திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில்
கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவஞ்சைக்குளம் மகாதேவசுவாமி கோயில் (Thiruvanchikulam Temple), கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
Remove ads
அமைவிடம்
இக்கோயில் கேரளாவில் சென்னை-கொச்சி இருப்புப்பாதையில் இரிஞாலக்குடா நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 8 கி. மீ. தொலைவில் உள்ளது. திரிச்சூரிலிருந்து 32 கி. மீ. தொலைவில் உள்ளது. [1] இத்தலம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இதுசுந்தரர் பாடல் பெற்ற தலமாகும்.
வழிபட்டோர்
அப்பர், சேரமான், சுந்தரர், சேக்கிழார் முதலியோர் இத்தல இறைவனை வழிபட்டவர்கள் ஆவர். பரசுராமர், தாயைக்கொன்ற பாவம் நீங்க இங்கு வழிபட்டுள்ளார். கழற்றறிவார் நாயனாரின் அவதார மற்றும் முத்தித்தலமாகும். [1] கழற்றறிவார் நாயனார், பெருமாக்கோதையார் என்றும், சேரமான் பெருமாள் நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். [2]
நாயன்மார் தொடர்பு
சேரநாட்டை ஆண்ட பெருமாக்கோதையார் இத்தல இறைவனின்மீது அதிகமான பக்தி கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் மகாதேவரை வணங்கும் போது, அவருக்கு இறைவனின் சிலம்பொலி கேட்கும். அதனைக் கேட்ட பின்பே, உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் இறைவனை வழிபடும் போது, சிலம்பொலி கேட்காததால், தன் வழிபாட்டில் குறை இருப்பதாக எண்ணி தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தார். அப்போது அங்கு சிலம்பொலி கேட்டது. அங்கு காட்சியளித்த இறைவன், தான் சோழ நாட்டிலுள்ள சுந்தரர் எனும் பக்தரின் இனிமையான பக்திப் பாடலில் மெய்மறந்து இவரை கவனிக்க முடியாமல் போய்விட்டதாகவும், அதனால் சிலம்பொலி கேட்கச் சிறிது காலதாமதமானதாகவும் கூறினார். உடனே மன்னன், சுந்தரரைப் பற்றி இறைவனிடம் கேட்டறிந்து, அவரைத் தேடி அவரோடு நட்பு கொண்டார். பின்னர் சேர மன்னனின் அழைப்பை ஏற்ற சுந்தரர் திருவஞ்சைக்களம் சென்று இறைவனை வழிபட்டுவிட்டு சோழ நாடு, பாண்டிய நாடு மற்றும் தொண்டை மண்டலம் ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோயில்களில் வழிபட்டார். அவருக்கு மீண்டும் சேரநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழவே, அங்குள்ள பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டு இறுதியாக திருவஞ்சைக்களம் சென்று, இப்பூவுலக வாழ்வினை அகற்ற வேண்டி ‘தலைக்குத் தலை மாலை’ என்னும் பதிகம் பாடினார். அதைக் கேட்ட இறைவன் அவரை அழைத்து வரும்படி, சிவ கணங்களை அனுப்பினார். அவர்களும் சுந்தரரை ஒரு வெள்ளை யானையில் அழைத்துச் சென்றனர். அப்போது சுந்தரர், தனது உயிர் நண்பரான சேர மன்னனை நினைத்தார். உடனே, சேர மன்னன் குதிரை ஒன்றில் அங்கு வந்து சுந்தரரை மூன்று முறை வலம் வந்து, அவருக்கு முன்பாக இறைவனிருப்பிடம் சென்றடைந்தார்.[3]
சிறப்புகள்
கேரள பாணியில் இக்கோயில் அமைந்துள்ளது. கேரள முறையைப் பின்பற்றி இங்கும் வெடிவெடித்து பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. வீதியில் நடுவில் உள்ள பெரிய மேடை யானை வந்த மேடை எனப்படுகிறது. கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை இங்கு வந்து சுந்தரரை கைலாசத்திற்கு அழைத்துச்சென்ற பெருமையுடையது. [1]
மூலவர், பிற சன்னதிகள்
இத்தல மூலவர் மகாதேவர் என்றும் அஞ்சைக்களத்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் மூலவர் கருவறைக்குள் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள் பாலிக்கிறார். [4] மூலவர் தரை மட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார்.[1] இங்கு கணபதி, ஐயப்பன், அனுமன், நாகராசா, பசுபதி, சப்தமாதர்கள், ரிஷபம், நந்திகேசன், பள்ளியறை சிவன், பிரதோச நிருத்யா, நாகயக்சி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோருக்கான இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சன்னிதிகள் உள்ளன. சுந்தரருக்கும், சேர மன்னனுக்கும் தனிச்சன்னிதி இருக்கிறது. [3] மலை நாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம் என்ற சிறப்பினை இத்தலம் பெறுகிறது. [5] [6]
Remove ads
விழாக்கள், வழிபாட்டு நேரம்
மாசி மாதம் மகா சிவராத்திரியும், அமாவாசையில் ஆறாட்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[4] சுந்தரர் கயிலாசம் சென்ற ஆடி சுவாதி நாளன்று ஆண்டுதோறும் சுந்தரருக்கும், சேரமானுக்கும் அபிஷேகம் செய்து விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூசை செய்யப்படுகிறது.[1] இக்கோயில் காலை 5.00 முதல் 11.00 வரையிலும், மாலை 5.00 முதல் இரவு 8.00 வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.[3]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
படத்தொகுப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads