நடவுப்பாட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நடவுப்பாட்டு நாட்டார் பாடல் வகைகளுள் ஒன்று. நாட்டுப்புற மக்கள் வாழ்வியலில் பெரும் பங்கு கொண்டு விளங்குபவை நாட்டுப்புறப் பாடல்கள். அத்தகைய நாட்டுப்புறப்பாடல்களுள் தொழிற் பாடல்கள் மிக முக்கியமான ஒன்று. தொழிற் பாடல்கள் நாட்டுப்புற மக்களால் வேலை செய்யும் போது களைப்பு தெரியாமல் இருக்கவும், மன மகிழ்ச்சிக்காகவும் பாடப்படுவன. அத்தொழிற் பாடல்களுள் வேளாண் தொழிற் பாடல்கள் விதைவிதைத்து, நீர் பாய்ச்சி, களையெடுத்து, கதிர் அறுத்து, போரடித்து, வண்டியில் ஏற்றி சொல்லும் வரை பல வளர்ச்சிப் படிகள் உள்ளன. அவ்வளர்ச்சிப் படிகள் ஒவ்வொன்றுக்கும் அவ்வேலையைச் செய்யும் நிலையில் பாடல்கள் பாடப்படுகின்றன. அவற்றை ஏற்றப்பாட்டு, ஏர்பாட்டு, நடவுப்பாட்டு, களையெடுப்புப் பாட்டு, கதிர் அறுப்புப் பாட்டு, நெல் தூற்றுவோர் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என பல நிலைகளாக வகைப் படுத்தலாம். அவற்றுள் ஒன்று நடவுப்பாட்டு. நாற்று நடவின்போது நாட்டுப்புறப் பெண்களால் காலங்காலமாக இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
Remove ads
இயல்புகள்
நாற்று நடும் பெண்களில், ஒரு பெண்பாட மற்றவர் சேர்ந்து குழுவாகப் பாடுவதும், ஒரு பெண் மட்டுமே தனியாகப் பாடுவதாகவும் அல்லது எல்லாப் பெண்களும் சேர்ந்து பாடுவதாகவும் இப்பாடல்கள் அமைந்துள்ளன. நாட்டுப்புறப் பாடல்களுக்கே உரித்தான வாய்மொழியாகப் பரவல், மரபு வழிப்பட்டது, ஒரு வடிவ அமைப்பிற்கு உட்பட்டது, திரிபடைந்து வழங்குவது, ஆசிரியர் இல்லாமை என்பன போன்ற தன்மைகள் நடவுப் பாடல்களுக்கும் பொருந்தும். நடவு செய்வோர் உழைப்பின் களைப்பைப் போக்கிக் கொள்ளவும், மன மகிழ்வுக்காகவும் இப்பாடல்கள் பாடப்படுகின்றன.
Remove ads
பாடுபொருள்
நடவு வேலைகளைச் செய்பவர்கள் பெண்களே என்பதால் அவர்கள் பாடும் பாடல்களில் அவர்களின் வாழ்வியல் நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகின்றன. எனவே நடவு பற்றி மட்டுமல்லாமல், ஏற்றம், ஏர் ஓட்டுதல், நீர் பாய்ச்சுதல், நிலத்தின் தன்மை, இயற்கை அழகு, மழை, வெயில் போன்ற வேளாண்மை சார்ந்த பிற நிகழ்வுகளும், காதல், வீரம், வறுமை, பக்தி, வழிபாடு, இல்லற வாழ்வு, மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, சரியான கூலி கிடைக்காமை, மக்கள் பெருமை, அத்தை மகனைக் கிண்டல் செய்தல் போன்ற சுவையான நிகழ்ச்சிகளும் பாடுபொருளாகின்றன.
Remove ads
நடவும் இறை வழிபாடும்
நல்ல நேரம் பார்த்து முதலில் நிலத்தின் சனி மூலையில் நாற்று நடவு செய்யப்படும். முதலில் நாற்று நடும் பெண் கடவுளை வணங்கி ஒவ்வொரு அலகாக நடுவாள். நட்ட பயிர் நிமிர்ந்து வளர்ந்து விளைச்சல் பெருக வேண்டும் என்று விநாயகர், முருகர், மாரியம்மன், எல்லையம்மன், ஐயனார் போன்ற இன்னபிற தெய்வங்களை வாழ்த்திப் பாடுவாள்.
சந்திரரே சூரியரே
சாமி பகவானே
சந்திரரே நான் நினைச்சி
சாய்ச்சேன் திருஅலவு
சாய்ச்ச திரு அலவு
சமச்சி பறி ஏறனும்
எடுத்த திரு அலவு
எழுந்து பறி ஏறனும்
என்றவாறு கடவுளை வாழ்த்திப் பாடுவர்.
சில நடவுப் பாடலடிகள்
எடுத்துக்காட்டு ஒன்று
தங்கரதம் நானிருக்க அம்மாடியோ
அந்த தட்டுக்கெட்ட அத்தபுள்ள அம்மாடியோ
தங்காளையும் மாலையிட்டான்
உருமத்தில் பூத்த பூவு
ஊசி மல்லி நானிருக்க
ஊசடிச்ச பூவுக்கேதான்
ஊரு ஊரா சுத்துரானே
காலையில பூத்த பூவு
கனகாம்பரம் நானிருக்க
கவுச்சடிச்ச பூவுக்கேதான்
அவன் காடு காடா சுத்துரானே.
எடுத்துக்காட்டு இரண்டு
நித்தம் நித்தம் வேலை செய்து
மொத்தமாக கூலி கேட்டா
முக்காபடி கொடுக்கறீங்க
எடுத்துக்காட்டு மூன்று
பாலும் பழமும் சாமி உங்களுக்கு
சாமி பழநீராம் எங்களுக்கு
இட்டலி காபி சாமி உங்களுக்கு
சாமி இருத்த நீராம் எங்களுக்கு
Remove ads
துணை நின்ற நூல்
1.மு. பொன்னுசாமி, நடவுப்பாட்டு, இந்து பதிப்பகம், 1998.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads