திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒரு திருத்தலம்.திருநின்றவூரில் அமைந்துள்ளது. சமுத்திர ராஜனுடன் கோபித்துக்கொண்ட திருமகள் வந்து நின்ற ஊர் என்பதால் ’திருநின்றவூர்’ எனப் பெயர் பெற்றது.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 58 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 13°06'45.0"N, 80°01'34.0"E (அதாவது, 13.112510°N, 80.026112°E) ஆகும்.
தலவரலாறு
சமுத்திர ராஜனுடன் கோபம் கொண்ட திருமகள் தாயார் வந்து நின்ற இத்தலத்தில், சமுத்திர ராஜன் வந்து தாயாரை திரும்பி வர வேண்டியபோது, ’என்னைப் பெற்ற தாயே’ என்று பலவாறு சமாதானம் செய்ய முயன்றார். இக்காரணத்தால் தாயார் திருநாமம் ’என்னைப் பெற்ற தாயார்’ என்றானது. எவ்வாறு வேண்டியும் தாயார் சமாதானம் அடையாததால், சமுத்திர ராஜன் மீண்டு சென்று பெருமாளிடம் உதவி வேண்ட, அவரும் பக்தனுக்காக இங்கு வந்து திருமகளிடம் சமாதானம் கூறி வைகுந்தம் வர சம்மதிக்க வைத்த திருத்தலம். [1]
Remove ads
கோயில் அமைப்பு
இக்கோயிலின் இராசகோபுரம் மிகப் பெரியதாக அமைக்கபட்டுள்ளது. கோயிலானது பலிபீடம், கொடிமரம், கருடன் திருமுன், மகா மண்டபம், உள் மண்டபம், கருவறை போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. மூலவர் பக்தவத்சல பெருமாள் (பத்தராவிப்பெருமாள்) 11 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பஞ்சாயுதம் ஏந்தியவாறு பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சியளிக்கிறார். இத்தல விமானம் உத்பல விமானம் என்று அழைக்கபடுகிறது. மூலவர் சந்நிதிக்கு வலப் புறத்தில் தாயார் சந்நிதி அமைந்துள்ளது. சுற்றுப் பிரகாரத்தில் ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன், விஷ்வக்ஸேனர் (சேனை முதல்வன்), பன்னிரு ஆழ்வார்கள், ராமானுஜர், மணவாள மாமுனிகள், ஏரிகாத்த ராமர், ஆஞ்சநேயர் ஆகியோருக்குத் தனித்தனியாகச் சன்னதிகள் அமைந்துள்ளன. [2]
மங்களாசாசனம் பெற்றது
திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்தைப் பாடாது சென்று விடவே, தாயார் பெருமாளைப் பாடல் பெற்று வர அனுப்பி வைத்தார். பக்தவத்சல பெருமாள் வருவதற்குள் திருமங்கையாழ்வார் திருவிடந்தை திருத்தலத்தையும் தாண்டி, திருக்கடல்மல்லையும் (மாமல்லபுரம்) வந்துவிட்டார். அங்கே திருநின்றவூர் பெருமாளுக்காக ஒரு பாடல் பாட, பாடலுடன் திரும்பி வந்த பக்தவத்சல பெருமாள் ஒரு பாடல் மட்டும் பெற்றுவந்தது கண்ட தாயார், மற்ற திருத்தலங்களுக்கு அதிகம் பாடல் இருக்க நமக்கு ஒன்றுதானா என்று திரும்பவும் அனுப்ப, அதற்குள் திருக்கண்ணமங்கை வந்து விட்ட திருமங்கையாழ்வார் திருநின்றவூர் பெருமாள் (பக்தவத்சல பெருமாள்) திரும்பவும் வந்ததை ஓரக்கண்ணில் கண்டு அவரையும் மங்களாசாசனம் செய்தார்.
Remove ads
வழிபாடு
இங்கு பங்குனியில் திருவோண விழா, சித்திரா நட்சத்திரத்தில் திருக்கல்யாண உற்சவம், ஆச்சாரியார் திருநட்சத்திரங்கள், வரலட்சுமி நோன்பு, தீபாவளி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மாசி மகம், ரத சப்தமி, தைப்பொங்கல் போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடு, சுவாமி வீதியுலா போன்றவை நடத்தப்படுகின்றன.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads