தெம்னே மக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெம்னே மக்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் வாழும் ஒரு இனக்குழுவினர்.[1][2] இவர்களை திமே, தெமென், திம்னி, திம்மனி ஆகிய பெயர்களாலும் அழைப்பதுண்டு. இவர்கள் பெரும்பாலும், சியேரா லியோனியின் வடமேற்கு, நடுப் பகுதிகளிலும், தேசியத் தலைநகரமான பிரீடவுனிலும் வாழ்கின்றனர்.[2] கினியாவிலும் சில தெம்னேக்கள் வாழ்கின்றனர்.[3] சியேரா லியோனியின் மக்கள்தொகையின் 35%க் கொண்ட தெம்னே மக்களே அந்நாட்டின் மிகப்பெரிய இனக்குழு. 31% ஆன மென்டே மக்கள் இவர்களுக்கு அடுத்த பெரிய இனக்குழு.[4] தெம்னே மக்கள் பேசும் மொழியும் தெம்னே என்றே அழைக்கப்படுகிறது. இது நைகர்-கொங்கோ மொழிகளின் மெல் கிளையைச் சேர்ந்தது.[5]
தெம்னே மக்கள் கினியாவில் உள்ள புட்டா சலான் என்னும் பகுதியில் தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 15ம் நூற்றாண்டில் புலானி ஆக்கிரமிப்புகளில் இருந்து தப்புவதற்காக இவர்கள் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து சியேரா லியோனியின் பகுதியாகிய கொலந்தே ஆற்றுக்கும், ரோக்கெல் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் குடியேறினர்.[1][3] இவர்களது மரபுவழிச் சமயம் போரோ, போன்டோ என்பன. முசுலிம் வணிகர்களூடாக இசுலாம் சியேரா லியோனிக்கு அறிமுகமானது. காலப்போக்கில் பெரும்பாலான தெம்னேக்கள் இசுலாத்துக்கு மதம் மாறினர்.[6] குடியேற்றவாதக் காலத்தில் சிலர் கிறித்தவரானார்கள். சிலர் தொடர்ந்தும் தமது மரபுவழிச் சமயத்தையே கைக்கொண்டு வருகின்றனர்.[1][3]
மரபுவழியாக தெம்னேக்கள் வேளாண்மை செய்பவர்கள். இவர்கள் அரிசி, மரவள்ளிக்கிழங்கு, வரகு, கோலா விதை போன்றவற்றைப் பயிர் செய்கின்றனர். நிலக்கடலையும், புகையிலையும் அவர்களுடைய காசுப் பயிர்கள்.[3] சில தெம்னேக்கள் மீன்பிடிப்பவர்களாகவும், கைப்பணியாளர்களாகவும், வணிகர்களாகவும் உள்ளனர். தெம்னே ஒரு தந்தைவழிச் சமூகம். பரவலாக்கிய அரசியல் தன்மையுடன் கூடிய இச்சமூகம், அகமண உறவைக் கடைப்பிடிக்கும் படிநிலை அமைப்புக்கொண்டது.[7][8] கீழ் சகாரா ஊடாக அத்திலாந்திக் பகுதியில் இருந்த ஐரோப்பியக் குடியேற்றங்களுக்குக் கொண்டு செல்வதற்காக இடம் பெற்ற அடிமை வணிகத்தினால் பாதிக்கப்பட்ட இனக்குழுக்களில் தெம்னேக்களும் அடங்குவர்.[9][10]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads