நரம்பு

From Wikipedia, the free encyclopedia

நரம்பு
Remove ads

நரம்பணுக்களின் வெளிநீட்டமாக இருக்கும் நரம்பிழைகள் (axons), பல ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, மூடப்பட்ட கட்டுக்களாக புற நரம்பு மண்டலத்தில் இருக்கையில் அவை நரம்புகள் எனப்படும். இந்த நரம்புகளே மின் வேதி கணத்தாக்கங்களை உடலின் பல பாகங்களுக்கும் கடத்துகின்றன. மைய நரம்பு மண்டலத்தில் இருக்கும் இந்த நரம்புகளை ஒத்த அமைப்புகள் tract (நரம்புப் பாட்டை) என அழைக்கப்படுகின்றது[1][2]. மேலும், நரம்புச் செல்கள், நரம்பு மண்டல அமைப்பின் செயல் அலகுகள் எனப்படுகின்றன. மனித மூளை சற்றேறக்குறைய 860 கோடி நரம்புச் செல்களை உடையது. தவிர, நியூரோகிளியல் செல்கள் அதிகமுள்ளது.[3]

Thumb
நரம்புகள் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன

நரம்பிழைகளை மூடியிருக்கும் மயலின் உறைகளை உருவாக்கும் சுவான் கலங்களும் (Schwann cells) இந்த நரம்புகளில் காணப்படும்.

Remove ads

உடற்கூற்றியல்

Thumb
நரம்பொன்றின் குறுக்கு வெட்டுத் தோற்றம்

நரம்பிழைகள் (Axons) பல ஒன்றாகக் கூட்டாகச் சேர்க்கப்பட்டு, அவற்றைச் சுற்றி உறையொன்றினால் மூடப்பட்டு, ஒரு கட்டாக அமைந்திருக்கும் நீண்ட கயிறு போன்ற அமைப்பாக இந்த நரம்புகள் காணப்படும். நரம்புகள் அனைத்தும் வெளிப்பக்கமாக இணைப்பிழையத்தினால் ஆன ஒரு அடர்த்தியான புற நரம்புறை (Epineurium) எனப்படும் உறையினால் மூடப்பட்டிருக்கும். இந்த உறைக்குக் உள்ளாக இருக்கும் நரம்பிழைகளைச் சுற்றி, தட்டையான உயிரணுக்களாலான நரம்பிழை சூழுறை (Perineurium) காணப்படும். இந்த நரம்பிழை சூழுறையானது உள்நோக்கி நீண்டு பிரிசுவர்களை ஏற்படுத்துவதால், நரம்பிழைகள் பிரிக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட நரம்பிழைக் கட்டுக்களாகக் காணப்படும். உள்ளாக இருக்கும் ஒவ்வொரு தனி நரம்பிழையையும் சுற்றியிருக்கும் உறை அக நரம்பிழையுறை (Endoneurium) எனப்படும்.

மைய நரம்புத் தொகுதியிலிருந்து புறப்படும் இந்த நரம்புகளின் இக்குறிப்பிட்ட அமைப்பானது இடையில் உடையாமல் மிக நீளமாகச் சென்று தோல், கண் போன்ற உணர்வு உறுப்புக்களையோ, தசை, சுரப்பி போன்ற வேறு செயற்படு உறுப்புக்களையோ அடையும். இந் நரம்புகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால், பொதுவாக இந்த நரம்புகள் குருதிச் சுற்றோட்டத் தொகுதியின் குருதிக் கலன்களுடன் இணைந்து உடல் பாகங்களுக்குள் செல்லும்.

Remove ads

நரம்புச் செல்லின் பகுதிகள்

மனித உடலின் நுண் அமைப்பாக விளங்கும் நரம்புச் செல் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. அவை:

  1. செல் உடலம்
  2. குறு நரம்பிழைகள்
  3. நீள் நரம்பிழை[3]

செல் உடலம்

நரம்புகளின் செல் உடலமானது ஒழுங்கற்ற வடிவம் அல்லது பன்முகச் சீரமைவற்ற அமைப்பாக உள்ளது. நரம்புச் செல் அல்லது நரம்புச் செல்லின் உடலமானது சைட்டான் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த செல் உடலத்தில் அணுக்குழைமம், நிசில் துகள்கள், செல் நுண் உறுப்புகள் போன்றவை காணப்படுகின்றன. இவற்றுள் நிசில் துகளானது புரத சேர்க்கைக்கான ரிபோசொம்களை உடையதாகக் காணப்படும்.

குறு நரம்பிழைகள்

குறு நரம்பிழைகள் டெண்டிரைட்டுகள் அல்லது டெண்டிரான் எனப்படும். இவை செல் உடலத்திலிருந்து வெளிப்புறமாக நீட்டிக் கொண்டிருக்கும் அடுத்தடுத்துக் கிளைத்தலுக்கு உள்ளான குட்டை இழைகளாகும். இவ்விழைகள் செல் உடலை நோக்கி மின்தூண்டல்களைக் கடத்துகின்றன.

நீள் நரம்பிழை

செல் உடலத்திலிருந்து உருவாக்கி மிக நீண்டுக் காணப்படும் இழை நீள் நரம்பிழை ஆகும். இந்த இழையின் முடிவில் கிளைத்துக் காணப்படும். இதன் வேறுபெயர் ஆக்ஸான் என்பதாகும்.இந்நீள் நரம்பிழை பின்முனைக் கிளைத்த, குமிழ் போன்ற அமைப்பில் முடிகின்றது. இவை நரம்புச் செல் இடைவெளிக் குமிழ்கள் எனப்படும். மேலும், இவை நரம்புக் கடத்தும் பொருள் அல்லது நரம்புச் சைகைகளைக் கடத்தும் பொருள் என்னும் வேதிப்பொருளால் நிரப்பப்பட்டுள்ளன. நீள் நரம்பிழையிலுள்ள அணுக்குழைமம் நரம்பிழைக் குழைமம் (ஆக்சோ பிளாசம்) என்றழைக்கப்படுகிறது. இந்த நரம்பிழையைச் சூழ்ந்துள்ள மையலின் என்னும் உறை பல அடுக்குகளைக் கொண்ட சுவான் செல்களால் உருவானதாகும். இதன் வெளிப்புற அடுக்கு நியூரிலேமா எனப்படும். இதன் கிளைத்த முடிவுப் பகுதிகளைத் தவிர, மற்றவற்றை நியூரிலேமா முழுவதும் போர்த்தியுள்ளது.

நீள் நரம்பிழையின்மீது மையலின் உறையால் தோற்றுவிக்கப்படும் இடைவெளிகள், ரேன்வியரின் கணுக்கள் என்றழைக்கப்படுகின்றன. இக்கணுக்களில் நியூரிலேமா தொடர்ச்சியற்றுக் காணப்படுகிறது. மையலின் உறையானது மின்தூண்டல் விரைவாகக் கடத்தப்படுவதற்கு உதவி செய்கிறது.[3]

Remove ads

நரம்புச் செல்லின் வகைப்பாடு

நரம்புச் செல் ஐவகைப்படும். அவை:

மையலின் உறை அல்லது சுரமாக்கப்பட்டவை அல்லது வெண்மை நரம்புச் செல்கள்

நீள் நரம்பிழைகள் (Axons) வெண்மையான கொழுப்பு மையலினால் மூடப்பட்டுக் காணப்பட்டால், அவை மையலின் உறை அல்லது சுரமாக்கப்பட்டவை அல்லது வெண்மை நரம்புச் செல்கள் (Neurons) என்றழைக்கப்படுகின்றன. இந்நரம்புச் செல்கள் மூளையின் வெண்மைப் பகுதியைத் தோற்றுவிக்கின்றன.[3]

மையலின் உறையற்ற அல்லது சுரம் அற்றவை அல்லது சாம்பல் நரம்புச் செல்கள்

மையலின் உறையினால் மூடப்பெறாத நீள் நரம்பிழைகள் சாம்பல் நிறத்தில் காணப்படும். இந்த நரம்பிழைகள் நியூரிலேமா செல்கள் அல்லது சுவான் செல்கள் ஆகியவற்றால் மூடப்பட்டிருக்கும். இவ்வகை நரம்புச் செல்கள் பெருமூளையின் சாம்பல் நிறப்பகுதிகளில் உள்ளன.[3]

ஒருமுனை நரம்புச் செல்கள்

வளர் கருவின் நரம்புத் திசுக்களில் ஒருமுனை நரம்புச்செல்கள் உள்ளன. இத்தகைய நரம்புச் செல்கள் ஒற்றை நீட்சி அல்லது இழையைக் கொண்டுள்ளன. இந்த நீட்சியே நீள் நரம்பிழையாகவும் குறு நரம்பிழையாகவும் செயல்புரிகின்றது.[3]

இருமுனை நரம்புச் செல்கள்

இருமுனை நரம்புச் செல்கள், உணர்வு உறுப்புகளான விழித்திரையில் காணப்படும் கூம்பு மற்றும் கோல் வடிவச் செல்களாக இருக்கின்றன. ஒவ்வோர் இருமுனை நரம்புச்செல்லும் ஒரு செல் உடலம் மற்றும் இரு நீட்சிகளை முனைகளில் கொண்டதாகக் காணப்படுகிறது. ஒரு நீட்சி நீள் நரம்பிழையாகவும் மற்றொன்று குறு நரம்பிழையாகவும் வினைபுரிகின்றது.[3]

பலமுனை நரம்புச் செல்கள்

பலமுனை நரம்புச் செல்கள் பெருமூளையின் புறணிப் பகுதியில் காணப்படுகின்றன. ஒவ்வொரு பலமுனை நரம்புச்செல்லிலும் செல் உடலம், பல குறு நரம்பிழைகள், ஒற்றை நீள் நரம்பிழை ஆகியவை உள்ளன.[3]

நரம்புச் செல் இணைப்பு

அருகருகே, காணப்படும் நரம்புச் செல்களின் குறு நரம்பிழைகளும், நரம்புச் செல் இடைவெளிக் குமிழ்களும் ஒன்றோடோன்று பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளாமல் தோன்றும். ஆன்னல், அதேசமயம், அவையிரண்டும் உடல் தொடர்பு கொண்டுள்ளன. அருகருகே அமைந்த நரம்புச் செல்களுக்கு இடையேயான தொடர்புப் பகுதி நரம்புச் செல் இணைப்பு என்றழைக்கப்படுகிறது.

நரம்புகளின் வகைகள்

கணத்தாக்கம் கடத்தப்படும் திசையையொட்டி

Thumb
உட்காவும், வெளிக்காவும் நரம்புகளைக் காட்டும் படம்

நரம்புக் கணத்தாக்கங்களை கடத்தும் திசையைப் பொறுத்து நரம்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

1. உட்காவும் நரம்புகள் (Afferent nerves) இவை உணர்வு நரம்புகள் (Sensory nerves) அல்லது வாங்கி நரம்புகள் (Receptor nerves) எனவும் அழைக்கப்படும். இவையே உணர்வு உறுப்புக்களில் இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து (Sensory neurons) கணத்தாக்கங்களை மைய நரம்புத் தொகுதியை நோக்கிக் கடத்தும் நரம்புகள் ஆகும். எடுத்துக் காட்டாக உணர்வு உறுப்பான தோலில் இருந்து தொடுதல் என்னும் உணர்வுக்கான கணத்தாக்கத்தை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும்.

2. வெளிக்காவும் நரம்புகள் (Efferent nerves) இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை தசை, சுரப்பி போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும்.

3. கலப்பு நரம்புகள் (Mixed nerves) இவை உட்காவு நரம்பிழைகள், வெளிக்காவு நரம்பிழைகள் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கொண்டிருக்கும். ஒரே கட்டாகக் காணப்படும் இவ்வகை நரம்புகள் உணர்வுத் தகவல்களை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும் அதேவேளை, மைய நரம்புத் தொகுதியிலிருந்து செயல்வினைகளுக்கான தகவல்களை செயற்படு உறுப்புக்களுக்குக் கடத்தும்.

இணைக்கப்படும் இடத்தையொட்டி

நரம்புகள் அவை மைய நரம்புத் தொகுதியில் இணைக்கப்படும் இடத்தின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

1. முண்ணான் நரம்புகள் (Spinal nerves) இவை முள்ளந்தண்டு நிரலூடாக, முண்ணாணுடன் இணைக்கப்படும். இவை தலைக்குக் கீழாக இருக்கும் உடல் உறுப்புக்களுடன் தொடர்புடையனவாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய எண்களால் இவை பெயரிடப்படுள்ளன. எந்த முள்ளந்தண்டு எலும்பினூடாக முண்ணாணுடன் இணைக்கப்படுகின்றதோ, அந்தப் பெயரினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. 31 வலது-இடது சோடி நரம்புகள் இவ்வகையைச் சார்ந்தவை. இவற்றில் 8 சோடி கழுத்து முண்ணாண் நரம்புகளும் (C1-C8), 12 சோடி நெஞ்சு முண்ணான் நரம்புகளும் (T1-T12), 5 சோடி நாரி முண்ணாண் நரம்புகளும் (L1-L5), 5 சோடி திரு முண்ணாண் நரம்புகளும் (S1-S5), 1 சோடி குயிலலகு முண்ணான் நரம்புகளும் அடங்கும். இந் நரம்புகள் யாவும் புற நரம்புத் தொகுதியைச் சார்ந்ததாக இருக்கும்.

2. மண்டை நரம்புகள் (Cranial nerves) இவை தலையிலிருக்கும் பகுதிகளுடன் தொடர்புடையனவாக இருப்பதுடன் மூளையுடன், முக்கியமாக மூளைத் தண்டுப் பகுதியுடன் இணைந்திருக்கும். 12 சோடி நரம்புகள் உரோம எண்களால் அடையாளப்படுத்தப்படும். அத்துடன் மேலதிகமாக 0 என்ற எண்ணால் அடையாளப்படுத்தப்படும் ஒரு சோடி நரம்புகளும் இருக்கின்றன. 0 உள்ளிட்டம் முதல் மூன்று சோடி நரம்புகளும் பெருமுளைப் பகுதியிலிருந்தும், ஏனைய 10 சோடி நரம்புகளும் மூளைத் தண்டுப் பகுதியிலிருந்தும் வெளியேறும். பல நேரங்களில், இந்த நரம்புகள் தொடர்பு கொள்ளும் குறிப்பிட்ட உறுப்பின் அடிப்படையில், விளக்கமான பெயரீட்டையும் பெறுவதுண்டு. எ.கா. கண் நரம்பு, முக நரம்பு இவற்றில் கண் நரம்புகள் (மண்டை நரம்பு II) தவிர்ந்த ஏனைய நரம்புகள் யாவும் புற நரம்புத் தொகுதியைச் சாரும்.

Remove ads

முகநரம்பு பாதிப்பு

முகநரம்பு பாதிப்பு (பெல்ஸ் பால்ஸி) என்பது முகத்தின் ஒரு பக்க தசைகள் வலுவிழந்து போவதாகும். இதன் காரணமாக, ஒரு பக்க தசைகளைக் கட்டுப்படுத்தும் முகநரம்பு பாதிக்கப்பட்டு இந்தப் பக்க முகம் தளர்ந்து, தொய்வாக இறங்கி விடுகின்றது. இப்பாதிப்பினால் நாக்கின் சுவை உணர்வு செயலிழந்து காணப்படுகிறது. மேலும், இத்தகு பாதிப்பு திடீரென ஏற்பட்டுப் பின், தானாகவே சரியாகி விடுவதுமுண்டு. ஹெர்பெஸ் வைரஸ் என்னும் கிருமியின் தாக்கத்தால் முகநரம்பு பாதிப்பு நோய் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டோரின் முகநரம்பு வீங்கிக் காணப்படுகின்றது.[4]

முகநரம்பு பாதிப்பின் அறிகுறிகள்

முகநரம்பு பாதிப்பு நோயின் அறிகுறிகள் பலவகைப்படும். அவை:

  1. திடீரென முகக் கோணல், தொய்வு ஆகியவை ஏற்படுதல்.
  2. பாதிக்கப்பட்ட பக்க கண்ணை மூட இயலாமை.
  3. கண்ணில் அதிகளவு நீர் வடிதல் மற்றும் கண் வறண்டு போதல்.
  4. சுவை அறிய முடியாமை.
  5. காது மற்றும் காதுக்குப் பின்னால் வலி உண்டாதல்.
  6. பாதிக்கப்பட்ட பக்கம் உணர்ச்சியற்று இருத்தல்.
  7. ஒலிச்சத்தம் தாளாதப்போக்கு.

முகநரம்பு பாதிப்பென்பது ஒரு பக்க முழுமைக்கும் அல்லது பகுதி அளவிற்கும் தோன்றக்கூடும்.[4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads