 சட்டமன்றத் தேர்தலில் புனைபெயரில் பரப்புரை மேற்கொண்டார். என்றாலும், இவரது பெயர் சில செய்தித் தாள்களில் வெளியாகவே இவர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இருந்தபோதும் கல்லூரி நிறுவனர் இவருக்கு ஊக்கமூட்டிக் கார்ல்மார்க்சு, ஏங்கல்சு நூல்களை வாங்கிப் பரிசளித்துள்ளார்.[7]

Remove ads

வாழ்க்கைப்பணி

இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்வதற்கு முன்பாக, பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப. ஜீவானந்தம் தொடங்கிய தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். இவர் இந்திய பொதுவுடைமிக் க்ட்சியில் இருந்து விலகி மொகித்சென் தொடங்கிய ஐக்கிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சி சார்பாக இருமுறை வடசென்னை மக்களவைத் தொகுதியில் இருமுறை தேர்ந்த்டுக்கப்பட்டார். பிறகு இவர் மீள இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் மீளப் பொதுச் செயலாளரானார்.[8] இவர் இந்திய இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.[9][10]

களப் பொது மக்களுக்கு அன்றைய இந்திய முதன்மை அமைச்சரான இராஜீவ் காந்தியின் உரையை மொழிபெயர்க்க அவரோடு சென்றபோது, இராஜீவ் காந்தி தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் கொலைசெய்யப்பட்டபோது 1991, மே 21 ஆம் நாளன்று மேடையில் உடனிருந்த பாண்டியன் கடுமையாகக் காயமடைந்தார்[11]].[12] இவர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தை எதிர்த்தாலும், இலங்கைத் தமிழரின் பிரச்சினைக்கு சிறீலங்கா அரசு பின்பற்றும் வன்முறையான அணுகுமுறையைக் கண்டித்து அதற்கு அமைதியான அணுகுமுறையில் தீர்வைக் காணுமாறு அறைகூவல் விடுத்தார்.[13][14] இந்நிகழ்வுக்குப் பிறகு பேசும்போது ஒருமுறை இன்னமும் அவரது உடலில் குண்டுச் சில்லுகள் புதைந்திருப்பதை நினைவுகூர்ந்து குறிப்பிட்டுள்ளார்.[7]

பாண்டியன் கூடங்குளம் அணுமின் நிலையத்தைக் கட்டுவதற்கு முதலில் ஆதரவு தெரிவித்தார்.[15] என்றாலும், பின்னர் இவரே உருசிய அரசுக்கு இழப்பீட்டைக் கட்ட விலக்கு அளிப்பது ஏற்கவியலாதது எனக் கூறியுள்ளார்.[7][16] இவர் சமூகநீதிக்காகவும் மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் அறிவியல் கல்வியை ஆதரித்தும் போராடியுள்ளார்.[17] இவர் இரயிவே, சென்னைத் துறைமுகத் தொழிற்சங்கங்களில் தொழிற்சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளர்.[17]

பாண்டியன் சோவியத் நாடு நேரு விருதைப் பெற்றுள்ளார்.[6][18]

Remove ads

எழுதிய நூல்கள்

  • பாரதியும் சாதி ஒழிப்பும்
  • மதமும் அரசியலும்
  • இயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை
  • படுகுழிக்குள் பாரத தேவி
  • மதமா அரசியலா?
  • தெய்வத்திற்கு என்ன வேலை?
  • பிடல் காஸ்ட்ரோ
  • சேகுவாரா
  • பாரதியும் யுகப் புரட்சியும்
  • ஒரு லாரி டிரைவரின் கதை
  • விழி திறந்தது வழி பிறந்தது
  • ரத்தப் பொட்டும் ரப்பர் அழிப்பும்
  • வரலாற்றுப் பொருள்முதல்வாதம்
  • மார்க்சிய சிந்தனைச் சுருக்கம்
  • என் முதல் ஆசிரியர் (உருசியப் புதினம்)
  • நிலமென்னும் நல்லாள் (உருசியப் புதினம்)
  • மோகன ராகம் (உருசியப் புதினம்)
  • மேடைப் பேச்சு
  • கம்பனின் அரசியல் கூட்டணி
  • திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்
  • சமுதாயமும் தனிநபரும்
  • ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள் (2002)
  • ஜீவாவும் நானும் (2004)
  • கண்டேன் சீனாவை (2006)
  • அழியும் கருவிகளால் அழியும் மனித இனம் (2005)
  • சோக வரலாற்றின் வீர காவியம் (2006)
  • இன்றைய இந்தியா (2007)
  • பெரியார் எனும் ஆளுமை (2012)
  • கல்லும் கதை சொல்லும் (2012)
  • நெல்சன் மண்டேலா (2014)
  • காலச் சக்கரம் (2015)
  • பொதுவுடைமையரின் எதிர்காலம்? (2017)
  • பெரியார் என்னும் இயக்கம் (2018)
  • இந்தியாவில் மதங்கள் (2020)
  • கொரோனாவா முதலாளித்துவமா? (2020)

குடும்ப வாழ்க்கை

இவருக்கு இரு மகள்களும், தாவீது சவகர் எனும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி லில்லி ஜாயிசு பாண்டியன் (பிறப்பு:1956) 2010 ஆம் ஆண்டில் தனது 76 ஆவது அகவையில் காலமானார்.[19] இவரது மகன் தாவீது சவகர் சென்னை பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். இவர் திருச்சி பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தில் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.[20]

இவர் சிறுநீரகத் தொற்று விளைவித்த உடல் நலக்குறைவினால் சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 26, 2021 அன்று தன் 88 ஆம் அகவையில் காலமானார்.[1][21] இவர் தம் முன்னோர் வாழ்ந்த உசிலம்பட்டி, கீழ்வெள்ளைமலைப் பட்டி, தாவீது பண்ணையில் 2021, பிப்ரவரி, 27 ஆம் நாளன்று நல்லடக்கம் செய்யப்பட்டார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads