மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேனுபுரீசுவரர் கோயில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், மாடம்பாக்கம் பேரூராட்சியில்[1] அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் தேனுபுரீஸ்வரர், தாயார் தேனுகாம்பாள். இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாக கபில தீர்த்தமும் உள்ளன.
Remove ads
அமைவிடம்
தாம்பரத்திலிருந்து (கிழக்கு) சுமார் 10 கி.மீ. தொலைவில் மாடம்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ளது. தாம்பரம்–வேளச்சேரி முக்கிய சாலையில் வடக்கு நோக்கிச் சென்று ராஜகீழ்ப்பாக்கம் அருகே மாடம்பாக்கம் முக்கிய சாலையில் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம். அஞ்சல் முகவரி: அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் மாடம்பாக்கம் - 600073, சென்னை.
கோயில் அமைப்பு

மூலவர் தேனுபுரீஸ்வரர் கருவறையில் சதுர பீடத்தில், சுமார் ஒரு சாண் உயரத்தில் 3 விரற்கடை அகல லிங்க வடிவில் உள்ளார். பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் தெரிகிறது. அம்மன் தேனுகாம்பாளுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. சிவகாமி அம்மையுடனும் மாணிக்க வாசகருடனும் நடராசர் காணப்படுகிறார். கஜபிருஷ்ட விமானத்துடனமைந்த கருவறை (யானையின் பின்புறம்-மாடம் போன்ற அமைப்பு) இக்கோயிலின் சிறப்பும் பெயர்க்காரணமும் ஆகும்.

கோயில் முன்மண்டபத்திலுள்ள 18 தூண்களும் அவற்றில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களும் குறிப்பிடத் தக்கவை. ஒரு தூணில் வடிக்கப்பட்டுள்ள சரபேசுவரருக்கு ஒவ்வொரு ஞாயிறன்றும் (மாலை 3.30-6.30) சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சுவாமி சன்னிதியிலுள்ள தட்சிணாமூர்த்தி ஆலமரத்தடியில் இல்லை. துர்க்கை கையில் கிளி காணப்படுகிறது.

மூலவர் | தேனுபுரீசுவரர் |
உற்சவர் | சோமாஸ்கந்தர் |
அம்மன்/தாயார் | தேனுகாம்பாள் |
தல விருட்சம் | வில்வ மரம் |
தீர்த்தம் | கபில தீர்த்தம் |
ஆகமம்/பூஜை | |
பழமை | |
புராண பெயர் | மாடையம்பதி |
Remove ads
தல வரலாறு
கபில முனிவர் சிவபூசை செய்வதற்கு லிங்கத்தை இடது கையில் வைத்து வலது கையால் மலர்தூவி வழிபட்டதாகவும், கையில் லிங்கத்தை வைத்து வழிபட்ட முறை சரியல்ல எனக் கூறி சிவன் அவரை பசுவாகப் பிறக்கச் சாபம் அளித்ததாகவும், பசுவாகப் பிறந்த கபிலர் இத்தலத்தில் சிவனை வழிபட்டு முக்திபெற்றதாகவும் மரபு வரலாறு உள்ளது. பசு வடிவில் கபிலர் வழிபட்ட தலமென்பதால் சுவாமி, "தேனுபுரீஸ்வரர்' எனப்பட்டார். (தேனு-பசு). இவருக்கு "உலகுய்ய வந்த சிற்றேரி நாயனார்' என்றும் பெயர் உண்டு.
சுந்தர சோழரின் அமைச்சரான அன்பில் அநிருத்தர் இக்கோயிலைக் கட்டியதாகவும் பின்னர் முதலாம் குலோத்துங்கனால் இது கற்றளியாக்கப்பட்டதாகவும், முன்மண்டபமும் அதிலுள்ள தூண்களும் பல்லவர்கள் காலத்தியது என்றும் விசய நகரப் பேரரசாலும் இக்கோயில் பராமரிக்கப்பட்டது என்றும் இக்கோயிலில் தற்காலத்திய கற்பலகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இக் கற்பலகை கோயிலின் முன்புறம் திறந்து வைக்கப்பட்டுள்ள புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் இறைவனும் இறைவியும் `சிற்றேரி ஆளுடைய நாயனார்' என்றும் `நம்பிராட்டியார்' என்றும் கூறப்பட்டிருக்கிறார்கள்.
திருப்புகழில்

இத்தலம் மற்றும் இங்குள்ள சிவசுப்பிரமணியர் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழில் (பாடல்கள்: 701, 702) பாடியுள்ளார். அப்பாடல்கள் கோயில் முன்மண்டப உட்சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன.
- திருப்புகழ்-பாடல் 701
தோடு றுங்குழை யாலே கோல்வளை
சூடு செங்கைக ளாலே யாழ்தரு
கீத மென்குர லாலே தூமணி ...... நகையாலே
தூம மென்குழ லாலே யூறிய
தேனி லங்கித ழாலே யாலவி
லோச னங்களி னாலே சோபித ...... அழகாலே
பாட கம்புனை தாளா லேமிக
வீசு தண்பனி நீரா லேவளர்
பார கொங்கைக ளாலே கோலிய ...... விலைமாதர்
பாவ கங்களி னாலே யான்மயல்
மூழ்கி நின்றய ராதே நூபுர
பாத பங்கய மீதே யாள்வது ...... கருதாயோ
நாட ருஞ்சுடர் தானா வோதுசி
வாக மங்களி னானா பேதவ
நாத தந்த்ரக லாமா போதக ...... வடிவாகி
நால்வி தந்தரு வேதா வேதமு
நாடி நின்றதொர் மாயா தீதம
னோல யந்தரு நாதா ஆறிரு ...... புயவேளே
வாட யங்கியவேலா லேபொரு
சூர்த டிந்தருள் வீரா மாமயி
லேறு கந்தவி நோதா கூறென ...... அரனார்முன்
வாச கம்பிற வாதோர் ஞானசு
கோத யம்புகல் வாசா தேசிக
மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads