தேசிய தவ்கீத் ஜமாத்

இலங்கையைச் சேர்ந்த அடிப்படைவாத இசுலாமியக் குழு From Wikipedia, the free encyclopedia

தேசிய தவ்கீத் ஜமாத்
Remove ads

தேசிய தவ்கீத் ஜமாத் (National Thowheeth Jama'ath NTJ; அரபி: جماعة التوحيد الوطنية, "தேசிய ஓரிறைவாத அமைப்பு") என்பது இலங்கையைச் சேர்ந்த ஒரு அடிப்படைவாத, இசுலாமிய ஜிகாதியக் குழுவாகும். இக்குழுவே இலங்கையில் 2019 ஏப்ரல் 21 அன்று உயிர்ப்பு ஞாயிறுத் தற்கொலைக் குண்டுவெடிப்புகளை நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது.[10][11] இவ்வமைப்பு இசுலாமிய அரசுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக நம்பப்படுகிறது.[12] இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன இவ்வியக்கத்தை 2019 ஏப்ரல் 27 இல் தடை செய்து, அதனை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்தார்.[13]

விரைவான உண்மைகள் தேசிய தவ்ஹீத் ஜமா'அத் National Thowheeth Jama'ath, வேறு பெயர் ...
Remove ads

நோக்கங்கள்

இக்குழு தவ்கீது எனப்படும் ஓரிறை மற்றும் "இசுலாமியத் தீவிரவாதக் கொள்கையை" முன்னிறுத்திப் போராடுகிறது.[10] இவ்வமைப்பு "இலங்கையில் உலகளாவிய ஜிகாத் இயக்கத்தைப் பரப்பவும், சமூகத்தில் வெறுப்பு, பயம் மற்றும் பிளவுகளை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக" வன்முறை தீவிரவாதத்தின் ஆய்வுக்கான பன்னாட்டு மையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.[10]

வரலாறு

தேசிய தவ்கீத் ஜமாத் என்ற இவ்வமைப்பு 2016 ஆண்டளவில் செயற்பட்டு வந்த இலங்கை தவ்கீத் ஜமாத் தீவிரவாத இசுலாமிய இயக்கத்தில் இருந்து பிரிந்து உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[14] சிறுவர்களிடையே தீவிரவாத, அடிப்படைவாதக் கருத்துகளைப் பரப்புவதாக இவ்வமைப்பின் தலைவர்கள் மீது 2016 ஆம் ஆண்டில் இலங்கையின் பல முசுலிம் அமைப்புகள் குற்றச்சாட்டுகளைச் சுமத்தின.[15] இவ்வமைப்பின் அப்துல் ராசிக் என்ற தலைவர் இனவாதக் குற்ரங்களுக்காகக் கைது செய்யப்பட்டார்.[10]

2018 இல், முசுலிம்களுக்கு எதிரான கலவரங்களை அடுத்து, பௌத்த சிலைகளை சேதப்படுத்தியதாக இவ்வமைப்பின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.[16][17] பர்மாவில் ரோகின்யா முசுலிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள், இலங்கை, இந்தியா, மற்றும் ஏனைய நாடுகளில் முசுலிம்களுக்கு எதிரான தாக்குதல்களை மையப்படுத்தி தனது பிரசாரங்களை முன்னெடுத்து வந்தது.[18]

உயிர்ப்பு ஞாயிறு தாக்குதல்கள்

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் இடம்பெற்ற உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதற்குப் பத்து நாட்களுக்கு முன்னர் தேசிய தவ்கீத் ஜமாத் என்ற அமைப்புக் குறித்தும், இலங்கையில் நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்கள் குறித்தும் இலங்கைக் காவல்துறையினருக்கு புலனாய்வுப் பிரிவினால் அறிவிக்கப்பட்டது. இவ்வறிக்கையில், "தேசிய தவ்கீத் ஜமாத் "கிறித்தவத் தேவாலயங்கள் மீதும் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத்" தெரிவிக்கப்பட்டிருந்தது.[19] ஆனாலும், இலங்கை அரசு அதிகாரிகளுக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ இது குறித்து தகவல் தரப்படவில்லை எனவும், இவ்வெச்சரிக்கை முறையாக அகவனிக்கப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாக்குதல்களின் பின்னர் ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.[10]

தாக்குதல்களின் பின்னர், 2019 ஏப்ரல் 22 அன்று இலங்கை அமைச்சர் ராஜித சேனரத்தினா கருத்துத் தெரிவிக்கையில், தாக்குதலில் ஈடுபட்ட ஏழு தற்கொலைக் குண்டுதாரிகளும் தேசிய தவ்கீத் ஜமாத் இயக்கத்தைச் சேர்ந்த இலங்கையர் எனவும், ஆனாலும் இவர்களுக்கு வெளிநாட்டுத் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் கூறினார்.[20]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads