நத்தத்தம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நத்தத்தம் என்பது மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று.
நத்தத்தனார் என்னும் புலவர் இயற்றிய நூல் நத்தத்தம். யாப்பருங்கல விருத்தியுரை இப் புலவரை நற்றத்தனார் என்றும் குறிப்பிடுகிறது. எனவே இந்த நூலை நற்றத்தம் என்றும் குறிப்பிடுகின்றனர், இந்த நூலுக்கு அடிநூல் என்னும் பெயரும் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
தத்தனார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் சங்ககாலத்தில் பலர் இருந்தனர். இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார், கணக்காயன் தத்தனார், குழற்றத்தனார், நெய்தல் தத்தனார், வடநெடுந் தத்தனார், விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் ஆகியோர் அவர்கள். இந்த நத்தத்தனார் சங்ககால நத்தத்தனார் அல்லர். பிற்காலத்தவர்.
இந்த நூலின் நூற்பாக்கள் சிலவற்றை யாப்பருங்கலம் என்னும் நூலுக்கு உரை எழுதியுள்ள விருத்தியுரை ஆசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார். இந்த மேற்கோள் நூற்பாக்களை அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி திரட்டி மறைந்துபோன தமிழ்நூல்கள் என்னும் தனது நூலில் தந்துள்ளார். இவரது தொகுப்பில் 24 நூற்பாக்கள் உற்றன.
யாப்பிலக்கணம் கூறும் இந்த நூல் தொல்காப்பியத்தின் வழிநூல். இந்தூலில் காணும் புதுமைகளில் சில:
- அளபெடை என்பது செய்யுள் தொடைக்கு மட்டுமே வரும். (நூற்பா 1)
- பாடலின் ஓர் அடியில் நான்கு சீர்களிலும் எதுகையோ, மோனையோ ஒன்றி வருவது இரட்டைத்தொடை எனப்படும். (15)
- கலித்தளையில் நேர்-ஈற்று இயற்சீர் (தேமா வாய்பாட்டுச் சீர்) வராது (22)
- யாப்பு என்பது அடி, தொடை, தூக்கு என்னும் மூன்றையும் இணைத்துப் பார்ப்பது. (4)
தொல்காப்பியர் யாப்பின் உறுப்புகளை 26 என்றும், நூலின் அழகை 8 என்றும் வகைப்படுத்திக் காட்டுகிறது. தொல்காப்பியர் கூறும் 26 உறுப்புகளில் பா, தூக்கு என்பவை வெவ்வேறானவை. இந்த நூல் ‘பா என மொழியினும் தூக்கினது பெயரே’ எனக் குறிப்பிடுகிறது.
Remove ads
கருவிநூல்
- மயிலை சீனி வேங்கடசாமி, மறைந்துபோன தமிழ்நூல்கள், 2001
- தமிழ் இலக்கண நூல்கள், ச.வே. சுப்பிரமணியன் தொகுப்பு, 2007
- யாப்பருங்கலம் Madas Government Oriental Manuscripts Series No. 66 - 1960
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads