ஆசியா
உலகின் மிகப்பெரியதும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான ஒரு கண்டம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆசியா (ஆங்கிலம்: Asia) (ⓘ) (/ˈeɪʒə/ (ⓘ) or /ˈeɪʃə/) உலகின் மிகப்பெரியதும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான ஒரு கண்டம். பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது.[3]
பொதுவாக ஆசியா, யுரேசியாவின் கிழக்கில் ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. இது சூயெசுக் கால்வாய்க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும்; காக்கேசிய மலைகள், கசுப்பியன் கடல், கருங்கடல் என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது.[4][5] கிழக்கில் பசிபிக் பெருங்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன.
ஆசியா என்னும் இடப்பெயர் மிகப் பழமையானது. இதன் அளவு, பல்வகைமைத் தன்மை என்பவற்றை நோக்கும்போது, இது பல்வேறுபட்ட பகுதிகளையும், மக்களையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டுக் கருத்துருவேயன்றி, ஒருதன்மைத்தான இயற்பியப் பொருள் அல்ல.[6] ஆசியாவில் பல்வேறு பகுதிகளும் மக்களும், இனக்குழுக்கள், பண்பாடு, சூழல், பொருளாதாரம், வரலாற்றுப் பிணைப்பு, அரசியல் முறைமை போன்ற விடயங்களில் தமக்குள் பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றனர்.
Remove ads
வரைவிலக்கணமும் எல்லைகளும்

கிரேக்கரின் மூன்று கண்ட முறை
ஆசியாவையும், ஐரோப்பாவையும் முதலில் வேறுபடுத்தி அறிந்தவர்கள் பண்டைக் கிரேக்கர்கள் ஆவர். அவர்கள், ஏஜியக் கடல், டார்டனெல்சு, மர்மாராக் கடல், பொசுப்போரசு, கருங்கடல், கெர்ச் நீரிணை, அசாவ் கடல் ஆகியவற்றை ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான எல்லையாகக் கொண்டனர். நைல் ஆறு ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாகக் கொள்ளப்பட்டது. எனினும், சில கிரேக்கப் புவியியலாளர்கள், செங்கடல் பொருத்தமான எல்லையாக இருக்கும் எனக் கருதினர்.[7] நைல் ஆற்றுக்கும், செங்கடலுக்கும் இடையில் இருந்த டேரியசுக் கால்வாய், பெரும்பாலான கருத்து வேறுபாடுகளுக்குக் காரணம் ஆகியது. கருங்கடலுட் கலக்கும் டொன் ஆறு ஆசியாவின் மேற்கு எல்லையாக அமைந்தது. 15 ஆம் நூற்றாண்டில் நைல் ஆற்றுக்குப் பதிலாகச் செங்கடலே ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாக நிலைபெற்றது. தொடக்கத்தில் ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லை ஆர்க்டிக் பெருங்கடல் வரை எட்டவில்லை.[7] ஆனால், நாடுகாண் பயணங்கள் வளர்ச்சியடைந்த பின்னர் இவ்வெல்லையை மீள்வரையறை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆசியா-ஐரோப்பா எல்லை
சாரக உருசியாவின் மன்னனான பேரரசர் பீட்டர், சுவீடனும் ஓட்டோமான் பேரரசும் கிழக்குப் பகுதி நிலங்களுக்கு உரிமை கொண்டாடியதை முறியடித்ததுடன், சைபீரியப் பழங்குடியினரின் ஆயுத எதிர்ப்புகளையும் முறியடித்து 1721ல் உருசியப் பேரரசை உருவாக்கினான். இப் பேரரசு யூரல் மலைகளை எட்டி அதற்கு அப்பாலும் பரந்திருந்தது. இதனால், டான் ஆறு ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாக இருந்தது வட ஐரோப்பியர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அக்காலத்தில் உருசியப் பேரரசின் முக்கியமான புவியியல் கோட்பாட்டாளராக இருந்தவர் வொன் இசுட்ராலென்பேர்க். போல்ட்டாவா சண்டையில் பிடிபட்ட ஒரு சுவீடியப் போர்க்கைதி. இவருக்குப் பீட்டரின் சைபீரிய அலுவலரான வசிலி டாட்டிசுச்சேவ் என்பவரின் தொடர்பு கிடைத்தது. அவர்மூலம் எதிர்கால நூல் ஒன்றுக்காகப் புவியியல், மானிடவியல் ஆகியவை தொடர்பிலான ஆய்வுகளைச் செய்வதற்குச் சுதந்திரம் கிடைத்தது.
1730ல், பீட்டர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், சுவீடனுக்குத் திரும்பிய வொன் இசுட்ராலென்பேர்க் ஆசியாவின் எல்லையாக ஊரல் மலைகளைக் குறித்துப் புதிய நிலப்படத் தொகுதி ஒன்றை வெளியிட்டார். புவியியல் அடிப்படையிலும், பிற பண்பாட்டுப் பாரம்பரிய அடிப்படையிலும் தமது ஐரோப்பிய அடையாளத்தை வைத்திருப்பதனால், இக்கருத்துரு குறித்து உருசியர்கள் அதிக உற்சாகம் காட்டினர். இந்தக் கருத்தைத் தானே வொன் இசுட்ராலென்பேர்க்குக் கூறியதாக டாட்டிசுச்சேவ் அறிவித்தார். எம்பா ஆறே கீழ் எல்லையாக இருக்க வேண்டும் என வொன் இசுட்ராலென்பேர்க் ஆலோசனை கூறினார். அடுத்த நூற்றாண்டு முழுவதும் பல்வேறு முன்மொழிவுகள் வெளியாயின. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் ஊரல் ஆறே எல்லை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எல்லை கருங்கடலிலிருந்து, கசுப்பியன் கடலுக்கு நகர்த்தப்பட்டது.[8] அக்காலத்து நிலப்படங்களில் டிரான்சுகாக்கேசியா ஆசியாக் கண்டத்துள் இருந்தது. அப்பகுதியின் பெரும்பகுதி பின்னர் சோவியத் ஒன்றியத்தினுள் சேர்த்துக்கொள்ளப்பட்டதால், எல்லையைத் தெற்கே நகர்த்த வேண்டும் என்னும் கருத்து எழுந்தது.
ஆசியா-ஓசானியா எல்லை
ஆசியாவுக்கும் ஓசானியாவுக்கும் இடையிலான எல்லை மலாயத் தீவுக்கூட்டங்களில் ஓரிடத்தில் வைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட "தென்கிழக்கு ஆசியாவும் ஓசானியாவும்" என்னும் தொடர், அது உருவான காலத்தில் இருந்தே பல்வேறுபட்ட புவியியல் பொருள்களை உடையதாக இருந்தது. எவ்வாறான வரைவிலக்கணங்களைக் கொடுத்தபோதிலும் ஓசானியா என்றும் ஆசியாவாக இருந்ததில்லை. மலாயத் தீவுக்கூட்டங்களில் எந்தத் தீவு ஆசியாவுக்குள் அமையும் என்பது, இத் தீவுகள்மீது பல்வேறு பேரரசுகள் கொண்டிருந்த குடியேற்றவாத உரிமைகளில் தங்கியிருந்தது. தென்கிழக்கு ஆசியாவின் எல்லை தற்போதைய நிலைக்குக் குறுகியது படிப்படியாக ஏற்பட்டது ஆகும்.[7]
Remove ads
புவியியலும் காலநிலையும்
உலகில் உள்ள கண்டங்களில் மிகப்பெரிய கண்டமே ஆசியா ஆகும். ஆசியா உலகின் 8.8% மொத்தமேற்பரப்புப் பரப்பளவு அதாவது பெருமளவு நிலப்பகுதியைக் கொண்டுள்ளதோடு மட்டுமன்றி பெரிய கடற்கரைப் பிரதேசத்தையும் ஆசியாவே கொண்டுள்ளது, அதன் நீளம் 62,800 கிலோமீற்றர்கள் ஆகும். சுயஸ் கால்வாயும், உரால் மலைகளும் கிழக்குத் திசையிலும், காகசஸ் மலைத்தொடரும், கஸ்பியன் கடலும், கருங்கடலும் தெற்குத் திசையிலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன.[4][5][9] இது கிழக்கில் அமைதிப் பெருங்கடல் ஆலும் தெற்கில் இந்தியப் பெருங்கடல் ஆலும் வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல் ஆலும் சூழப்பட்டுள்ளது. ஆசியா 48 நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒரு கண்டம், அவற்றில் இரண்டு (உருசியா மற்றும் துருக்கி) ஒரு பகுதியை ஐரோப்பியாக் கண்டத்தில் கொண்டுள்ளன.
ஆசிய பல்வேறுபட்ட காலநிலைகளையும் புவியியல் தோற்றங்களையும் கொண்டது. தினசரி உலகின் அதிக வெப்பநிலை ஆசியாவின் மேற்குப் பக்கங்களிலேயே காணப்படுகின்றது. ஆசியாவின் தென்மேற்குப் பகுதி வெப்பமான காலநிலையைக் கொண்டுள்ளது. அதிகமாகப் புயல் அடிக்கக் கூடிய வாய்ப்புக்களைக் கொண்ட இடங்களான பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு ஜப்பான் ஆசியாவில் அமைந்துள்ள இடங்கள். மங்கோலியாவின் கோபி பாலைவனம் மற்றும் அரபியன் பாலைவனம் ஆகியன மத்திய கிழக்கு வரை பரந்துள்ளன. நோபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையில் இருக்கும் இமயமலை, இந்த உலகத்தின் மிகப்பெரிய மலைத்தொடர் ஆகும்.
காலநிலை மாற்றம்
2010 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராட்சி மூலம் ஆசியாவின் 16 நாடுகள் காலநிலை மாற்றத்தால் பெரும் இடர்களைச் சந்திகின்றன எனக் கண்டறியப்பட்டது. ஆசிய நாடுகளான வங்காளதேசம், இந்தியா, வியட்நாம், தாய்லாந்து, பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியன அந்தப் பதினாறு நாடுகளில் அதிக சிக்கல்களை எதிர்கொள்ளும் நாடுகள் ஆகும்.
Remove ads
மக்கள்தொகைப் புள்ளியியல்
உலகில், மனித வளர்ச்சிச் சுட்டெண் மிகக் கூடுதலாக வளர்ந்திருப்பது கிழக்காசியாவிலேயே ஆகும். முன்னேற்றம் நலவியல், கல்வி, வருமானம் என்பவை தொடர்பிலான பகுப்பாய்வுகளின் அடிப்படையில், கடந்த 40 ஆண்டுகளில் சராசரி மனித வளர்ச்சிச் சுட்டெண் இரண்டு மடங்காகியுள்ளது. 1970ல் இருந்து மனித வளர்ச்சிச் சுட்டெண் மேம்பாட்டின் அடிப்படையில் உலகில் இரண்டாவது நிலையில் இருக்கும் சீனாவே, கல்வி, நலவியல் ஆகியவற்றில் அல்லாது வருமான அடிப்படையில் மட்டும் முதல் பத்துக்குள் அடங்கிய ஒரே நாடு ஆகும். சீனாவின் தனி நபர் வருமானம் கடந்த நான்கு பத்தாண்டுகளில் 21 மடங்கு ஆகியுள்ளதுடன், இக்காலப் பகுதியில் பல நூறு மில்லியன் மக்களை வறுமை நிலையிலிருந்து உயர்த்தியுள்ளது. இருந்தாலும், பள்ளிச் சேர்க்கை, வாழ்நாள் எதிர்பார்ப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் சீனா இப்பகுதியின் சிறப்பான வளர்ச்சி பெற்ற நாடுகளுள் அடங்கவில்லை.[10]
1970 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பாக நலவியல், கல்வி ஆகியவற்றின் மேம்பாட்டின் அடிப்படையில் விரைவாக வளரும் நாடாகத் தென்னாசிய நாடான நேப்பாளம் விளங்குகிறது. இதன் தற்போதைய வாழ்நாள் எதிர்பார்ப்பு 1970 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 25 ஆண்டுகள் கூடுதலானது. நேப்பாளத்தில் பள்ளிக்குச் செல்லும் வயதுள்ள ஐந்து சிறுவர்களில் நான்குக்கும் கூடுதலானவர்கள் இப்போது தொடக்கப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்னர் இது ஐந்து பேருக்கு ஒருவராகவே இருந்தது.[10]
மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையிலான உலகத் தரவரிசையில் சப்பானும், தென்கொரியாவும் முறையே 11, 12 ஆவது இடங்களில் உள்ளன. இவை மிக உயர்ந்த மனித வளர்ச்சி வகைக்குள் அடங்குகின்றன. இவற்றைத் தொடர்ந்து, ஆங்காங் 21 ஆவது இடத்திலும், சிங்கப்பூர் 27 ஆவது இடத்திலும் உள்ளன. ஆப்கானித்தான் மதிப்பிடப்பட்ட 169 நாடுகளுள் 155 ஆவது இடத்தைப் பெற்று, ஆசிய நாடுகளுள் மிகக் கீழான நிலையில் உள்ளது.[10]
பொருளாதாரம்
பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐரோப்பியக் கண்டத்தை அடுத்து ஆசியக் கண்டமே இரண்டாம் இடத்தில் உள்ளது. எனினும் கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையில் ஒப்பிடும்போது இதுவே முதலிடம் வகிக்கின்றது. 2011 ஆம் ஆண்டில், ஆசியாவின் பாரிய பொருளாதார நாடுகளாக சீனா, சப்பான், இந்தியா, தென்கொரியா மற்றும் இந்தோனேசியா போன்றவை உள்ளன.[11]
ஆசியா கண்டத்திலுள்ள நாடுகளும் துணை மண்டலங்களும்

மொழிகள்
ஆசியாவில் பல மொழிக் குடும்பங்களும், தனித்த மொழிகளும் உள்ளன. பெரும்பாலான ஆசிய நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தாயக மொழிகள் பேசப்படுகின்றன. "எத்னாலாக்" தரும் தகவல்களின்படி, இந்தியாவில் 800க்கு மேற்பட்ட மொழிகளும், இந்தோனீசியாவில் 600க்கு மேற்பட்ட மொழிகளும், பிலிப்பைன்சில் 100க்கு மேற்பட்ட மொழிகளும் பேசப்படுகின்றன. சீனாவில் அதன் பல்வேறு மாகாணங்களிலும் பல மொழிகளும், கிளை மொழிகளும் பேசப்படுகின்றன.
மதங்கள்
ஆசியத் தொன்மவியல் சிக்கலானதும் பல்வகைப்பட்டதும் ஆகும். பெரு வெள்ளம் குறித்து கிறித்தவர்களின் பழைய ஏற்பாட்டில் வரும் கதை, மெசொப்பொத்தேமியத் தொன்மமான கில்கமேசு இதிகாசத்தில் முதன்முதலாகக் காணப்படுகிறது. இந்துப் புராணங்கள் கூறும் விட்டுணுவின் மீன் அவதாரம், மனுவுக்குப் பெரு வெள்ளம் குறித்து எச்சரிக்கை செய்கிறது.
ஏறத்தாழ எல்லா ஆசிய மதங்களும் மெய்யியல் தன்மை கொண்டவை. அத்துடன், ஆசியாவின் மெய்யியல் மரபுகள் பல வகைத்தான மெய்யியல் சிந்தனைகளையும், எழுத்துக்களையும் உள்ளடக்குகின்றன. இந்திய மெய்யியல், இந்து மெய்யியல், பௌத்த மெய்யியல் என்பவற்றையும் உள்ளடக்குகிறது. இவை, பொருள்சாரா கூறுகளைத் தம்முள் கொண்டவை. அதேவேளை இந்தியாவில், பொருள் இன்பத்தை முன்னிலைப்படுத்தும் சார்வகம் போன்ற மதங்களும் உள்ளன.
ஆசியாவின் ஒரு பகுதியான மையக்கிழக்கில் தோன்றிய இசுலாம் பல ஆசிய நாடுகளில் முதன்மை மதமாக உள்ளதுடன் ஏறத்தாழ எல்லா ஆசிய நாடுகளிலும் இசுலாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர். குடியேற்றவாதக் காலத்துக்குப் பின்னர், பல ஆசிய நாடுகளில் கிறித்தவமும் பரவியுள்ளது.
ஆபிரகாமிய சமயங்கள்
யூதம், கிறித்தவம், இசுலாம் மற்றும் பகாய் சமயம் போன்ற ஆபிரகாமிய சமயங்கள் மேற்கு ஆசியாவிலேயே தோற்றம் பெற்றன. யூதம் எனும் மதம்தான் ஆபிரகாமிய சமயங்களிலேயே மிகப் பழமையானது ஆகும். இது அதிகமாக இசுரேல்லில் பின்பற்றப்படுகிறது (இது யூத மக்களின் தாய்நாடு மற்றும் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இந்த நாட்டில் ஐரோப்பியாவில் பரந்து இருந்து இங்கு வந்த யூத மக்களும் ஆசியா மற்றும் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த அங்கு முதலே இருந்த மக்களும் வாழ்கின்றனர்).[12]
கிறிஸ்தவ மதமும் ஆசியாவில் பரந்த அளவில் காணப்படுகின்ற மதமாகும். பிலிப்பீன்சு மற்றும் கிழக்குத் திமோர் போன்ற நாடுகளில் உரோமன் கத்தோலிக்கம் ஒரு முக்கிய மதமாகும்;இது முறையே இசுபானியர்களாலும் போர்த்துக்கேயராலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆர்மீனியா, சைப்பிரஸ், சியார்சியா மற்றும் வடக்கு ஆசியா ஆகிய இடங்களில் கிழக்கு மரபுவழி திருச்சபை ஒரு முக்கிய மதமாக உள்ளது.
சவூதி அரேபியாவில் உருவான இசுலாம் மதம் தான் பெரிய, மிகவும் அதிக அளவில் ஆசியாவில் பரந்து காணப்படும் மதமாகும். 12.7% அளவில் இருக்கின்ற உலக முஸ்லிம் சனத்தொகையில் தற்போது உலகில் அதிக அளவில் முஸ்லிம் மதம் பின்பற்றப்படும் நாடு இந்தோனேசியா. மேலும் முஸ்லிம் முக்கிய மதமாகப் பின்பற்றப்படுகின்ற ஆசிய நாடுகளாகப் பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம், ஈரான் மற்றும் துருக்கி. உலகில் முஸ்லிம்களின் புனித இடங்களாக, மக்கா, மதீனா மற்றும் சிறிய அளவில் எருசலேம் ஆகிய நகரங்கள் முஸ்லிம்களின் புனித இடங்களாகக் கருத்தப்படுகின்றன.
ஆசியாவில் உருவான பகாய் சமயம் ஆனது ஈரானிலிருந்து உதுமானியப் பேரரசு, நடு ஆசியா, இந்தியா, மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்குப் பக உல்லா (ஆங்கிலம்: Bahá'u'lláh) வாழ்ந்து கொண்டிருக்கையில் பரவியது. 20ம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து இந்த மதப் பரம்பல் மிக மெதுவாகவே ஆசியாவில் இடம்பெற்றது. ஏனென்றால் பல முஸ்லிம் நாடுகளில் பாகாவின் மதப்பரப்பல் செயற்பாடுகள் அடக்கி ஒடுக்கப்பட்டன.
இந்தியாவிலுள்ள மதங்கள் மற்றும் கிழக்காசிய மதங்கள்

சாதனையை நிலைநாட்டிய ஆலயம்.[13]]]
அதிகமாக அனைத்து ஆசிய மதங்களும் தத்துவ தன்மையைக் கொண்டமைந்தவை. மேலும் ஆசிய மதங்கள் ஒரு மிகப்பெரிய தத்துவக்கருத்துகள் கொண்ட கருத்துக்களையும் இலக்கியங்களையும் கொண்ட மிகப்பெரிய வட்டத்துள் அடங்குபவை. இந்திய மெய்யியல், இந்து மெய்யியல் ஐயும் பௌத்த மெய்யியலையும் தன்னகத்தே கொண்டது. இந்து சமயம், பௌத்தம், ஜைனம் மற்றும் சீக்கியம் ஆகிய மதங்கள் ஆசியாவில் குறிப்பாகத் தெற்காசியாவின் நாடான இந்தியாவில் தோற்றம் பெற்றன. கிழக்காசியாவில் குறிப்பாகச் சீனாவிலும் சப்பானிலும், கன்பூசியம், தாவோயியம் மற்றும் சென் புத்தமதம் ஆகியன தோற்றம் பெற்றன. 2012 ஆண்டு தகவல்களின் படி, இந்துமதம் சுமார் 1.1 பில்லியன் மக்களால் பின்பற்றப்படுகிறது. ஆசிய மொத்த சனத்தொகையில் 25% அளவுடைய மக்கள் இந்த மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். இந்து மதம் ஆசியாவில் காணப்படுகின்ற மதங்களில் அதிக மக்களால் பின்பற்றப்படும் இரண்டாவது மிகப்பெரிய மதமாகத் திகழ்கின்றது. எப்படிஎன்றாலும் இது தெற்கு ஆசியாவில் மிகவும் அதிக அளவில் பின்பற்றப்படுகின்ற மதமாகும். 80% சதவிகத்திற்கும் அதிகமான இந்திய மற்றும் நேபாளியம் போன்ற நாடுகளைச்சேர்ந்த மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். அத்தோடு குறிப்பிடத்தக்க அளவில் வங்காளதேசம், பாக்கித்தான், பூட்டான், இலங்கை மற்றும் பாலி ஆகிய இடங்களிலும் மக்களால் இந்துமதம் பின்பற்றப்படுகிறது. இந்தியப்பிரைஜைகள் வாழும் நாடுகளான மியான்மர், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இடங்களிலும் மக்களால் இந்துமதம் பின்பற்றப்படுகிறது.
பௌத்தமதம் மிகப்பெரிய அளவில் தென்கிழக்காசியாவிலும் கிழக்காசியாவிலும் மக்களால் பின்பற்றப்படுகிறது. இந்த இடங்களில் பலநாடுகளில் சனத்தொகை அடிப்படையில் அதிக மக்கள் பின்பற்றும் மதமாகவும் இது திகழ்கிறது. அந்த வகையில் சனத்தொகை அளவில் அதிக மக்களால் பௌத்த மதம் பின்பற்றப்படும் நாடுகளாக: கம்போடியா (96%),[14] தாய்லாந்து (95%),[15] மியான்மர் (80%-89%),[16] சப்பான் (36%–96%),[17] பூட்டான் (75%-84%),[18] இலங்கை (70%),[19] லாவோஸ் (60%-67%)[20] and மங்கோலியா (53%-93%).[21] அதிக அளவில் பௌத்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் சிங்கப்பூர் (33%-51%),[22] சீனக் குடியரசு (35%–93%),[23][24][25][26] தென் கொரியா (23%-50%),[27] மலேசியா (19%-21%),[28] நேபாளம் (9%-11%),[29] வியட்நாம் (10%–75%),[30] சீனா (20%–50%),[31] வடகொரியா (1.5%–14%),[32][33][34] ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். மேலும் சிறிய அளவில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளிலும் பௌத்த மக்கள் காணப்படுகின்றனர்.
ஜைன மதம் அதிகமாகவும் முக்கியமாகவும் இந்தியாவிலேயே பின்பற்றப்படுகிறது. அத்துடன் சிறிய அளவில் இந்தியர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளான அமேரிக்கா மற்றும் மலேசியாவிலும் பின்பற்றப்படுகிறது.
சீக்கிய மதம் வடஇந்தியாவிலும், அதிக இந்தியர்கள் வாழும் ஏனைய ஆசியாவின் பகுதிகளிலும் முக்கியமாகத் தெற்காசியாவிலும் காணப்படுகின்றது. கன்பூசியம் அதிக அளவில் சீனா, தாய்வான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளிலும் சீனமக்கள் புலம்பெயர்ந்து வாழும் இடங்களிலும் அதிகமாகப் பின்பற்றப்படுகிறது. தாவோயியம், சீனா, தாய்வான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது.
Remove ads
நவீன பிரச்சினைகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான ஆசியாவில் ஏற்பட்ட முக்கிய வெளியுறவுப் பிரச்சினைகள்
- கொரியப் போர்
- வியட்நாம் போர்
- இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு
- இந்திய சீனப் போர்
- வங்காளதேச விடுதலைப் போர்
- இந்திய பாக்கித்தான் போர், 1971
- யோம் கிப்பூர்ப் போர்
- ஈரானியப் புரட்சி
- ஆப்கான் சோவியத் போர்
- ஈரான் – ஈராக் போர்
- ஈழப் போர்
- 1991 வளைகுடாப் போர்
- ஈராக் மீதான படையெடுப்பு, 2003
- 2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள்
- சிரிய உள்நாட்டுப் போர்
- இசுலாமிய தேசப் போர்
Remove ads
ஆசிய நாடுகள்
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads