நடு ஆசியா
ஆசியாவிலுள்ள புவியியற் பரப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
நடு ஆசியா (Central Asia) ஆசியா கண்டத்தின் நடுவில் உள்ள, நிலப்பகுதியால் சூழப்பட்ட, பரந்த ஒரு பகுதியாகும். நடு ஆசியா என்பதற்குப் பல வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன எனினும், எதுவுமே பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன் எல்லைகளை வரையறுப்பதில் தெளிவின்மை நிலவினாலும்கூட, இந்தப் பகுதிக்கெனப் பொதுவான இயல்புகள் சில உள்ளன. முதலாவதாக, நடு ஆசியாவானது, வரலாற்று நோக்கில், நாடோடி மக்களோடும், பட்டுப் பாதையோடும் நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இப்பகுதி, ஐரோப்பா, மத்திய கிழக்கு, தெற்காசியா, கிழக்காசியா ஆகிய பகுதிகளிடையே, மக்கள், பொருட்கள், எண்ணக்கருக்கள் என்பவற்றின் பரிமாற்றத்துக்கான இணைப்புப் பாலமாக விளங்கியது. [1]



Remove ads
வரைவிலக்கணம்
நடு ஆசியா ஒரு தனித்துவமான பகுதி என்ற எண்ணக்கரு, 1843 ஆம் ஆண்டில், புவியியலாளரான, அலெக்சாண்டர் வொன் ஹம்போல்ட் (Alexander von Humboldt) என்பவரால் முன்வைக்கப்பட்டது. இப்பகுதியின் எல்லைகள் தொடர்பாகப் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஸ்டாலினுக்கு முன்பிருந்த முறைமையைத் தழுவி, பல பாடநூல்கள் இன்னும் இப்பகுதியை துருக்கிஸ்தான் என்றே குறிப்பிடுவதாகக் கூறுகிறார்கள்.
நடு ஆசியாவுக்கான மிகக் குறுகிய பரப்பளவைக் குறிக்கும் வரைவிலக்கணம் சோவியத் ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ வரைவிலக்கணமாகும். இதன்படி நடு ஆசியா, உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான், தாஜிக்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய பகுதிகளையே உள்ளடக்கியிருந்தது. கசாக்ஸ்தான் இதில் உள்ளடங்கவில்லை. சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில், அதற்கு வெளியேயும் இவ்வரைவிலக்கணம் புழக்கத்தில் இருந்தது.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், தாஷ்கண்ட் நகரில் கூடிய முன்னாள் சோவியத் ஒன்றிய நடு ஆசியக் குடியரசுகளின் தலைவர்கள், நடு ஆசியக் குடியரசின் வரைவிலக்கணத்தினுள் கசாக்ஸ்தானையும் சேர்த்துக்கொள்வதென முடிவு செய்தனர். இதன் பின்னர் இது ஒரு பொதுவான வரைவிலக்கணமாகக் கருதப்பட்டு வருகின்றது.
சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியுறுவதற்குச் சில காலத்துக்கு முன் எழுதப்பட்ட நடு ஆசியாவின் யுனெஸ்கோ பொது வரலாறு என்னும் நூல் காலநிலை அடிப்படையில் நடு ஆசியாவை மிகப் பரந்த ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டது. இதன்படி நடு ஆசியாவில் மங்கோலியா, மேற்கு சீனா, வடகிழக்கு ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் மேற்குப் பகுதி, தைக்காவுக்குக் கிழக்கேயுள்ள ரஷ்யாவின் மைய-கிழக்குப் பகுதி, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஐந்து மத்திய ஆசியக் குடியரசுகள் என்பவற்றுடன், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலுள்ள பஞ்சாப் பகுதியும் அடங்கியிருந்தது.
இன அடிப்படையில் நடு ஆசியாவை வரையறுக்கும் இன்னொரு முறையும் புழக்கத்தில் உண்டு. கிழக்குத் துருக்கிய, கிழக்கு ஈரானிய, மங்கோலிய இன மக்கள் வாழுகின்ற பகுதிகள் நடு ஆசியாவாகக் கொள்ளப்படுகின்றது. இதன்படி, சின்சியாங் (Xinjiang), தெற்கு சைபீரியாவின் துருக்கிய/முஸ்லிம்கள் வாழும் பகுதி, ஐந்து முன்னாள் சோவியத் குடியரசுகள், ஆப்கான் துருக்கிஸ்தான், என்பனவும் நடு ஆசியாவினுள் அடங்குகிறது. திபேத்தியர்களும் இதனுள் அடங்குகின்றனர். முன் குறிப்பிட்ட இன மக்களே பரந்த இப் பகுதிகளின் ஆதிக் குடிகளாவர். சீனர், ஈரானியர், ரஷ்யர் ஆகியோரின் குடியேற்றங்கள் பின்னர் ஏற்பட்டவையாகும்.
ஆசியாவின் புவியியல் மையம் தற்போது ரஷ்யக் கூட்டமைப்பில் உள்ள துவா குடியரசில் உள்ளது.
Remove ads
புவியியல்

நடு ஆசியா, பல்வேறுபட்ட புவியியல் தன்மைகளைக் கொண்ட மிகப் பரந்த பகுதியாகும். இங்கே, உயர் நிலங்களும் மலைகளும், பரந்த பாலைவனங்கள், மரங்களற்ற, கால்நடைகளின் மேய்ச்சலுக்கு ஏற்ற, யுரேசியப் புல்வெளிகள் அடங்கியுள்ளன. நடு ஆசியாவின் பெரும்பகுதி, வறண்டது. வேளாண்மைக்குப் பொருத்தமற்றது. கோபி பாலைவனம், 77° கிழக்கிலுள்ள பாமிர் மலைகள் அடிவாரத்திலிருந்து, 116°-118° கிழக்கிலுள்ள கிங்கன் மலை வரை பரந்துள்ளது. ஆமூ தாரியா ஆறு இப்பகுதியில் பாய்கிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads