தேவாரம்

சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் From Wikipedia, the free encyclopedia

தேவாரம்
Remove ads

தேவாரம் (Tevaram) என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள்.

Thumb
கரூர் மாவட்டம் நந்தமேடு வீரபாண்டீசுவரர் கோயிலில் உள்ள நால்வர் சிலைகள். இடமிருந்து வலமாக ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்.
Remove ads

பாடலாசிரியர்கள்

முதல் இருவரும் பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம் ஆகிய சமயங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி அடையத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊரூராகச் சென்று சமயப் பிரச்சாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.

தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர்.

திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம்.

பொ.ஊ. 10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார்.

சுந்தரர் தேவாரம்

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம்.[1] இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.

இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன.[1] அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன.[1] தேவாரங்களில் செந்துருத்திப் பண் கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற இருவரான ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களை பாடவில்லை.[1]

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம்; அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.[2]

Remove ads

தேவாரப் பதிகங்கள் தொகுக்கப்பட்ட முறை

பண்முறை:

பண் வாரியாகத் திரட்டி ஒன்று முதல் ஏழு திருமுறையாக அடைவு செய்துள்ள முறை முதலாவதாகும். இது “பண்முறை” எனப்படும்.
தேவார ஆசிரியர் மூவருள் இயலிசைத் தமிழாகிய திருப்பதிகங்களை முதன்முதல் அருளிச் செய்தவர் திருஞானசம்பந்தர் ஆதலின், அவர் அருளிய திருப்பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாகவும், அவர்தம் கெழுதகை நண்பராய் விளங்கிய திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் நான்காம் திருமுறை – ஐந்தாம் திருமுறை – ஆறாந்திருமுறை என மூன்று திருமுறைகளாகவும், இவ்விரு பெருமக்களும் வாழ்ந்த காலப்பகுதியையொட்டிச் சில ஆண்டுகள் பிற்பட்டுத் தோன்றிய நம்பியாரூரர் ஆகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள் ஏழாம் திருமுறையாகவும் தொகுக்கப்பட்டன. இப்பெருமக்கள் மூவரூள் முறையே ஒவ்வொருவரும் அருளிச் செய்தத் திருப்பதிகங்களில் அமைந்த பண்களை வகைப்படுத்தி ஒவ்வொரு பண்ணுக்கும் உரிய திருப்பதிகங்களையும் ஏழு திருமுறைகளாக வகுத்தெழுதியது பழைய முறையாகும்.

அடங்கன் முறை

திருத்தலங்கள் வாரியாக மூவர் பாடல்களைத் தொகுத்து அடைவு செய்த முறை இரண்டாவதாகும். இது “அடங்கன் முறை” எனப்படும்.

தலமுறை

மூவரில் ஒவ்வொருவர் பதிகங்களையும் தனித்தனியாக வைத்துத் தலங்கள் வாரியாகத் தொகுத்து அடைவு செய்த முறை மூன்றாவதாகும். இது தலமுறை எனப்படும்.

தலமுறையென்பது, கோயில், திருவேட்களம் முதலாகத் திருப்பதிகக் கோவையிற் குறித்த முறையையொட்டித் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களையெல்லாம் தில்லைப் பெருங்கோயில் முதலாக வரிசைப்படுத்தி அத்தலங்களுக்குரிய தேவாரப் பதிகங்களை முற்குறித்த ஏழு திருமுறைப் பாகுபாட்டிற்கு ஏற்ப முறைபடச் சேர்த்து அமைத்த முறையாகும்.

பாடியவாறு:

பெரியபுராணத்தில் மூவரின் வரலாறுச் சேக்கிழார் கூறிவரும் போது, இன்ன பதிகம் – ஊர் எல்லையில் / இறைவன் திருமுன் / வலம் வரும்போது பாடப்பெற்றது என்று கூறி வருவதை அறியலாம். அதன்படி தேவாரம் பாடப்பெற்ற காலமுறைப்படி ஒரு தொகுப்பு இருந்தது என்று உறுதி செய்யலாம். சோழர் வரலாற்றில் அக்குறிப்பு உள்ளது. அதற்கு “பாடியவாறு” என்று பெயர்.

தற்கால நடைமுறை

தலமுறை, பண்முறை வகைகளில் பண்முறையமைப்பே பழைய ஏட்டுச்சுவடிகளில் இடம் பெற்றுள்ளது.

மூவர் தேவாரப்பதிகங்களை ஏழு திருமுறைகளாகப் பகுத்து வழங்கும் திருமுறைப் பகுப்புக்கு அடிப்படையாயமைந்தது இப்பண்முறையமைப்பே எனக் கருதல் பொருந்தும். பண்முறையமைப்பாகிய இதனை ஆதாரமாகக் கொண்டு நோக்கினால்தான் மூவர் திருப்பதிகங்களையும் முதல் ஏழு திருமுறைகளாகப் பகுத்து வழங்கிய நம் முன்னோரது பகுப்பு இனிது விளங்கும். தேவாரத் திருப்பதிகங்களைத் தலமுறையில் அமைத்துப் பயிலும் வழக்கம் பிற்காலத்தில் தோன்றியதெனவே கருதவேண்டியுள்ளது. மூர்த்தி, தலம், திர்த்தம் என்பவற்றை முறையே கண்டு வழிபடும் விருப்புடைய சிவநேசச்செல்வர்கள், தாம் வழிபட விரும்பிய ஒவ்வொரு தலத்திற்கும் அமைந்த தேவாரத் திருப்பதிகங்கள் முழுவதையும் நாள்தோறும் முறையே பாராயணஞ் செய்தற்கு ஏற்ற வண்ணம் முறைப்படுத்தப்பெற்றதே இத்தலமுறைப் பகுப்பாகும். இப்பகுப்பு தில்லைப்பெருங்கோயிலை முதன்மைத் திருத்தலமாகக் கொண்டு அமைந்திருப்பது தேவார ஆசிரியர் மூவர் திருவுள்ளத்திற்கும் ஏற்புடையதாகும். இது சிவத்தலங்களெல்லாவற்றிற்கும் முதலில் வைத்துப் போற்றத்தகும்

சிறப்புடைய திருத்தலம் என்ற நோக்கத்துடன் தில்லைப் பெருங்கோயிலைப் பற்றி அம் மூவரும் உளமுவந்து பாடிய திருப்பாடற் குறிப்புகளால் நன்கு புலனாகும். இக்குறிப்பினை விளக்கும் முறையில் கோயில், திருவேட்களம், நெல்வாயில், கழிப்பாலை எனத் தொடங்கும் திருப்பதிகக் கோவை அமைந்திருத்தல் அறியத்தக்கதாகும். மேற்குறித்த பண்முறை, தலமுறை என்னும் இருவகை முறைகளுள் தேவார ஆசிரியர் காலந்தொட்டு இடையீடின்றி வழங்கிவருவதும் சைவத்திருமுறைகள் பன்னிர்ண்டு என்ற பகுப்பிற்கு நிலைக்களமாக அமைந்ததும் பண்முறையே யாதலின் அம்முறையினைப் பின்பற்றித் தேவாரத் திருப்பதிகங்களின் அமைப்பினை நோக்குதல் ஏற்புடையதாகும்.[3]

Remove ads

தேவாரப் பாடல்கள் எண்ணிக்கை

திருமுறை பாடியவர்(கள்) பாடல் எண்ணிக்கை
முதலாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1,469
இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1,331
மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1,358
நான்காம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 1,070
ஐந்தாம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 1,015
ஆறாம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 981
ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் 1,026
மொத்தம் 8,227

பண் அமைத்தவர்

இப்பொழுதுள்ளபடி தேவாரப் பாடல்களுக்குப் பண் அமைத்துக் கொடுத்தவர் இராசேந்திர பட்டணத்திலிருந்த ஒரு பெண்மணி என்று உ.வே.சாமிநாதய்யர் குறிப்பிடுகின்றார்.[4]

தேவார காலத்து இசைக் கருவிகள்

1. யாழ் 2. வீணை 3. குழல் 4 கின்னரி 5, கொக்கரி 6. சச்சரி 7. தக்கை 8. முழவம் 9. மொந்தை 10.மிருதங்கம் 11. மத்தளம் 12. தமருகம் 13. துந்துபி 14 குடமுழா 15. தத்தலகம் 16. முரசம் 17. உடுக்கை 18. தாளம் 19 துடி 20. கொடுகொட்டி முதலியன. இவற்றுள், பல பண்டைக்கால முதலே தமிழகத்தில் இருந்தவை. தேவாரத்தில் காணப்படும் பெரும்பாலான பண்கள் தமிழ்நாட்டிற்கே உரியவை. அவை பண்டை இசை நூல்களில் (அழிந்துபோன நூல்களில்) கூறப்பட்ட இசை நுணுக்கம் பொருந்தியவை. அப் பண்களில் சில சிலப்பதிகாரத்துட் காணலாம். பல்லவப் பேரரசர் காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ்ப்பண்களும் தமிழ் இசையும் களிநடம் புரிந்தன என்பதற்குத் திருமுறைகளே ஏற்ற சான்றாகும்.[5]

Remove ads

இவற்றையும் காண்க

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads