மாசி மகம்

இந்து சமயத் திருவிழாக்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.

தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகாமகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.

Remove ads

புராண நிகழ்வு

முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரம்மஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவரைக் காப்பாற்றினார். அவரை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.

முன்பு ஒருகாலத்தில் பார்வதி சமேதராகக் கயிலையில் எழுந்தருளி இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவநிலையைச் சாற்றியருளும் படி கேட்டார். அதற்குப் பரமசிவன் "தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்" என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான் தான் இன்றி ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார்.

இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுகுக் கொடுத்த வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார். அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டுருந்தார்.

ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று. இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் அக்குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது.

அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.

மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்,

இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.

Remove ads

சங்க காலம் முதல் நடைபெறும் விழா

சங்க காலம் தொடங்கி இவ்விழா நடைபெற்றது தொடர்பான செய்திகள் இலக்கியங்களிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. [1]

இலக்கியங்கள்

மதுரைக் காஞ்சியின் ஆசிரியா் மாங்குடி மருதனாா் ஏழாம் நாள் இறுதியில் நீராடல் விழா அமைந்தது பற்றிக் குறிப்பிடுகின்றார். சங்க காலப் பாண்டிய மன்னன் முந்நீா் விழாவின் நெடியோன் என்று அழைக்கப்படுவதாக ஒன்பதாவது புறநானூற்றுப் பாடலில் காணப்படுகிறது. திருஞானசம்பந்தா் தன்னுடைய மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுகிறார்.

செப்பேடு

கோக்கரு நந்தடக்கன் எனும் ஆய்குல மன்னன் (கி.பி.9ஆம் நூற்றாண்டு) வழங்கிய செப்பேட்டில் திருமாலுக்கு ஏழுநாள் திருவிழா எடுக்கப்பட்டது பற்றியும், பங்குனி விசாகம் ஆறாடுவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வெட்டுகள்

திருச்செந்தூரில் இரண்டாம் வரகுணபாண்டியரின் (கி.பி.862) மூன்று அதிகாரிகள் 1400 காசினை மூலதனமாகக் கொண்டு பல விழாக்கள் நடத்தியதையும், அதில் ஒரு விழாவாக மாசிமகம் குறிக்கப்பட்டுள்ளளதையும் காணலாம். இது கல்வெட்டுகளில் காணப்படும் தொன்மையான மாசிமக விழா பற்றிய குறிப்பாக உள்ளது.

முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் (கி.பி.1009) திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை மகாதேவா்க்கு மாசிமகத்தன்று பெருந்திருவமது படைக்கப்பட்டதாகவும், அதற்காக ஒன்றரை மா அளவு நிலம் நல்கப்பட்டு இரண்டு கல அரிசி கிடைக்க வழி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இராசேந்திர சோழன் 4-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1016) நாகப்பட்டினக் கூற்றத்து ஊராா்கள் இறைவனது மாசிமக விழாவின் ஆறாம் நாள் செலவுகளுக்காக நிலமளித்த செய்தியினை அவ்ரிலுள்ள கல்வெட்டின்மூலமாக அறியலாம்.

முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1126) தளபதி நரலோக வீரன் சிதம்பரம் கோயிலில் செய்த திருப்பணிகளை அழகான தமிழ்ப்பாடல்களாகவும், சமஸ்கிருதச் சுலோகங்களாகவும் சிதம்பரம் நூற்றுக்கால் மண்டபத்து தூண்களில் கல்வெட்டாக பொறித்துள்ளார். அவற்றில் ஒரு பாடலில் மாசிக் கடலாடலைப் பற்றியும், அதற்காக அம்மன்னன் அமைத்த மண்டபம், பெருவழி ஆகியவற்றையும் பற்றிக் கூறுகிறது.

திருமறைக்காட்டில் ஏழு நாள் கொண்டாடப்பட்ட மாசித் திருநாளின் போது இறைவன் மோகனதேவருக்கு நாள் ஒன்றுக்கு பதின் கலமாக எழுபது கலம் நெல் தானமாக அளிக்கும் வகையில் பாலையூா் கிழவன் நாரணன் காடன் நிலம் தந்துள்ளதைப் பற்றியும், அம்மன்னனே இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மாசிமகத்துக்கு பெருந்திருவமது இறைவனுக்கு படைத்திட வேண்டி இன்னும் கூடுதலாக நிலமளித்துள்ளதைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

திருவரங்கத்தில் கி.பி.1531-ஐ சாா்ந்த விஜயநகா் காலக் கல்வெட்டின் மூலமாக உறையூரில் நடைபெற்ற மாசிமக விழா பற்றிய செய்தியை அறியமுடிகிறது.

குடுமியான் மலையில் உள்ள குலோத்துங்கன் மற்றும் பரகேசரி பட்டமுடைய மற்றொரு சோழ மன்னன் ஆகியோரின் கல்வெட்டுக்கள் மாசி மக நாளில் பிராமணா்களுக்கும், பதினைந்து சிவனடியாா்களுக்கும் உணவு வழங்க 15 கழஞ்சு பொன் முதலாக வழங்கப்பட்டதைப் பற்றிக் கூறுகின்றன. மாசி மகவிழாவின்போது தெய்வங்கள் நீராடுவதும் அதன் பிறகு அருகில் அமைக்கப்பட்ட மண்டபம், தோப்பு ஆகியவற்றில் காட்சி தருவதும் அத்தெய்வங்களுக்கு பெருந்திருவமுது”படையல் படைக்கப்படுவதும் மரபு என்று மேற்சொன்ன கல்வெட்டுச் செய்திகள் விளக்குகின்றன.

Remove ads

இவற்றையும் பார்க்க


உசாத்துணை

  1. விரதவிதிகள் - திருக்கேதீச்சரத் திருக்கோவில் மகாசிவராத்திரி மட பரிபாலன சபை - 2007

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads