திருவாண்டார்கோயில் பஞ்சநதீசுவரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவாண்டார்கோயில் பஞ்சநதீசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.[1]
Remove ads
அமைவிடம்
இக்கோயில் இந்தியாவில் தமிழகத்தின் அருகே புதுவை மாநிலத்தில் அமைந்துள்ளது. ஆண்டார் கோயில் என்றும், திருவாண்டார் கோயில் என்றும் இக்கோயில் அழைக்கப்பபடுகிறது.விழுப்புரம்-பாண்டிச்சேரி (கோலியனூர் கண்டமங்கலம் வழி) பேருந்து சாலையில் கோலியனூர், வளவனூரை அடுத்து புதுவை மாநில எல்லையில் சிறிது தூரத்தில் அமைந்துள்ளது.[1]
சிறப்பு
எண் (அட்ட) பைரவர்களுள் ஒருவராகிய வடுக பைரவர் முண்டகன் என்னும் அசுரனைக் கொன்று பழிதீர வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
தேவாரம்
ஞானசம்பந்தர் இத்தலத்தினைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
- தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக்
- கிளரும் அரவார்த்துக் கிளரும் முடிமேலோர்
- வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
- ஒளிரும் வடுகூரில் ஆடும் மடிகளே. - திருஞானசம்பந்தர் தேவாரம் - 1.87.6
திருப்புகழ்
வடுகூர் திருத்தலத்தின் முருகப்பெருமான் அருணகிரினாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர்.
சந்தம்
தனதன தனனா தனதன தனனா தனதன தனனா ...... தனதான
பாடல்
அரியய னறியா தவரெரி புரமூ
ணதுபுக நகையே ...... வியநாதர்
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
றழலையு மழுநேர் ...... பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
கமும்விழ விழியே ...... வியநாதர்
மனமகிழ் குமரா எனவுன திருதாள்
மலரடி தொழுமா ...... றருள்வாயே
அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
அவனியை வலமாய் ...... வருவோனே
அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
அயில்தனை விசையாய் ...... விடுவோனே
வரிசையொ டொருமா தினைதரு வனமே
மருவியொர் குறமா ...... தணைவேடா
மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
வருதவ முநிவோர் ...... பெருமாளே.
சொல் விளக்கம்
அரியயன் அறியாதவர் ... திருமாலும் பிரமனும் அடி முடி காணமுடியாதவர்,
எரி புரமூணதுபுக நகை ஏவியநாதர் ... நெருப்பு திரிபுரத்திலும் புகுமாறு சிரித்தே எரித்த தலைவர்,
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதி ... விளங்கும் சடை மீது கங்கை என்னும் ஒப்பற்ற மாதினைக் கொண்டு அவளது தலைவராகவும் இருப்பவர்,
சீறழலையும் மழுநேர்பிடிநாதர் ... சீறிவந்த நெருப்பையும் மழு ஆயுதத்தையும் நேராகக் கையில் ஏந்திய தலைவர்,
வரைமக ளொருகூ றுடையவர் ... மலைமகளாம் பார்வதியை ஒரு பாகத்தில் உடையவர்,
மதனாகமும்விழ விழியேவியநாதர் ... மன்மதனின் உடல் சாம்பலாக விழ நெற்றிக் கண்னை ஏவிய தலைவர்,
மனமகிழ் குமரா ... (அத்தகைய சிவபிரான்) மனமகிழும் குமரனே,
என உனது இருதாள் மலரடி ... என்று கூறி உன் இரண்டு தாளாகிய மலர்ப் பாதங்களை
தொழுமாறு அருள்வாயே ... வணங்கும்படி அருள் தருவாயாக.
அருவரை யிருகூ றிட ... அரிய கிரெளஞ்சமலை இரு பிளவாகும்படிச் செய்து,
ஒருமயில்மேல் அவனியை வலமாய் வருவோனே ... ஒப்பற்ற மயில் மீது ஏறி உலகை வலமாக வந்தவனே,
அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் ... தேவர்களின் பகைவராம் பெரும் அசுரர்களின்
சிரமேல் அயில்தனை விசையாய் விடுவோனே ... தலைகள் மீது வேலை வேகமாய் எறிந்தவனே,
வரிசையொடு ஒருமா தினைதரு வனமே மருவி ... வரிசையாக ஒப்பற்ற சிறந்த தினைச் செடிகள் வளரும் காட்டுக்குச் சென்று,
யொர் குறமாது அணைவேடா ... ஓர் குறப்பெண் வள்ளியை அணைந்த வேடனே,
மலைகளில் மகிழ்வாய் ... குன்று கண்ட இடங்களில் குதூகலிப்பவனே,
மருவிநல் வடுகூர் வருதவ முநிவோர் பெருமாளே. ... மனம் பொருந்தி நல்ல வடுகூர்* என்ற தலத்தில் வருகிற தவமுனிவர்களின் பெருமாளே
Remove ads
படக்காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
